தமிழ் முஸ்லிம் மக்களின் வாழ்வியலைப் பதிவு செய்த ‘ஹபீபி’ படக்குழுவினருக்கு கில்ட் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் பாராட்டு விழா நடந்தது.
நிகழ்வில் இயக்குநர் மீரா கதிரவன் பேசியதாவது…
“‘ஹபீபி’ திரைப்படத்துக்கு இதுவரை 50-க்கும் மேற்பட்ட பாராட்டு நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளன. தொடர்ந்து பல இடங்களில் இப்படத்துக்குப் பாராட்டுகள் கிடைத்து வருகின்றன. இயக்குநர் ராம் சார், படம் வெளியான பிறகு குறைந்தது மூன்று மாதங்களுக்குப் பாராட்டுகளைப் பெற்றுக்கொண்டிருப்பீர்கள் என்று சொன்னார். அவர் எந்த முகூர்த்தத்தில் சொன்னாரோ தெரியவில்லை; இன்றுவரை உலகம் முழுவதும் இப்படத்துக்குப் பாராட்டுகள் வந்துகொண்டிருக்கின்றன. இதற்குக் காரணம், உங்கள் அனைவரின் அன்புதான். இதற்கு முன்பு எழுத்தாளர்கள், மகளிர் அமைப்புகள், இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் சாதி, மதங்களைக் கடந்து செயல்படும் அமைப்புகள் இப்படத்தைப் பாராட்டியுள்ளன. இப்போது தயாரிப்பாளர்கள் ஒன்றிணைந்து இப்படத்தைப் பாராட்டுவது எனக்கு மிகவும் சிறப்பான தருணம். தயாரிப்பாளர்கள் இல்லையென்றால் என்னுடைய கதை வெறும் காகிதத்தில்தான் இருந்திருக்கும். தென்னிந்திய திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள் இணைந்து ‘ஹபீபி’ படத்தைப் பாராட்டுவது தமிழ் சினிமாவில் ஒரு முக்கியமான நிகழ்வாக நான் பார்க்கிறேன்.
என்னுடைய முதல் படத்துக்குப் பிறகு, இரண்டாவது படத்தை நானே தயாரிக்கும் அளவுக்கு ஒரு சூழல் உருவானது. ஆனால் ஒரு படத்தைத் தயாரித்த பிறகுதான் தயாரிப்பாளரின் முக்கியத்துவம் முழுமையாகப் புரிந்தது. தயாரிப்பாளர்கள் அளிக்கும் இந்த ஊக்கமும் அங்கீகாரமும் தொடர்ந்து நல்ல படங்களை உருவாக்க வேண்டும் என்ற நம்பிக்கையைத் தருகிறது. ‘ஹபீபி’ படத்தில் நடித்த கஸ்தூரி ராஜா சார் உள்ளிட்ட அனைத்து நடிகர்களும் மிகப்பெரிய ஒத்துழைப்பைக் கொடுத்தார்கள். தனஸ்ரீ, மாளவிகா மனோஜ் உள்ளிட்ட பலருக்கு இந்தப் படம் முக்கியமான வாய்ப்பாக அமைந்தது. விஜயகுமார், ஜெயஸ்ரீ, மலர், ரிஸ்வானா, மஷூக் உள்ளிட்ட நடிகர்களும், உதய், மதி உள்ளிட்ட தொழில்நுட்பக் கலைஞர்களும் தங்களின் பங்களிப்பைச் சிறப்பாக வழங்கியுள்ளனர். இந்தப் படத்துக்காக உழைத்த உதவி இயக்குநர்கள் உட்பட அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழ் சினிமாவுக்கு 110 ஆண்டுகால வரலாறு இருக்கிறது. தமிழ்நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் தனித்துவமான மொழியும் வாழ்வியலும் இருக்கின்றன. கொங்கு மக்களின் வாழ்க்கை, கரிசல் நிலத்தின் வாழ்க்கை, வடசென்னையின் வாழ்க்கை எனப் பல்வேறு கதைகள் திரையில் வந்துள்ளன. அதுபோல, இஸ்லாமிய மார்க்கத்தைப் பின்பற்றினாலும் தமிழையே தாய்மொழியாகக் கொண்டு வாழும் தமிழ் முஸ்லிம்களின் வாழ்க்கையைப் பேசும் திரைப்படம்தான் ‘ஹபீபி’. இத்தகைய கதையை இயக்குவதற்கு நான் ஒரு கருவியாக இருந்திருக்கிறேன் என்று நினைக்கிறேன். அதற்காக இறைவனுக்கு நன்றி கூறுகிறேன்.
இந்தப் படத்தின் உருவாக்கத்தில் மிக முக்கியமானவர் வி.எஸ். முஹம்மத் அமீன். அவரை இந்தப் படத்தின் இயக்குநர், எழுத்தாளர் அல்லது தயாரிப்பாளர் என்று மட்டும் குறிப்பிட முடியாது; அவர் இந்தப் படத்தின் சகலகலா வல்லவர். இஸ்லாமிய வாழ்வியலை மையமாகக் கொண்டு ஒரு திரைப்படத்தை உருவாக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு சுமார் 20 ஆண்டுகளாக இருந்தது. அந்தக் கனவைச் சாத்தியப்படுத்தியவர் அமீன்தான். அவர் இல்லையென்றால் ‘ஹபீபி’ இந்த மேடையை அடைந்திருக்காது. நாங்கள் இருவரும் ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள் என்பதால், எங்களுக்குள் அந்த வாழ்க்கை அனுபவங்கள் குறித்த நெருக்கமும் புரிதலும் இருந்தன. இந்தப் படத்தை உருவாக்க உதவிய அனைவருக்கும், தொடர்ந்து ஆதரவளித்து வரும் உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.
கில்ட் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் சக்கரவர்த்தி, நடிகர் கஸ்தூரி ராஜா, பத்திரிகையாளரும் இயக்குநருமான கோடங்கி, தயாரிப்பாளர் கோவை இப்ராஹிம், தயாரிப்பாளர் சாகுல் ஹமீத் உள்ளிட்டோரும் நிகழ்வில் பேசினார்கள்.

