இளைய தலைமுறையின் ரசனைக்கேற்ற படைப்பாக ‘நூறு கோடி வானவில்.’
‘ஏம்மா, நீ இவ்ளோ நாள் எங்கேம்மா இருந்த?’, ‘இப்படியொரு அட்டகாசமான நடிப்பை எங்கேம்மா ஒளிச்சு வெச்சிருந்த?’
நாயகி சித்தி இத்னானியின் பங்களிப்பைப் பார்த்தால் இப்படிதான் கேட்கத் தோன்றுகிறது. அப்படியொரு அசத்தலான நடிப்பில் படத்தை தாங்கியிருக்கிறார் அந்த கன்னக்குழியழகி.
ஒரு பெண்ணுக்காக இரண்டு ஆண்கள் அடித்துக் கொள்கிற வழக்கமான கதை.
வினோ டிவி சேனல் ஒன்றில் கிரியேட்டர். கோவா கிளையில் பொறுப்பேற்கிறான். தனது புது ஐடியாவில் உருவாகும் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கவும் நடிக்கவும் அவன் தேர்வு செய்யும் இளம்பெண் பெனி. வினோவின் அசத்தலான கிரியேடிவிடி, பெனியின் ஃபெர்பாமென்ஸில் இருக்கும் கியூட்னஸ் இரண்டுமாக சேர்ந்து நிகழ்ச்சி தாறுமாறாக ஹிட்டடிக்கிறது. பழக்கம் நெருக்கமாக பெனி மீது வினோவுக்கு காதலும், பெனிக்கு வினோ மீது ஒருவித ஈர்ப்பும் உருவாகிறது.
இப்படி துவங்கும் கதை, பெனிக்கு ஏற்கனவே காதலன் உண்டு, அந்த காதலன் விபத்தில் சிக்கி கோமாவில் இருக்கிறான், பெனிதான் அவனை கவனித்துக் கொள்கிறாள் என விறுவிப்பு டிராக்கிற்கு தாவுகிறது… பெனி யாருடன் இணைகிறாள் என்பது உணர்வுபூர்வமான கிளைமாக்ஸ்…
இளைய தலைமுறையை கவரும் விதத்தில் நிகழ்ச்சிகளை உருவாக்குவதில் துடிப்பாகவும், காதல் உணர்வுப் பரிமாற்றத்தில் ஏற்கனவே பார்த்துப் பழகியபடியும் நடித்திருக்கிறார் ஹரிஷ் கல்யாண்.
காதலனை பிரிய முடியாத மனநிலை, சேனல் ஆங்கராக வேண்டும் என்ற தன் லட்சியம் நிறைவேற பாதையமைத்துக் கொடுத்த, தன் திறமையை வெளிச்சம் போட்டுக் காட்டிய வினோ மீது மயக்கம். இரண்டுக்கும் இடையில் சிக்கித் தவிக்கிற பெண்ணாக சித்தி இத்னானி. விளையாட்டுத்தனம், சீரியஸ் என இரு பக்கமும் அடித்து ஆடியிருக்கிறார். படம் எடுத்து சிலபல வருடங்களாகிறது என்பதை அவரது இளமையான தோற்றம் தெரியப்படுத்துகிறது.
சித்தி இத்னானியின் காதலனாக வருகிறவருக்கு டாக்ஸிக் மனப்பான்மையை பிரதிபலிக்கிற கேரக்டர். முறைப்பும் வெறுப்புமாய் கவனம் பெறுகிறார்.
பிக்பாஸ் பார்வதிக்காக 11 பேர் கொண்ட டீம் ரூம் போட்டு டயலாக் எழுதினார்களோ என்னவோ தெரியவில்லை. அந்தளவுக்கு அவர் பேசுவதெல்லாம் ரசிக்க வைக்கிறது.
தம்பி ராமையா, கோவை சரளா என காமெடியில் கலக்குகிறவர்களும் படத்தில் உண்டு. ஆனால் அப்படி கலக்குவதற்கான வாய்ப்பில்லை. கொடுத்த வேலையை அலட்டலில்லாமல் செய்திருக்கிறார்கள்.
சித்துகுமார் இசையில் ‘போ போதும் போ’ பாடல் சித்ஸ்ரீராமின் டெம்ப்ளேட் குரலில் இதம் தருகிறது. படம் முடிந்தது என எழுந்து கொள்ளும்போது இழுத்து உட்கார வைக்கிறது ‘கண்ணாட்டி’ பாடல்.
பிரசன்னா எஸ். குமார் அமைத்திருக்கும் லைட்டிங்கில், வைத்திருக்கும் ஃபிரேம்களில் கோவாவின் அழகையும், வினோ – பெனி காதல் தருணங்களையும் பார்க்கும்போது மனம் முழுக்க புத்துணர்ச்சி பரவுகிறது.
இயக்குநர் சசி கையாண்டிருப்பது பழகிப்போன முக்கோண காதல் கதைதான் என்றாலும் திரைக்கதையில் வசியம் வைத்திருக்கிறார். கவித்துவமான காட்சிகள் ஏராளம் தாராளம். கதையின் முடிவு மிகச் சரியானது.
ஓ டி டி தளத்திற்கு பொருத்தமான இந்த படைப்பு நவம்பர் 6-லிருந்து Zee 5 தளத்தில் ஸ்ட்ரீமாகவுள்ளது.
நூறு கோடி வானவில் – காதலும் தடம் மாறும்!
-சு.கணேஷ்குமார்

