சென்னையைச் சேர்ந்த ரம்யா ஸ்ரீராம் புகைப்படக் கலைஞராகவும் பலகலைகள் பற்றிய தேடுதல் மனம் கொண்ட பயணியாகவும் இருக்கிறார்.
மக்களிடையே பின்பற்றப்படும் சடங்கு வடிவங்களையும் விழாக்களையும் தனது கேமராவிற்குள் சிறைப் பிடிப்பது அவருக்கு விருப்பமான ஒன்று. அந்த வகையில் நமது பாரம்பரியம், கலாச்சாரம் போன்றவற்றை ஆவணப்படுத்துவதில் ஆர்வத்தோடு இயங்கி வருகிறார்.
கேரளாவில் கண்ணனூரில் உள்ள ஒரு கோயிலில் இவரல் எடுக்கப்பட்ட ‘தெய்யம்’ புகைப்படம் நேஷனல் ஜியோகிராபிக் காலண்டரில் இடம் பெற்ற பெருமை கொண்டது. அப்படம் 2025 ஆம் ஆண்டு உலகப் புகைப்பட தினமான ஆகஸ்ட் 19 ஆம் தேதி அது சர்வதேசக் கவனம் பெற்றது.
அதேபோல் இவர் தமிழ்நாட்டில் மயானக் கொள்ளை ,குலசை தசரா ,வட இந்தியாவில் வாரணாசியில் மாசான் ஹோலி போன்ற சடங்கு நிகழ்ச்சிகளையும் புஷ்கர் ஒட்டகத் திருவிழா, மகா கும்பமேளா போன்றவற்றையும் புகைப்படமாக ஆவணப்படுத்தி இருக்கிறார்.
பண்டிகைகள், நம்பிக்கைகள் மற்றும் மனித உறவுகளை ஆவணப்படுத்தியுள்ள இவரது படங்கள், ஒரு கதை சொல்லியைப் போலப் பார்ப்பவர்களுடன் பேசுபவை.
அப்படிப்பட்ட ரம்யா ஸ்ரீராம் தெருக்கூத்துக் கலைஞர்கள், அவர்களின் வாழ்வு சார்ந்து ‘ஊர் கூடும் இரவு’ என்ற பெயரில் ஒரு தெருக்கூத்து ஆவணப் படத்தை இயக்கியிருக்கிறார் .
கூத்து பற்றிச் சொல்ல வேண்டுமென்றால், கூத்து நிகழும் போது ‘ஊர் உறங்கும் நேரம் ,ஒரு கலை விழித்துக் கொள்கிறது’ எனலாம். அதுமட்டுமல்ல, ‘கூத்து தொடங்கும் போது கதை மட்டும் கூடுவதில்லை ஊரும் கூடுகிறது’ என்றும் கூறலாம்.
அப்படிப்பட்ட கூத்தின் பெருமையைக் கூறும் ‘ஊர் கூடும் இரவு’ ஆவணப்படத்தின் அறிமுக விழா சென்னை பிரசாத் லேபில் அண்மையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட மூத்த ஒளிப்பதிவாளரும் தென்னிந்திய ஒளிப்பதிவாளர் சங்கத்தின் தலைவருமான கார்த்திக் ராஜா பேசும்போது,
“எங்கள் சிறு வயது காலத்தில் நாங்கள் தெருக்கூத்தைப் பார்த்து மகிழ்ந்திருக்கிறோம். இந்தக் காலத்துக் குழந்தைகளுக்கு அந்த வாய்ப்பு இருக்குமா என்று தெரியாது. விவசாயக் கிராமங்களில் உழைத்து களைத்த போது ஊரெல்லாம் ஒன்று கூடி திருவிழாக்கள் நடத்தும் போது அங்கே ஆடல், பாடல், இது மாதிரி கூத்துகள் எல்லாம் நடக்கும். அப்படி நடக்கும்போது அந்தக் கூத்துக்குள் ஒரு அர்த்தம் இருக்க வேண்டும் என்று ராமாயணம், மகாபாரதம் போன்றவை பற்றிய கருத்துக்கள் எல்லாம் அதில் இருக்கும்.
இன்றைய டிஜிட்டல் உலகத்தில் எல்லாமே மாறிக் கொண்டிருக்கின்றன. இப்போது அதையெல்லாம் நினைவூட்டும் வகையில் ரம்யா அதை ஆவணப்படுத்தி இருக்கிறார். அவருக்கு எனது வாழ்த்துக்கள்.
இவையெல்லாம் பலருக்கு மறந்து போயிருக்கும்; பலருக்குக் கிடைக்காமல் இருக்கும். அதை நினைவூட்டும் வகையில் ரம்யா அதை ஆவணப்படுத்தி இருக்கிறார் . இன்று சமூக ஊடக வடிவங்கள் மாறி ரீல்ஸ் வரை வந்து, நிறைவே மாறி உள்ளது. அதற்குள் எல்லாம் இதையும் கொண்டு வருவதற்கு முயற்சிகள் எடுக்க வேண்டும். எல்லா மக்களையும் அது சென்றடைய வழி செய்ய வேண்டும். முயற்சிக்கு வாழ்த்துக்கள்!” என்றார்.
நிகழ்ச்சியில் ஒளிப்பதிவாளர் சி .ஜே. ராஜ்குமார் பேசும்போது,
“இங்கு பேசிய கார்த்திக் ராஜா அவர்கள் தேசிய விருதுக் குழுவில் இருப்பவர். அவரது பாராட்டும் அங்கீகார மும் ரம்யாவுக்குக் கிடைத்திருப்பது இங்கே முக்கியமானது என்று நினைக்கிறேன்.
நமது தேசிய விருதுக் குழுவில் இருக்கும் அவருக்குப் பிடித்தால் சர்வதேச அளவில் இது பிடிக்கும் என்று நான் நம்புகிறேன். ரம்யா ஸ்ரீராம் சர்வதேச அளவில் புகைப்படக் கலைஞராக விருதுகள் பெற்றவர் .சினிமா ஃபேக்டரி அகாடமிக்கு அவர் பலமுறை வந்து விருந்தினராக அமர்வுகளில் கலந்து கொண்டுள்ளார்.
அவரது அமர்வுகள் எப்போதும் மாணவர்களால் பாராட்டப்பட்டுள்ளன. மாணவர்கள் அவரிடம் நிறைய கற்றுக் கொண்டதாகக் கூறுவார்கள்.
அவர் ஒரு புகைப்படக் கலைஞராக விருதுகள் பெற்றவர் . அசையும் திரைப் படத்திலும் அவரது பார்வை, கோணம் நன்றாக இருக்கிறது. பொதுவாக இது மாதிரி விஷயங்களை ஆவணப்படுத்தும் போது அதன் துயரத்தைத்தான் பெரிதாகச் சொல்வார்கள். அப்படித்தான் நிறைய வந்துள்ளன .இங்கு இவர்களுடைய பார்வை வேறு மாதிரியாக உள்ளது. இந்தக் கலை வடிவத்தை இவர்கள் கொண்டாடி இருக்கிறார்கள் .அந்தக் கலைஞரைக் கொண்டாடி இருக்கிறார்கள்.
அவர்கள் தன்னிறைவோடு வாழ்வதாகவே பதிவு செய்து இருக்கிறார் ரம்யா. இதனை ஒரு முக்கியமான படியாக நான் பார்க்கிறேன்.
இப்படிப்பட்ட கலை வடிவத்தைப் பார்க்கும் போது நமக்கு ஒரு தூண்டுதல் கிடைக்க வேண்டும் .அந்தக் கலை நன்றாக இருக்கிறது, கலைஞர்கள் நன்றாக வாழ்கிறார்கள் என்ற நம்பிக்கை வர வேண்டும். அதைச் சிறப்பாகப் பதிவு செய்திருக்கிறார்கள்.
அவரே ஒரு புகைப்படக் கலைஞராக இருக்கும் போது இதன் ஒளிப்பதிவாளராக இன்னொருவருக்கு வாய்ப்பு கொடுத்தது மகிழ்ச்சியான விஷயம் . அப்படியே இதில் ஒளிப்பதிவு செய்துள்ள சுரேஷும் பிரமாதமாகச் செய்திருக்கிறார்.
இசை தொடங்கி பிற எல்லா தொழில்நுட்ப பணிகளும் நன்றாக உள்ளன. விருதுகள் நிறைய வாங்க வேண்டும். அதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கின்றன” என்றார்.
இயக்குநரும் கவிஞருமான பிருந்தா சாரதி பேசும் போது,
” இந்த ஆவணப்படத்தைப் பற்றி இங்கே எனக்கு முன்னர் பேசியவர்கள் கூறிய கருத்தையே நானும் வழிமொழிவதாகவே இருக்கிறேன்.
நான் கூட கவிக்கோ அப்துல் ரகுமான் மற்றும் தனிநாயகம் அடிகளார் பற்றி என இரண்டு ஆவணப் படங்களை எடுத்திருக்கிறேன்.
அதில் இறங்கிய பிறகுதான் திரைப்படத்தைப் போலவே அதற்கும் ஆய்வு செய்ய வேண்டும் திரைக்கதை எழுத வேண்டும் என்றெல்லாம் தெரிந்தது.
இவர்கள் இரண்டே நாளில் இந்த ஆவணப்படத்தை அழகாக எடுத்து இருக்கிறார்கள். காட்சிகள் எல்லாமே திகைப்பூட்டும் வகையில் உள்ளன. காட்டுக்குள் தீப்பந்தத்தோடு அந்தக் கலைஞர்கள் ஓடும் போதும் அந்தத் துரியோதனன் கதாபாத்திரம் ஓடும் போதும் பயமாக இருக்கிறது .கிராமத்தில் இதையெல்லாம் பார்த்தால் பயந்து விடுவார்கள். அதனால் கர்ப்பிணி பெண்கள் எல்லாம் போகக்கூடாது என்று தடை செய்து வைத்திருப்பார்கள்.
சினிமாவில் ஒப்பனை, உடைகள் என்பதற்கெல்லாம் பல ஆட்கள் இருப்பார்கள். ஆனால் இதில் வருபவர் தானே ஒப்பனை செய்து கொள்கிறார் .எல்லா வேலைகளையும் தானே செய்து கொண்டு இந்தக் கலைஞர் தோன்றுகிறார்.
இதற்காகக் கோவில் ,காடு என்று பல விதமான இடங்களில் எடுத்திருப்பது புதுமையான காட்சிகளைக் கொடுத்துள்ளது. கலைஞர்கள் சுழன்றாடும் காட்சிகளில் ஆடும் நடனம் ஆச்சரியமூட்டுகிறது.
ஒளிப்பதிவாளர் சுரேஷுக்கு வாழ்த்துக்கள். ரம்யா ஏற்கெனவே ஒரு புகைப்படக் கலைஞராக இருப்பதால் உலகத் தரத்திற்கு இதை எடுத்துள்ளார்.
நேஷனல் ஜியோகிராபிக் காலண்டரில் இவரது படம் இடம் பெற்றுப் பரிசு வாங்கியது போல் இந்தக் காட்சிகளும் முக்கியமான காலண்டர்களில் இடம்பெறும்.
எல்லா மாவட்டங்களிலும் உள்ள இந்த வகைக் கலைஞர்களுக்கு வறுமை கிடையாது .அரசு மூலம் அவர்களுக்கு நாடகம் போட வாய்ப்பு தருகிறார்கள். இந்த ஆவணப்படம் இந்தக் கலை மேலும் வளர்வதற்கு உதவும் .பங்கு பெற்ற அனைத்துக் கலைஞர்களுக்கும் எனது வாழ்த்துக்கள் ” என்றார்.
படத்தின் இயக்குநர் ரம்யா ஸ்ரீராம் பேசும் போது,
“இந்தப் படத்தை எடுப்பதற்கு பல்வேறு சிரமங்களைத் தாங்கிக் கொண்டு எனக்குப் பெரிதும் ஒத்துழைப்பு கொடுத்த ஒளிப்பதிவாளர் அருண்சுரேஷ், படத்தொகுப்பாளர் செல்வ பாண்டி ,இசையமைப்பாளர் யானி போன்ற அனைவருக்கும் நன்றி.
அருகில் என்ன இருக்கிறது என்று தெரியாமல் இருட்டுக்குள் வயலில் எல்லாம் எடுத்தோம். ஆயிரம் ஆண்டுக்கு மேற்பட்ட கோயிலில் எல்லாம் படப்பிடிப்பு நடத்தினோம்.
நான் என்ன நினைத்தேனோ அதையே இந்த இசையமைப்பாளர் யானி இசையாகக் கொடுத்த போது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.இங்கே பலரும் பாராட்டிப் பேசியதே விருது கிடைத்தது போல் மகிழ்ச்சியாக இருக்கிறது. அனைவருக்கும் நன்றி” என்றார்.
நிகழ்ச்சியில் ஒளிப்பதிவாளர் அருண் சுரேஷ், படத்தொகுப்பாளர் செல்வ பாண்டி, இசையமைப்பாளர் யானி, நடன இயக்குநர் எஸ்.எல். பாலாஜி,புகைப்படக் கலை நிபுணர் ஆர். பிரசன்ன வெங்கடேஷ்,சுகமுருகன் ஆகியோரும் கலந்து கொண்டு பேசினர்.

