ஒடுக்கப்பட்ட மக்களின் வலிகளை பதிவு செய்யும் படங்களின் வரிசையில் சிங்காரம்.
1990களில் நடக்கிற கதை. நரிக்குறவ சமுதாயத்தை சேர்ந்தவர்கள் நிலையாக ஒரு இடத்தில் தங்குவதில்லை. ஊர் ஊராகப் போவதும், கிடைத்த இடத்தில் தங்குவதும், ஊசிமணி பாசிமணி விற்று நாட்களைக் கடத்துவதும் வழக்கம். அப்படிப்பட்ட மக்களில் சிலர் குழுவாக ஒரு ஊருக்குப் போய் தங்குகிறார்கள். ஊரில் சில இளைஞர்கள் அவர்களை அடித்து விரட்ட முயற்சிக்கிறார்கள். பின்னர் அந்த குழுவிலுள்ள பெண்களை தங்கள் காமப்பசிக்கு பயன்படுத்திக்கொள்ள முயற்சிக்கிறார்கள். இப்படியே நாளுக்கு நாள் பிரச்சனை அதிகரிக்க அதையெல்லாம் சமாளிக்கிறார்கள்.
அது ஒருபக்கமிருக்க அவர்களுக்கு என அடையாள அட்டை அதுஇதுவென அங்கீகாரம் ஏதுமில்லாததால் அரசாங்கம் தருகிற சலுகைகள் எதையும் பெற முடியாமல் போகிறது. மருத்துவ வசதிகளையும் பயன்படுத்திக்கொள்ள முடியாத நிலைமை.
அந்த நிலைமையை மாற்ற நினைக்கிற, அந்த இனக்குழுவில் துடிப்பான நபராக இருக்கிற யோகிபாபு தங்களுக்கு அடையாள அட்டை பெறவும், தங்களின் வாழ்வாதார உரிமைக்காகவும் போராட முன்வருகிறார். அதன் விளைவுகள் என்ன என்பதே மீதிக்கதை…
நரிக்குறவராக அடிதடிகளைப் பொறுத்துக்கொண்டு, அவமானங்களைச் சகித்துக் கொண்டு வாழ்வது, பின்னர் கோடீஸ்வர வாழ்க்கையை அனுபவிப்பது, தேர்தலில் போட்டியிடுவது, ஊர் மக்களுக்கு நல்லது செய்வது என இரண்டு விதமான நடிப்பை தரும்படியான கேரக்டர். பெரிதாய் அலட்டிக் கொள்ளாமல் தனக்கு எது வருமோ அதை செய்திருக்கிறார். அது போதுமானதாக இருக்கிறது.
யோகிபாபுவின் அப்பாவாக எம் எஸ் பாஸ்கர், அம்மாவாக தீபாசங்கர், மகளாக சபீதா ராய் மற்ற குடும்பத்து உறுப்பினர்களாக மனோபாலா, ஜாவா சுந்தரேசன், கணேஷ்கர், கல்கி ராஜா என எல்லோருக்குமே நரிக்குறவர் வேடம் நன்றாகப் பொருந்துகிறது.
தன் மருத்துவச் செலவுக்காக மகள்கள் தவறான வழிக்கு போக முடிவெடுக்கும் காட்சியில் எம் எஸ் பாஸ்கரின் நடிப்பு கலங்கடிக்கிறது. அவர் மட்டுமல்ல ஊரில் மக்களின் செல்வாக்கு மிக்கவராக வேல ராமமூர்த்தி, ஓட்டுப் போட்டு ஜெயிக்க வைத்த மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற அக்கறையில்லாத எம் எல் ஏ’வாக மாரிமுத்து, நரிக்குறவர்களை எதிரியாகப் பார்த்து அவர்களை விதவிதமாக துன்புறுத்துகிற சென்றாயன் என எல்லோருடைய நடிப்புமே தனித்தனியாக பாராட்டும்படியிருக்கிறது.
சாம் சி.எஸின் பின்னணி இசை, பிரசன்னா எஸ். குமரின் ஒளிப்பதிவு படத்தின் பலம்.
நரிக்குறவர்களின் வாழ்க்கை முறையை, அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளை இந்தளவுக்கு எந்த திரைப்படத்திலும் அலசியதில்லை. இந்த படத்திற்காக நரிக்குறவர்களின் வாழ்க்கை குறித்து பெரியளவில் ஆராய்ச்சி செய்திருக்கிறார் படத்தின் இயக்குநர் கே வி கதிர்வேலு.
வலியும் வேதனையும் நிரம்பிய படைப்புதான் என்றாலும் கலகலப்பான சில காட்சிகளும் படத்திலுண்டு. சில குறைகளைத் தாண்டி சிங்காரம் தருவது ஒரு நல்ல கமர்சியல் திரைப்படம் பார்த்த உணர்வு.

