Home பொது ‘கன்டென்ட்தான் கிங்’ என்று சொல்வதைப் போல் நல்ல கதையுடன் நாங்கள் வருகிறோம்! -அப்பா குட்டி பட...

‘கன்டென்ட்தான் கிங்’ என்று சொல்வதைப் போல் நல்ல கதையுடன் நாங்கள் வருகிறோம்! -அப்பா குட்டி பட விழாவில் இயக்குநர் மாறன் பேச்சு

விஜய் ஆண்டனி நடிப்பில், மு. மாறன் இயக்கியுள்ள ‘அப்பா குட்டி’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினர் கலந்துகொண்டு திரைப்படம் குறித்த தங்களது அனுபவங்களையும், படத்தின் உருவாக்கம் குறித்த சுவாரஸ்யமான தகவல்களையும் பகிர்ந்துகொண்டனர்.
நிகழ்வில் இயக்குநர் மு மாறன் பேசியதாவது,
“‘அப்பா குட்டி’ என்னுடைய நான்காவது படம். இதற்கு முன்பு நான் இயக்கிய மூன்று படங்களும் கிரைம் த்ரில்லர் ஜானரில் அமைந்திருந்தன. தொடர்ந்து அதே ஜானரில் ஏன் படங்கள் இயக்குகிறீர்கள் என்று பலரும் கேட்டதால், இந்த முறை வித்தியாசமான கதைக்களத்தில் முயற்சி செய்திருக்கிறேன். இந்தக் கதையைப் பல தயாரிப்பாளர்களிடம் சொன்னபோது அனைவருக்கும் பிடித்திருந்தது. சில காரணங்களால் உடனடியாகப் படமாக்க முடியாமல் இருந்தது. பின்னர் ஒரு பெரிய தயாரிப்பு நிறுவனத்திடம் கதையைச் சொன்னபோது அவர்களுக்கும் பிடித்துப்போனது. அப்போது இந்தக் கதையில் விஜய் ஆண்டனி சார் நடித்தால் நன்றாக இருக்கும் என்று பரிந்துரைத்தேன்.
விஜய் ஆண்டனி சாரைச் சந்தித்து கதையின் முதல் பாதியைச் சொன்னதுமே இந்தப் படத்தில் நடிக்கிறேன் என்று ஒப்புக்கொண்டார். இரண்டாம் பாதியைக் கேட்டதும் உடனடியாகப் படத்தைத் தொடங்கலாம் என்றார். நல்ல கதைகளுக்கு எப்போதும் அங்கீகாரம் கிடைக்கும் என்பதற்கு இந்தப் படம் ஓர் உதாரணம். ‘கன்டென்ட்தான் கிங்’ என்று பத்திரிகையாளர்கள் தொடர்ந்து கூறிவருகிறீர்கள். அப்படிப்பட்ட நல்ல கதையுடன் நாங்கள் வருகிறோம்.
இந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த வைஜெயந்தி மேமுக்கு நன்றி. படத்தின் வெளியீட்டு உரிமையைக் கைப்பற்றிய செந்தில் சார், தனஞ்செயன் சார், சசி சார் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி. என்னுடன் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள், சக நடிகர்கள் மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். நவம்பர் 28-ம் தேதி வெளியாகும் இப்படத்திற்கு அனைவரும் ஆதரவு தர வேண்டும்.”
நடிகர் விஜய் ஆண்டனி பேசியதாவது,
‘அப்பா குட்டி’ படத்தில் பணியாற்றியது எனக்கு மிகவும் மகிழ்ச்சியான அனுபவம். இந்தக் கதையைக் கேட்டபோது முதல் பாதியே மிகவும் பிடித்திருந்தது. இரண்டாம் பாதியைக் கேட்டதும் உடனடியாகப் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன். குறிப்பாக, படத்தின் கிளைமாக்ஸ் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது. இந்தப் படத்தின் பாடல்களும் உணர்வுபூர்வமாக வந்திருக்கின்றன. ‘பிச்சைக்காரன்’ படத்தின் பாடல்களைப் பல நிறுவனங்கள் வாங்க முன்வராததால் அந்த ஆல்பத்தை நானே வைத்துக்கொண்டேன். அதேபோல், ‘அப்பா குட்டி’ படத்தின் அப்பா பாடலைக் கேட்டபோது, இந்தப் படத்தின் பாடல்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெறும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது.
இயக்குநர் மு. மாறன் மிகவும் திறமையானவர். குறுகிய காலத்திலேயே திட்டமிட்டு, வேகமாகவும் சிறப்பாகவும் படத்தை முடித்திருக்கிறார். அவருடைய அடுத்தடுத்த படங்கள் வெற்றிகரமாக அமைய வாழ்த்துகிறேன்.
ப்ரீத்தி அஸ்ராணி எந்தக் கோணத்தில் கேமரா வைத்தாலும் சிறப்பாக நடிக்கக்கூடியவர். தமிழ் மொழி அவருக்குத் தாய்மொழி இல்லையென்றாலும், வசனங்களைப் பேசி நடித்த விதம் பாராட்டுக்குரியது. பேபி லிதன்யாவின் நடிப்பும் வியக்க வைக்கிறது. இந்த வயதிலேயே ஒரு அனுபவம் வாய்ந்த நடிகையைப் போலத் தொழில்முறையுடன் நடித்திருக்கிறார். ஹரிப்ரியா பாடிய பாடலும் மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது. படத்தில் பணியாற்றிய நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், விநியோகஸ்தர் செந்தில், தனஞ்செயன் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி. ‘பிச்சைக்காரன்’ படத்தின் மூலம் எனக்கு அளித்த அன்பையும் வரவேற்பையும் தொடர்ந்து வழங்கி வரும் ரசிகர்களுக்கு நன்றி. இந்த நிகழ்வில் ‘பிச்சைக்காரன் 3’ குறித்த அறிவிப்பு வெளியானது மகிழ்ச்சி அளிக்கிறது. அந்தப் படமும் விரைவில் வெளியாகும் என நம்புகிறேன். ‘அப்பா குட்டி’ படத்தையும் திரையரங்குகளில் பார்த்து ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி.”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்