ராஜா கருப்பசாமி இயக்கியுள்ள இப்படத்தில் ரிஷிகாந்த் மற்றும் அனிஷ்மா அனில்குமார் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள திரைப்படம் ‘மொத ராத்திரி.’
கடந்த ஆகஸ்ட் 21-ம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகி வெற்றி பெற்ற இந்த திரைப்படத்தின் வெற்றிக்கு துணை நின்றவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் நடைபெற்றது.

நிகழ்வில் இயக்குநர் ராஜா கருப்பசாமி, “என் கதையை நம்பி வாய்ப்பளித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திற்கும், ஒளிப்பதிவாளர் தினேஷ் கருப்புசாமி அண்ணனுக்கும், என் படக்குழுவினருக்கும் நன்றி. அனைத்து திரையரங்குகளிலும் ஹவுஸ்ஃபுல் என்பது மகிழ்ச்சி. அனிஷ்மா திறமையான நடிகை. ஆறு வருடத்திற்கு முன்னால் இந்த கதையை எடுத்துக்கொண்டு அலைந்த போது எல்லோரும் சொன்ன ஒரே வார்த்தை ரிஷிகாந்தை மாற்ற வேண்டும் என்பதுதான். ஆனால், இப்போது தமிழ் சினிமாவிற்கு ஐடியாலஜியோடும் சமூகப் பொறுப்போடும் ஒரு ஹீரோ கிடைத்துவிட்டார். என் குடும்பத்திற்கும் நண்பர்களுக்கும் நன்றி. சின்ன படங்களுக்கு எப்போதுமே உங்கள் ஆதரவு தேவை. அது மட்டும் தான் தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும்”.
நடிகர் ரிஷிகாந்த், ” உங்கள் வீட்டு பையனாக நினைத்து எனக்கும் இந்த படத்திற்கு ஆதரவு தந்த ஊடகத்துறையினருக்கும் ரசிகர்களுக்கும் நன்றி. ஆறு வருடங்களாக இந்த படத்தை நானும் தம்பி ராஜாவும் சுமந்து கொண்டிருந்தோம். எங்களை நம்பி வாய்ப்பளித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திற்கு நன்றி. குடும்பத்தோடு அனைவரும் திரையரங்குகளுக்கு வந்து பார்த்து சிரித்து மகிழும்படியான ஒரு படத்தை உருவாக்க வேண்டும் என்று நினைத்தோம். அது இன்று நடந்திருக்கிறது. படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி.’
நடிகர் பகவதி பெருமாள், “சினிமாவில் 100 பேர் ஜெயித்தால் லட்சம் பேர் காணாமல் போகிறார்கள். இது போன்ற நல்ல படங்கள் வெளியாகி வெற்றி பெற தயாரிப்பாளர்கள்தான் முக்கிய காரணம். அந்த வகையில், இந்த கதையை தேர்ந்தெடுத்து தயாரித்த மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திற்கு நன்றி. பலருடைய வாழ்க்கையில் இந்த படம் ஒளி ஏற்றி இருக்கிறது. சின்ன பட்ஜெட்டில் படம் செய்பவர்களுக்கு தான் மிகப்பெரிய பொறுப்பு உள்ளது. அதை உணர்ந்து இப்போது பல படங்கள் வெளியாகிறது. உங்கள் ஆதரவு நிச்சயம் வேண்டும்”.


