23-ம் புலிகேசி, இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம், புலி, கசடதபற, போட் என தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனித்துவமான பாணியைக் கொண்ட சிம்புதேவன் இயக்கத்தில் உருவாகும் 9-வது திரைப்படம் ‘நவோரியா’. டி பி சி ட்ரீம் ஹவுஸ் நிறுவனம் சார்பில் திருக்குமரன் கதிர்வேல் இப்படத்தைத் தயாரிக்கிறார். சிம்புதேவன் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது.

இப்படமும் காமெடி, ஆக்ஷன் மற்றும் ஃபேண்டஸி ஆகிய மூன்று அம்சங்களும் இணைந்த ஒரு முழுநீளப் பொழுதுபோக்குத் திரைப்படமாக உருவாகியுள்ளது.
இப்படத்தில் நடிகர் விமல் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக ஆன் ஷீத்தல் நடித்துள்ளார். இவர்களுடன் ஆரி அர்ஜுனன், தம்பி ராமையா, பால சரவணன், நிழல்கள் ரவி, பாலாஜி சக்திவேல், மன்சூர் அலிகான், கஸ்தூரி, அப்புக்குட்டி உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு 60 நாட்களுக்கும் மேலாகத் திருநெல்வேலி, கோவில்பட்டி, தென்காசி, சங்கரன்கோவில் ஆகிய பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. மேலும், படத்தின் மிக முக்கியமான காட்சிகளுக்காகச் சென்னையில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவில் பிரம்மாண்டமான அரங்கு அமைக்கப்பட்டு, சுமார் 10 நாட்கள் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது.
அதிக பொருட்செலவில் உருவாகியுள்ள இத்திரைப்படம், நடிகர் விமலின் திரைப் பயணத்தில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் படமாகும். இப்படத்தின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ள விமல், ‘நவோரியா’ தனது திரைப் பயணத்தில் ஒரு பெரிய திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கிறார்.
‘நவோரியா’ திரைப்படத்திற்கு டி. இமான் இசையமைக்க எம். சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஸ்ரீஜித் சாரங் படத்தொகுப்புக்கு பொறுப்பேற்க, சக்தீ வெங்கட்ராஜ் எம் கலை இயக்கத்தை கையாண்டுள்ளார். ஸ்டண்ட் சில்வா சண்டைக் காட்சிகளை வடிவமைத்துள்ளார்.
மிகவும் கலகலப்பாகவும், அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையிலான சிறந்த பொழுதுபோக்குத் திரைப்படமாகவும் ‘நவோரியா’ உருவாகியுள்ளதாக படக்குழுவினர் தெரிவிக்கின்றனர். இப்படத்தின் டீசர், டிரெய்லர் மற்றும் இசை வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும்.

