Home பொது சிவகார்த்திகேயனின் புதிய படம் பூஜையுடன் துவக்கம்!

சிவகார்த்திகேயனின் புதிய படம் பூஜையுடன் துவக்கம்!

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக தொடர்ந்து ஜொலித்து வரும் சிவகார்த்திகேயன், வித்தியாசமான புதிய கதாபாத்திரங்களை தேர்வு செய்து தனது நடிப்புத் திறமையை அடுத்தடுத்த கட்டங்களுக்கு எடுத்துச் சென்று வருகிறார். தற்போது முற்றிலும் புதிய அவதாரத்தில் நடிக்கும் திரைப்படம் SK27. இப்படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் சார்பில் டி.ஜி. தியாகராஜன் வழங்க, செந்தில் தியாகராஜன், அர்ஜுன் தியாகராஜன் மற்றும் சித்தார்த் தயாரிக்கின்றனர்.இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு, மிரட்டலான போஸ்டருடன் இன்று வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
சிவகார்த்திகேயனின் திரைப்பயணத்தில் ஒவ்வொரு படமும் அவரை ஒரு புதிய பரிமாணத்தில் ரசிகர்களிடம் கொண்டு சேர்த்து வருகிறது. ‘அமரன்’ படத்தில் மேஜர் முகுந்த் வரதராஜனாக உணர்வுப்பூர்வமான நடிப்பை வழங்கிய அவர், தொடர்ந்து மாறுபட்ட கதைக்களங்களையும் ஜனரஞ்சங்கமான திரைப்படங்களையும் தேர்வு செய்து வருகிறார். அந்த வரிசையில் SK27 படமும் சிவகார்த்திகேயனின் திரைப்பயணத்தில் புதிய களத்தை அறிமுகப்படுத்தும் படைப்பாக அமையும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
தேசிய விருது பெற்ற இயக்குநருடன் புதிய கூட்டணி!
SK27 படத்தை ‘பார்க்கிங்’ திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் ராம் குமார் பாலகிருஷ்ணன் எழுதி இயக்குகிறார். எளிமையான ஒரு பிரச்சினையை மையமாக வைத்து அழுத்தமான திரைக்கதையையும், நுணுக்கமான கதை சொல்லும் முறையையும் ‘பார்க்கிங்’ படத்தில் வெளிப்படுத்திய ராம் குமார் பாலகிருஷ்ணன், அப்படத்திற்காக தேசிய விருதையும் பெற்றுள்ளார். தற்போது சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி நட்சத்திரத்துடன் அவர் இணைந்திருப்பது SK27 படத்தின் மீது கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகார்த்திகேயன் – கயாது லோகர் முதல் கூட்டணி!
SK27 படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கயாது லோகர் நடிக்கிறார். தென்னிந்திய சினிமாவில் இளம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் கயாது லோகர், தொடர்ந்து முக்கியமான திரைப்படங்களில் நடித்து வருகிறார். சிவகார்த்திகேயன் – கயாது லோகர் இருவரும் முதன்முறையாக இணையும் திரைப்படம் என்பதால், இந்த புதிய ஜோடியை திரையில் காண ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
படத்தின் அறிவிப்பு போஸ்டர் மையத்தில் சிவப்பு நிற கார், அதைச் சுற்றி திரண்டு வரும் ஏராளமான மக்கள், புகை மற்றும் ஒளியமைப்பு என போஸ்டர் முழுவதும் பரபரப்பான காட்சியமைப்பு இடம்பெற்றுள்ளது. சிவப்பு, பச்சை, கருப்பு நிறங்களின் கலவையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த போஸ்டர், SK27 ஒரு வித்தியாசமான ஆக்ஷன் பின்னணியைக் கொண்டிருக்குமா என்ற கேள்வியையும் ரசிகர்கள் மத்தியில் எழுப்பியுள்ளது.
வலுவான தொழில்நுட்பக் கூட்டணி!
SK27 படத்தின் தொழில்நுட்பக் குழுவிலும் பல முக்கியமான கலைஞர்கள் இணைந்துள்ளனர். எடிட்டராக தேசிய விருது பெற்ற ஆர். கலைவாணன், ஒளிப்பதிவாளராக ஓம், கலை இயக்குநராக ராஜீவன், ஆடை வடிவமைப்பாளராக பிரவீன், ஸ்டண்ட் மாஸ்டராக ஸ்டீவ்ன் குமார், போஸ்டர் டிசைனராக டூனே ஜான் ஆகியோர் பணியாற்றுகின்றனர்.
புதிய கூட்டணி, தேசிய விருது பெற்ற இயக்குநர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்களிப்பு என SK27 தொடக்கத்திலேயே கவனம் ஈர்த்துள்ளது. படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் தற்போது மிகப் பெரிய அளவில் உருவாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்