கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள ‘டோரதி’ செப்டம்பர் 25 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. முன்னதாக ப்ரீ ரிலீஸ் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது.
நிகழ்வில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் பேசியதாவது, “எனக்கு சினிமா மீது ஆர்வம் வர காரணம் நான் பிறந்து வளர்ந்த மதுரை மண் தான். சினிமா ரசனைக்கு பெயர் போன ஊர் அது. என்னுடைய படங்களிலேயே இறைவி தான் மிகப்பிடித்தது என பலர் சொல்லி கேட்டிருக்கிறேன். அதற்கு காரணம் அது மனித உணர்வுகளுடன் நெருக்கமாக உள்ளது. என்னுடைய சொந்த அனுபவத்திலிருந்து வந்த கதையும் கூட. ‘இறைவி’யை விட உணர்வுபூர்வமான கதை ‘டோரதி’. இந்த படம் தொடங்கியதில் இருந்து ஒரு மேஜிக் போல உள்ளது. படம் பார்த்த எல்லோரும் பாராட்டி வருகின்றனர். கலை இயக்குநர், எடிட்டர் என படத்தின் ஒவ்வொரு தொழில்நுட்ப குழுவினரும் திறமையானவர்கள். எல்லோரும் எல்லா வேலையும் இந்த படத்தில் பார்த்தோம். ராஜா சார் இசை கேட்டு வளர்ந்தவர்கள் நாங்கள். இந்தப் படத்திற்கு மிகப்பெரிய ஆசீர்வாதம் ராஜா சாரின் இசைதான். டோரதி படத்தின் ஆன்மாவாக இருப்பதற்கு நன்றி சார். சனந்த் திறமையான நடிகர். ரிஷியை ஆடிஷன் செய்துதான் எடுத்தோம். சனந்தும் ரிஷியும் நிஜமாகவே நண்பர்கள் என்பதால் நன்றாகவே திரையில் வொர்க்கவுட் ஆனது. கதை கேட்டதும் கீர்த்தி சுரேஷ் உடனே ஒத்துக்கொண்டார். அவரது திரையிருப்பு படத்திற்கு இன்னும் அதிக வேல்யூ கொடுத்தது. எல்லா நடிகர்களும் சிறப்பாக நடித்துள்ளனர். இது என்னுடைய 10ஆவது படம். உங்கள் அனைவரது ஆதரவுக்கும் நன்றி”.
நடிகர் ரிஷிகாந்த், “என்னை நம்பி இந்த வாய்ப்பு கொடுத்த கார்த்திக் சுப்புராஜ் சாருக்கு நன்றி. ‘டோரதி’ வரும் 25 ஆம் தேதி வெளியாகிறது. இந்தப் படத்திற்காக மதுரையில் இரண்டு மாதம் பயிற்சி எடுத்தோம். கார்த்திக் சார் எங்களை மிகத் திறமையாக வழி நடத்தினார். இந்த படத்திற்கு எங்களுக்கு பாராட்டு கிடைத்தால் அது முழுக்க முழுக்க அவரையை சாரும். படக்குழுவினர் அனைவரும் கடுமையாக உழைத்து உள்ளனர். கீர்த்தி மேமின் நல்ல மனதிற்கு அவர் இன்னும் பல விருதுகள் பெறுவார். சனந்தும் நானும் பல வருட நண்பர்கள். நாங்கள் இணைந்து நடித்திருப்பது மகிழ்ச்சி. ‘மொதராத்திரி’ படத்திற்கு முன்பே ‘டோரதி’ நடித்து முடித்து விட்டேன். ராஜா சாரின் இசையில் நடிப்பேன் என்ற கனவில் கூட நினைக்கவில்லை. எல்லாவற்றிற்கும் நன்றி”.
நடிகர் சனந்த், ” டொரன்டோ பிலிம் பெஸ்ட்டிவலில் படம் பார்த்த நிறைய பேர் பாராட்டினார்கள். அதோடு என்னை கட்டி பிடித்தார்கள். அது என் வாழ்வின் சிறப்பான தருணம். எங்கள் அணியினர் அனைவருக்கும் இது ஸ்பெஷலான படம். ரிலீஸூக்கு பின் உங்களுக்கும் இது ஸ்பெஷல் படமாக மாறும். இந்த படத்தின் மூலம் கீர்த்தி சுரேஷ் நல்ல நண்பராகியுள்ளார். கார்த்திக் அண்ணனோடு பணிபுரிந்தது மீண்டும் ஷார்ட் ஃபிலிம் காலத்திற்கு சென்றது போல இருந்தது. அவர் என் மீது வைத்துள்ள நம்பிக்கையால் தான் எனக்கு வாய்ப்புகள் கொடுக்கிறார். அந்த நம்பிக்கையை எப்போதும் காப்பாற்ற வேண்டும். இந்தப் படத்தை வெளியிடும் சக்தி ஃபிலிம் ஃபேக்டரிக்கும் இந்த படம் ஸ்பெஷலானதாக இருக்கும். ராஜா சார் இசையில் நடிப்பேன் என்று கனவில் கூட நினைத்ததில்லை. இப்பொழுது அவரது பாடலுக்கு நடனமாடி அவருடன் ஒரு பாடலிலும் நடித்து விட்டோம். வரும் 25 ஆம் தேதி படம் வெளியாகிறது. உங்கள் ஆதரவு தேவை”.