அறிமுக இயக்குநர் பிரவீன் எஸ் விஜய் இயக்கியுள்ள ‘சத்தியவான் சாவித்திரி’ நவம்பர் 20ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. முன்னதாக படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது.

இயக்குநர் பிரவீன் S. விஜய் பேசியதாவது,
Zee Studios மற்றும் Drumsticks Productions நிறுவனங்களுக்கு முதலில் நன்றி. ஒரு புதிய இயக்குநரின் முதல் படத்தை உருவாக்கும்போது தயாரிப்புத் தரப்பிலிருந்து கிடைக்கும் ஆதரவு மிகவும் முக்கியம். தயாரிப்பாளர்கள் சக்தி சார், விஜய் சார், விவேக் சார் மூவரும் எனக்கு மிகப்பெரிய ஆதரவாக இருந்தார்கள். குறிப்பாக, விவேக் சார் எனக்கு ஒரு சகோதரரைப் போன்றவர். படக்குழுவில் கடைசி நிலையில் பணியாற்றிய உதவி இயக்குநர் வரை அனைவருக்கும் தயாரிப்பு நிறுவனம் மிகுந்த மரியாதை கொடுத்தது மகிழ்ச்சியளித்தது.
ஒளிப்பதிவாளர் அருள் வின்சென்ட் ஒவ்வொரு காட்சியிலும் தனித்துவமான கேமரா அசைவுகளைக் கொண்டு வந்தார். இசையமைப்பாளர் சாம் C.S. அறிமுக இயக்குநர் என்ற பாகுபாடின்றி எனது தேவைகளைப் புரிந்துகொண்டு பணியாற்றினார். படத்தொகுப்பாளர் G.K. பிரசன்னா தனது எடிட்டிங் மூலம் திரைக்கதைக்கு மேலும் வலு சேர்த்திருக்கிறார். சாருகேஷ், ஷில்பா மஞ்சுநாத், பிரிகிடா மூவரும் மாறுபட்ட கதாபாத்திரங்களை ஏற்று சிறப்பாக நடித்துக் கொடுத்தார்கள்.
மிஷ்கின் சாருடன் பணியாற்ற வேண்டும் என்பது 14, 15 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே எனது ஆசை. இந்தப் படத்தின் மூலம் அவருடன் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சி; அவரிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டேன். கீர்த்தி சுரேஷை மனதில் வைத்தே இந்தக் கதையை எழுதினேன். அவர் மற்றும் மிஷ்கின் இருவரும் நான் எதிர்பார்த்ததைவிடச் சிறப்பாக நடித்து, கதாபாத்திரங்களுக்கு மேலும் வலு சேர்த்திருக்கிறார்கள். எனது உதவி இயக்குநர்கள், நிர்வாகத் தயாரிப்பாளர் நந்தா, உதவி ஒளிப்பதிவாளர்கள், படத்தொகுப்புக் குழுவினர் என இரவு பகலாக உழைத்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. இந்தப் படத்தின் உருவாக்கத்தில் பங்களித்த ஒவ்வொருவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நடிகர் மிஷ்கின் பேசியதாவது,
இயக்குநர் பிரவீன் S. விஜய் மிகவும் அற்புதமான மனிதர். குழந்தை போன்ற மனம் கொண்டவர். இந்தப் படத்தில் என்னையும் கீர்த்தி சுரேஷையும் குடும்பத்தினர் போல அன்புடன் கவனித்துக்கொண்டார். ஒரு உதவி இயக்குநராக இருந்து இயக்குநராக வருவதில் இருக்கும் சிரமம் எனக்குத் தெரியும். அந்தப் பயணத்தில் பிரவீனுக்கு அவரது மனைவி அளித்த ஆதரவு பாராட்டுக்குரியது. பிரவீன் எனக்கு ஒரு குடும்பத்தைப் போன்றவர். இந்தப் படத்தில் அவர் எனக்கு முழுமையான நடிப்புச் சுதந்திரம் கொடுத்தார். நானும் கீர்த்தியும் பல காட்சிகளை இயல்பாக இம்ப்ரொவைஸ் செய்து நடித்தோம். ஒரு நடிகரின் திறமையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பை இயக்குநர் வழங்க வேண்டும்; அதை பிரவீன் சிறப்பாகச் செய்தார்.
கீர்த்தி சுரேஷை என்னுடைய மகளைப் போலப் பார்க்கிறேன். அவரிடம் அபாரமான நடிப்புத் திறமை இருக்கிறது. இந்திய சினிமாவில் எனக்குப் பிடித்த நடிகைகளில் சாவித்திரி முக்கியமானவர். அந்தப் பெயரில் உருவான படத்தில் கீர்த்தி நடித்திருப்பது மகிழ்ச்சி. அவர் இன்னும் 20 முதல் 25 ஆண்டுகள் தொடர்ந்து நடிக்க வேண்டும். இசையமைப்பாளர் சாம் C.S. இந்தப் படத்திற்கு சிறப்பான பங்களிப்பை வழங்கியிருக்கிறார். இயக்குநரின் படைப்பை மேலும் உயரத்துக்குக் கொண்டு செல்லும் திறமை அவரிடம் இருக்கிறது. பிரவீனிடம் ஈகோ இல்லாததால், மற்ற கலைஞர்களின் பங்களிப்பையும் மனதாரப் பாராட்டுகிறார்.
சினிமா என்பது வெறும் தொழில் கிடையாது; மனிதர்களை நேசிக்கவும் அழகான உணர்வுகளை அனுபவிக்கவும் கற்றுக்கொடுக்கும் கலை. இந்தப் படத்தில் பணியாற்றிய அனுபவம் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. தயாரிப்பாளர்களும் நல்ல திரைப்படத்தை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் பணியாற்றியிருக்கிறார்கள். ‘சத்தியவான் சாவித்திரி’ படத்திற்கு அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும். நன்றி.
நடிகை கீர்த்தி சுரேஷ் பேசியதாவது,
இந்தப் படத்தின் புரமோஷனுக்கு வருவதில் ஏற்பட்ட தாமதத்திற்குக் காரணம் உடல்நலக் குறைவு. தற்போது அதிலிருந்து மீண்டு வந்திருக்கிறேன். படத்தின் தயாரிப்பாளர்கள் சக்தி சார், விஜய் சார், விவேக் சார் மற்றும் Drumsticks Productions நிறுவனத்திற்கு நன்றி. படப்பிடிப்பில் அனைவரையும் அன்பாகவும் அக்கறையுடனும் கவனித்துக் கொண்டார்கள். இயக்குநர் பிரவீனை ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் காலத்திலிருந்தே தெரியும். பல ஆண்டுகளாக அவருக்கு நெருக்கமான கதையாக இருந்த ‘சத்தியவான் சாவித்திரி’ படத்தை இயக்கியிருப்பது மகிழ்ச்சி. படப்பிடிப்பில் இயக்குநராக இல்லாமல் உதவி இயக்குநர்களுடன் இணைந்து ஓடிக்கொண்டே வேலை செய்வார். பிரவீன் எனக்கு ஒரு சகோதரரைப் போல மாறிவிட்டார்.
மிஷ்கின் சாருடன் முதலில் நடிக்கும்போது பயமாக இருந்தது. ஆனால் இரண்டு நாட்களிலேயே அவருடன் நெருக்கமாகிவிட்டேன். அவர் மனதில் பட்டதை வெளிப்படையாகப் பேசக்கூடியவர். சிறந்த நடிகர், இயக்குநர் என்பதைத் தாண்டி மிகச் சிறந்த மனிதர். அவருடன் இணைந்து திரையில் நடித்தது பெருமையாக இருக்கிறது. சாருகேஷ், ஷில்பா மஞ்சுநாத், பிரிகிடா மூவருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள். குறிப்பாக, சாவித்திரி நாடகக் காட்சிகளில் பிரிகிடாவின் நடிப்பு மிகவும் அழகாக இருந்தது. சாருகேஷ் கூச்ச சுபாவம் கொண்டவர் என்பதால் அவருக்கு வசதியான சூழலை உருவாக்க முயற்சி செய்தேன். ஒளிப்பதிவாளர் அருள் வின்சென்ட், இசையமைப்பாளர் சாம் C.S., படத்தொகுப்பாளர் G.K. பிரசன்னா உள்ளிட்ட தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் சிறப்பாகப் பணியாற்றியிருக்கிறார்கள். குறிப்பாக, ‘Rise of Savithri’ பாடல் எனக்குப் பிடித்தமானது. உதவி இயக்குநர்கள் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. ‘சத்தியவான் சாவித்திரி’ நவம்பர் 20ஆம் தேதி வெளியாகிறது. நீதிமன்றப் பின்னணியுடன் குற்றப் புலனாய்வு அம்சங்களும் நிறைந்த திரில்லர் படமாக இது இருக்கும். நான் படத்தைப் பார்த்துவிட்டேன்; எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. ரசிகர்களும் திரையரங்குகளில் பார்த்து ஆதரவு அளிக்க வேண்டும்.
நடிகர் சாருகேஷ் பேசியதாவது,
‘சத்தியவான் சாவித்திரி’ திரைப்படத்தின் மூலம் ஒரு முழுமையான நடிகராக உங்கள் முன்னால் நிற்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. இது எனது முதல் பெரிய மேடை என்பதால் கொஞ்சம் பதற்றமாகவும் இருக்கிறது. இந்தப் படத்தில் வாய்ப்பளித்த தயாரிப்பாளர்கள் சக்தி சார், விஜய் சார் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. இயக்குநர் பிரவீன் மிகவும் ஜாலியான மனிதர். படப்பிடிப்பில் அனைவரிடமும் அன்பாகப் பழகுவார். அவருடைய கதை சொல்லும் திறமையும், ஒவ்வொரு காட்சிக்காகவும் அவர் தயாராகும் விதமும் எனக்குப் பிடித்திருந்தது. ஒளிப்பதிவாளர் அருள் வின்சென்ட் மற்றும் இசையமைப்பாளர் சாம் C.S. ஆகியோருக்கும் நன்றி.
கீர்த்தி சுரேஷுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது எனக்குக் கனவு நனவான அனுபவம். ஆரம்பத்தில் அவருடன் நடிக்கப் பதற்றமாக இருந்தாலும், என்னை மிகவும் இயல்பாகவும் வசதியாகவும் உணர வைத்தார். மிஷ்கின் சாரின் நடிப்பும், ஒவ்வொரு காட்சியிலும் அவர் வெளிப்படுத்தும் ஆற்றலும் வியக்க வைத்தன. எனக்குக் காட்சி இல்லாத நாட்களில்கூட அவரும் கீர்த்தியும் நடிக்கும் காட்சிகளைப் பார்ப்பதற்காகப் படப்பிடிப்புக்குச் செல்வேன். ‘சத்தியவான் சாவித்திரி’ படத்தில் பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம். நவம்பர் 20ஆம் தேதி வெளியாகும் இப்படத்திற்கு அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும். நன்றி.

