Home பொது ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படத்தின் வெற்றிக்காக பிரத்தியங்கிரா தேவி ஆலயத்தில் சிறப்பு யாகம் நடத்திய வேல்ஸ்...

‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படத்தின் வெற்றிக்காக பிரத்தியங்கிரா தேவி ஆலயத்தில் சிறப்பு யாகம் நடத்திய வேல்ஸ் நிறுவனம்!

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள பெரிதும் எதிர்பார்க்கப்படும் திரைப்படமான ‘மூக்குத்தி அம்மன் 2 – மஹாசக்தி’ திரைப்படத்தின் வெற்றிக்காக, சோழிங்கநல்லூரில் அமைந்துள்ள புகழ்பெற்ற பிரத்தியங்கிரா  தேவி ஆலயத்தில் சிறப்பு யாகம் நடைபெற்றது. வரும் நவம்பர் 6-ம் தேதி தீபாவளி வெளியீடாக தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் இப்படம் வெளியாகிறது.
இந்தச் சிறப்பு வழிபாட்டில் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தலைவர் டாக்டர் ஐசரி கே. கணேஷ், வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் இணைவேந்தர் டாக்டர் ஆர்த்தி கணேஷ், படத்தின் இணைத் தயாரிப்பாளர் குஷ்மிதா கணேஷ் ஆகியோர் கலந்துகொண்டு வழிபாடு நடத்தினர். இவர்களுடன் இப்படத்தின் இயக்குநர் சுந்தர்.சி அவர்களும் கலந்துகொண்டார். திரைப்படத்தின் வெளியீட்டை முன்னிட்டு நடைபெற்ற இந்த ஆன்மிக நிகழ்வு, படக்குழுவினரின் இறைநம்பிக்கையையும் பக்தியையும் வெளிப்படுத்தும் வகையில் அமைந்தது.
சுந்தர்.சி இயக்கத்தில், டாக்டர் ஐசரி கே. கணேஷ் தயாரிப்பில், வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பில் உருவாகியுள்ள இப்படத்தில் நயன்தாரா கதையின் நாயகியாக நடித்துள்ளார். மேலும், ரெஜினா கசாண்ட்ரா, ஊர்வசி, துனியா விஜய், சுனில் மற்றும் கருடா ராம் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார்.
தமிழ் சினிமாவைத் தாண்டி இந்திய அளவில் ரசிகர்களைச் சென்றடையும் வகையில், தீபாவளியை முன்னிட்டு ‘மூக்குத்தி அம்மன் 2 – மஹாசக்தி திரைப்படம் வரும் நவம்பர் 6ஆம் தேதி  உலகமெங்கும் வெளியாகிறது. நம்பிக்கை, குடும்ப உறவுகள் மற்றும் உணர்வுப்பூர்வமான கதைக்களம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படம், பல்வேறு மொழி மற்றும் கலாச்சாரங்களைச் சேர்ந்த ரசிகர்களிடமும் வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தச் சிறப்பு வழிபாட்டின் ஒரு பகுதியாக, ஆலயத்திற்கு வருகை தந்த பக்தர்கள் 500க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும், பெண்களுக்கு புடவைகளும் வழங்கப்பட்டன. இறையருளையும் நன்றியுணர்வையும் வெளிப்படுத்தும் விதமாக நடைபெற்ற இந்த நிகழ்வில், பிரத்தியங்கிரா தேவி அம்மனின் அருளால் திரைப்படம் உலகம் முழுவதும் மாபெரும் வெற்றிபெறவும், வேல்ஸ் நிறுவனத்தின் அடுத்தடுத்த திரைப்பட முயற்சிகள் சிறப்பான வெற்றியைப் பெறவும் வேண்டிக்கொள்ளப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்