Home பொது பூரி ஜெகநாதர் கோயிலில் கிடைத்த இரண்டு விஷயங்கள்… -கஸ்தூரி வீடு பட விழாவில் படம் உருவான...

பூரி ஜெகநாதர் கோயிலில் கிடைத்த இரண்டு விஷயங்கள்… -கஸ்தூரி வீடு பட விழாவில் படம் உருவான விதம் குறித்து விரிவாகப்  பேசிய இயக்குநர் விஜய் ஆர்.ஆனந்த் 

விஜய் ஆர். ஆனந்த் இயக்கத்தில் சமுத்திரக்கனி, யோகி பாபு, தம்பி ராமையா, டேவிட் டிட்டோ, தனுஜா, ஸ்ரீ வர்ஷத் ஆனந்த் நடித்துள்ள படம் ‘கஸ்தூரி வீடு.’ இந்த படத்தின் பாடல் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னை வடபழனி கமலா திரையரங்கில் நடைபெற்றது.

நிகழ்வில் படத்தின் இயக்குநர் விஜய் ஆர்.ஆனந்த் பேசும்போது,
“நான் நிர்வாகத் தயாரிப்பாளராக இருந்திருக்கிறேன். ஒரிசாவுக்கு ஒரு முறை படப்பிடிப்புக்குச் சென்றபோது,
அந்த ஓட்டலில் தமிழ் சேனலே வரவில்லை. ஒரே ஒரு தமிழ் சேனல் மட்டும் வந்தது .அதை ஆன் செய்த போது சூப்பர் ஸ்டார் நடித்த ‘வெற்றி நிச்சயம் ,இதுவேத சத்தியம் ‘என்ற பாடல் ஒலித்தது .இடையில் ஒரு விளம்பரம் வந்தது.
அது ஒரு விழிப்புணர்வு விளம்பரம் .அதில் நன்றாக உடையணிந்து ஸ்டைலாக ஒரு நடிகர் -இயக்குநர் வந்தார். அவரை நிறைய படங்களில் பார்த்திருக்கிறோம். அவர்தான் சமுத்திரக்கனி அவர்கள். அவரை வைத்து ஏன் ஒரு கதை செய்யக்கூடாது என்று நினைத்தேன்.இந்தக்கதை தோன்றியது.
ஒரு நாள் பூரி ஜெகநாதர் கோயிலில் இரண்டு விஷயங்கள் கிடைத்தன. ஒன்று : படத்தின் தலைப்பு கஸ்தூரி என்பது, அந்தப் பெயரில் திரைப்படமாக எடுப்பது, இன்னொன்று: ஹாரர் பேய்ப் படமாக எடுப்பது என்று, இப்படி இரண்டு விஷயங்கள் கிடைத்தன.
முதலில் 50 ஆயிரம் ரூபாய் வைத்து ஆரம்பிக்கப்பட்ட படம் தான் இந்த ‘கஸ்தூரி வீடு’.
இந்த படத்திற்கு சமுத்திரகனி சார் வந்த பிறகு , பெரியபடமாக மாறிவிட்டது. ஆரம்பத்தில் அவரை எப்படி அணுகுவது அவரிடம் எப்படி வேலை வாங்குவது என்று எனக்குப் பயமாக இருந்தது.தயக்கமாக இருந்ததது.ஆனால் அனைத்தையும் அவர் மாற்றி அற்புதமாக நடித்துக் கொடுத்தார்.
படத்தின் கதாநாயகன் பற்றி சொல்ல வேண்டும்,அவரைப் பார்த்தபோது ‘வருஷம் 16’கார்த்திக் தான் ஞாபகத்துக்கு வந்தார்.அவர் அற்புதமான திறமைசாலி. சொல்வதை எளிதாகப் புரிந்து கொண்டு சரியாக நடித்துக் கொடுப்பார்.
கதாநாயகி தனுஜா எனது நண்பரின் மகள். அவர் எனது குழந்தை போன்றவர். காலம் கொண்டு வந்து சேர்த்திருக்கிற குழந்தை. நடிக்கும் போது அவருக்கு எனக்கும் நல்லிணக்கம் வந்து அற்புதமாக நடித்துக் கொடுத்தார். நிறைய சிரமமான காட்சிகளை நடித்துக் கொடுத்தார்.பயந்து அழும் காட்சிகளில் கிளிசரின் போடாமலேயே நடித்தார். எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது.
படம் ஆரம்பித்ததை விட முடித்தபோது பெரிதாகி செலவு நான்கு மடங்கு ஆகிவிட்டது . பலரும் இவ்வளவு செலவு தேவையா என்றார்கள்.ஆனால் படம் நன்றாக இருக்க வேண்டும் என்றால் செலவு செய்யத்தான் வேண்டும் என்று நான் கூறுவேன்.இந்தப் படத்திற்கு அனைவரும் ஆதரவு கொடுங்கள்.இந்த விழாவுக்கு வந்து சிறப்பித்த அனைவருக்கும் நன்றி” என்றார்.
சமுத்திரக்கனி பேசும் போது,
“இயக்குநர் நன்றி கூறிய அத்தனை பேருக்கும் நானும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் ,ஒரு நல்ல பயணம் இது. விஜய் ஆனந்தை சந்தித்து பேசும் போது சொன்ன விஷயங்கள் அவரோடு பயணப்பட்டது தயாரிப்பாளர் மேடம் அவர்களோடு பயணப்பட்டது எல்லாமே அற்புதமான விஷயம்.ஒவ்வொரு முறையும்ஒவ்வொரு புதுப் புது மனிதர்களோடு பயணம்செய்வது இறைவன் நமக்குக் கொடுத்த கொடை என்றுநினைக்கிறவன் நான்.
புதுப்புது மனிதர்களை பார்க்க வேண்டும். புது புது படைப்பாளிகளுடன் பயணம் செய்வது எனக்கு அவ்வளவு பிடிக்கும்.அப்படித்தான் இந்த படத்திற்கும் நிறைய பேர் உழைத்திருக்கிறார்கள். இந்த விழாவிற்கு நான் நேற்று இரவு படப்பிடிப்பு முடிந்து விமானம் பிடித்து வந்திருக்கிறேன்.இந்த மாதிரிப் படங்களுக்குத்தான் ஒரு முகம் வேண்டும். அப்படி எல்லோரும் விரும்புவார்கள். யாராவது ஒருவர் முன்னாடி வந்து நிற்க வேண்டும்.அப்படி ஒரு ஆசை இருக்கும்.நான் இப்போது ஒரு படம் எடுத்திருக்கிறேன். அதற்கு நான் இன்னொரு முகத்தைத் தேடிக் கொண்டிருக்கிறேன்.நான் யாரைத் தேடுகிறேனோ அவர் ஒரு படம்எடுத்தால் அவர் இன்னொரு முகத்தைத் தேடுவார்.
இப்படி மாறி மாறித் தேடிக்கொண்டே இருப்பது தான் நம் பயணமாகவே இருக்கும்.
இயக்குநர் விஜய்யிடம் ஒன்று சொல்வேன்.அதுதான் நிஜம் .நாம் சரியாக உழைத்தால் ஒரு மேஜிக் நடக்கும்.அந்த மேஜிக் உள்ளே நாமெல்லாம் இருப்போம். அதை மட்டும் நம்புவோம். யாரும் வந்து எந்தப் படத்தையும் தூக்கி எல்லாம் கொண்டு வந்து நிறுத்திட முடியாது. நம் வேலையை நாம்செய்வோம்; 100 சதவீதம் செய்வோம் .உண்மையாக உழைப்போம். மக்களுக்கு ஒரு நல்ல விஷயத்தைக் கொண்டு போய் சேர்க்க வேண்டும்.
என் குருநாதர் சொல்வார் “நீ உண்மையா உழைச்சிட்டின்னா அது திரையில தெரியும். உன் உழைப்புதான் ஒரு பெரிய அரணா நிக்கும்”னு சொல்லுவாரு .அதற்கு ஒரு உதாரணம்தான் ‘மண்டாடி’ சூரியோட திரைப்படம்.அவருடைய உழைப்புதான்,அந்த இயக்குநரும்அதில் பங்கேற்ற தொழில்நுட்பக் கலைஞர்களுடைய உழைப்பும் , அந்த அசுர உழைப்புதான் அந்தப் படத்துக்கான ஒரு பெரிய முகமா வந்து நிற்கும். அப்படி நம்முடைய உழைப்பை 100% நாம் போட்டால் போதும்.
இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெற இறைவனை நான் பிரார்த்திக்கிறேன். வாழ்த்துக்கள்! தயாரிப்பாளர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் !இதில் பணிபுரிந்ததொழில்நுட்பக் கலைஞர்கள் நடிகர் நடிகையர்அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்,வெல்வோம்!என்றார்.
படத்தில் நடித்துள்ள நடிகர் டேவிட் டிட்டோ பேசும்போது,
“நான் இங்கே வந்திருப்பதற்கும் படத்தில் நடித்திருப்பதற்கும் ஒரே காரணம் இயக்குநர் தான். அவர் இல்லாமல் நான் இல்லை.அவருக்கு முதலில் என் நன்றி.இந்தப் படத்தில் நான் சிரமப்பட்டு நடித்ததாகக் கூறினார். ஆனால் இந்தப் படத்திற்காக இயக்குநர் பட்ட சிரமங்கள் ஏராளம். அதற்கு முன்பு இதெல்லாம் சாதாரணம்.
இந்தப் படத்திற்காக பேய் போல மேக்கப் போட்டு இருந்த பெண்ணைப் பார்த்து நான் பயந்து விட்டேன்,அந்த அளவுக்கு தத்ரூபமாக இருந்தது. ஒரு வீட்டில் படப்பிடிப்பிற்காகச் சென்றோம். அது நிஜமான பேய் வீடு என்று அவர் கூறிய போது எனக்கு இன்னும் பயமாக இருந்தது.படத்திற்கு அனைவரும் ஆதரவு கொடுங்கள்” என்றார்.
படத்தின் நாயகி தனுஜா பேசும்போது,
“ஒன்றரை ஆண்டுக்கு முன்பு இதே கமலா தியேட்டரில் என்னுடைய இன்னொரு படத்திற்காக வந்திருந்தேன்.அப்போது ஒரு பகுதியாக இருந்த எனது பாத்திரம் இப்போது முழுப் படத்திலும் வருவது போல் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.இன்று மீண்டும் வந்திருக்கிறேன் காரணம் எனது அப்பா.
நான் நல்ல வேடங்களில் நடிப்பதற்குத் தயாராக இருக்கிறேன். வாய்ப்புகள் கொடுக்க வேண்டும். இதில் படம் முழுக்க நான் வருவது போல் கிடைத்திருக்கும் வாய்ப்புக்கு நன்றி.
எனக்கான கதாபாத்திரம் அமைந்திருப்பது மகிழ்ச்சி. சமுத்திரகனி சார் மரியாதைக்குரிய நபர்.அவருடன் நடித்ததில் மகிழ்ச்சி.படப்பிடிப்பு அனுபவம் மறக்க முடியாததாக இருந்தது. அனைவரும் இந்த படத்திற்கு ஆதரவு கொடுங்கள் “என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்