Home Uncategorized விஸ்வநாத் & சன்ஸ் சினிமா விமர்சனம்

விஸ்வநாத் & சன்ஸ் சினிமா விமர்சனம்

விஸ்வநாத் தமிழ்நாட்டின் பெரும் தொழிலதிபர். திருமண பந்தத்தை விரும்பாதவர். தன் தாயின் விருப்பத்துக்காக, வெளிநாட்டில் வசிக்கும் தமிழ்ப் பெண் ஒருவரை வாடகைத் தாயாக்கி குழந்தை பெறுகிறார். ஒரு கட்டத்தில் அந்த வாடகைத் தாய் தன் மூலம் பிறந்த குழந்தையுடன் காலம் முழுக்க சேர்ந்து வாழ விரும்புகிறார்; விஸ்வநாத்தை காதலிக்கவும் செய்கிறார். விஸ்வநாத் அவளிடம், ‘எனக்காக குழந்தை பெற்றுக் கொடுப்பதற்கு பணம் கொடுத்து விட்டேன்; நமக்குள் டீலிங் அவ்வளவுதான். நீ கிளம்பு’ என்கிறார். வாடகைத் தாய் மறுக்கிறாள். அதனால் உருவாகும் பிரச்சனைகள் எமோஷ்னல் எபிசோடுகளாகவும் கலகலப்புக்கு பஞ்சமில்லாத காட்சிகளாகவும் விரிகின்றன.
பணத்துக்காக வாடகைத் தாயாக மாறியவருக்கு குழந்தை மீது பிரியம் உருவாகிற சந்தர்ப்ப சூழ்நிலை, விஸ்வநாத் மீது காதல் உருவாகிற தருணங்கள் என திரைக்கதையில் உயிரோட்டம் அதிகம்.
விஸ்வநாத் திருமணத்தை விரும்பாதவராக இருப்பதற்கும், வாடகைத் தாயின் காதலை ஏற்க மறுப்பதற்கும் வலுவான காரணம் உண்டு… இயக்கம் வெங்கட் அல்லூரி
விஸ்வநாத்தாக சூர்யா. பல்லாயிரம் கோடிக்கு அதிபதி என்பதை ஸ்டைலிஷ் லுக் காட்டிவிட கம்பீரத்தை கச்சிதமாக தன் உடல்மொழியில் கொண்டு வந்திருக்கிறார்.  தாய்ப்பாசத்திற்கு கட்டுப்படுபவராக, அன்பைக் காட்டுவதில் அடக்கி வாசிப்பவராக, தன்னைக் காதலிக்கும் பெண்ணின் எதிர்காலம் மீது அக்கறை காட்டுபவராக நடிப்பு மனதில் நிறைகிறது. ஹூயூமரிலும் அலட்டலில்லாமல் ஸ்கோர் செய்கிறார். நடனத்தில் எனர்ஜி எக்கச்சக்கம்.
முந்தைய படங்களில் வெளிப்படுத்தி ரசிக்க வைத்த குறும்புத்தனம், கோணங்கிச் சேட்டைகளுக்கு மீண்டும் வாய்ப்பு. அதை சரியாகப் பயன்படுத்தி அப்ளாஸ் பெறுகிறார் வாடகைத் தாயாக வந்து, தன்னைவிட 20 வயது அதிகமுள்ள ஹீரோவைக் காதலிக்கும் மமிதா பைஜூ. சென்டிமென்ட் காட்சிகளில் பங்களிப்பு மீட்டருக்குள் அடங்குகிறது. அம்மணி ஆட்டத்திலும் அசத்துகிறார்.
தன் வாரிசுக்கு திருமணம் செய்து பார்த்துவிட வேண்டும்; பாட்டியாகி பேரப் பிள்ளைகளைக் கொஞ்ச வேண்டும் என்ற நியாயமான ஆசைகள் கொண்ட பெண்மணியாக கலையரசி ராதிகா. மேடத்தின் அட்ராசிடிகள் கலகலப்புக்கு கேரண்டி. பாச நேசப் போராட்டங்களில் அனுபவ நடிப்பு தெரிகிறது.
காமெடி கலாட்டாக்களில் சுனிலுக்கு கணிசமான சான்ஸ் தந்திருக்கிறது ஸ்க்ரீன்பிளே. ரவீனா டாண்டன், ராஜீவ் மேனன், நாசர், ஹர்ஸா செமூடு உள்ளிட்டோருக்கு கவனிக்க வைக்கும் காட்சிகள் உண்டு. காளி வெங்கட், பவானி ஸ்ரீ, ஜார்ஜ் மரியான், தீபா சங்கர் உள்ளிட்டோர் வந்து போகிறார்கள். மேத்யூவர்கீஸ், ஸ்ரீஜாரவி, ரகுபாபு, செல்முருகன் என திரை முழுக்க நிரம்பியிருக்கிறது நட்சத்திரக் கூட்டம்.
காட்சிகள் அத்தனையிலும் இருக்கிற பிரமாண்டத்தை பலமடங்கு பெருக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் நிமிஷ் ரவி.
ஜி.வி. பிரகாஷ் இசையில், சுப்லாக்ஷினி பாடும் ‘பட்டாம்பூச்சி’ பாடல் குதூகல உணர்வைத் தூண்டுகிறது. பின்னணி இசையில் கதையோட்டத்தின் தன்மைக்கேற்ப ஏறி இறங்கியிருக்கிறது பின்னணி இசை.
கதைநாயகன் துப்பாக்கி சுடுதலில் ஒலிம்பிக் சாம்பியனாக இருப்பது, ஆக்சனில் அதிரடி அட்டகாசம் செய்வது என கலந்திருக்கும் காட்சிகள் ஆடியன்ஸ் மனதில் ‘இந்த கதையில் இதெல்லாம் எதற்காக?’ என்ற கேள்வி உருவாக உதவும். மற்றபடி பெரிதாய் பயனில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்