Home பொது இயக்குநர் நானியின் உழைப்புக்கு இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைத் தரும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது! -‘டெலிவரி...

இயக்குநர் நானியின் உழைப்புக்கு இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைத் தரும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது! -‘டெலிவரி பாய்’ படத்தின் முன் வெளியீட்டு விழாவில் நாயகன் லியோ சிவக்குமார்  

திண்டுக்கல் லியோனியின் மகன் லியோ சிவக்குமார் கதாநாயகனாக நடித்துள்ள ‘டெலிவரி பாய்’ படத்தின் முன் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.
இயக்குநர் நானி பேசியதாவது, எனது நீண்ட நாள் கனவான இயக்குநர் பயணம் ‘டெலிவரி பாய்’ படத்தின் மூலம் நனவாகியுள்ளது. இந்தப் பயணத்தில் எனக்குத் துணையாக இருந்த பெற்றோர், குடும்பத்தினர், அக்கா பரணி மற்றும் மனைவி ராதிகா ஆகியோருக்கு நன்றி. இயக்குநர் சுசீந்திரன் சாரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய அனுபவமும், அவர் என்மீது வைத்த நம்பிக்கையும் எனது வளர்ச்சிக்கு முக்கியக் காரணமாக அமைந்தது.
சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு லியோ சிவக்குமாரைச் சந்தித்து இந்தக் கதையைச் சொன்னேன். அவர் கதையை விரும்பி ஏற்றுக்கொண்டார். பல ஆண்டுகளாகப் பல போராட்டங்களையும் தயாரிப்பாளர் தேடும் சிரமங்களையும் கடந்து இந்தப் படத்தை உருவாக்கியுள்ளோம். எங்களை நம்பி ஆதரவளித்த மாதேஸ்வரன் அண்ணன் இல்லையென்றால் இந்தப் படம் உருவாகியிருக்காது. அவருக்கு எங்கள் படக்குழுவின் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பிரிகிடா, ராதிகா சரத்குமார், உதயா, விஷால் உள்ளிட்ட நடிகர்களையும், முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ள ஏழு புதிய கலைஞர்களையும் தேர்வு செய்ததில் மகிழ்ச்சி. தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் மிகச் சிறப்பாகப் பணியாற்றியுள்ளனர். படத்தைப் பார்த்த இயக்குநர் சுசீந்திரன் உள்ளிட்ட திரையுலக நண்பர்கள் பாராட்டியது எங்களுக்கு நம்பிக்கையை அளித்துள்ளது. குறிப்பாக எனது கதையை முழுமையாகப் புரிந்துகொண்டு, ஒவ்வொரு கட்டத்திலும் எனக்குத் துணையாக இருந்த லியோ சிவக்குமாருக்கு என் வாழ்நாள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அனைவரும் நவம்பர் 27ஆம் தேதி திரையரங்குகளில் ‘டெலிவரி பாய்’ படத்தைப் பார்த்து ஆதரவு அளிக்க வேண்டும். நன்றி.
கதாநாயகன் லியோ சிவக்குமார் பேசியதாவது,
‘டெலிவரி பாய்’ திரைப்படம் வரும் நவம்பர் 27ஆம் தேதி திரைக்கு வருவது எனக்கு மிகவும் உணர்ச்சிகரமான தருணம். கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தப் படத்திற்காக நானும் இயக்குநர் நானியும் கடுமையாக உழைத்திருக்கிறோம். சுமார் ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய எங்கள் பயணத்தில் ஏராளமான தயாரிப்பாளர்களைச் சந்தித்தோம். பல நிராகரிப்புகளையும் தோல்விகளையும் எதிர்கொண்டோம். ஆனால் ஒவ்வொரு முறையும் நானும் அவரும் ஒருவருக்கொருவர் துணையாக இருந்தோம். இந்தப் படம் மக்களிடம் சென்று சேர வேண்டும் என்பதுதான் எங்களுடைய ஒரே நோக்கம். இயக்குநர் நானியின் உழைப்புக்கு இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைத் தரும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
இப்படத்தில் பணியாற்றிய ஒவ்வொரு கலைஞருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். எடிட்டர் வசந்த், நடன இயக்குநர் மனோஜ், சண்டைப் பயிற்சி இயக்குநர் ஃபீனிக்ஸ் பிரபு, இசையமைப்பாளர் கே.எஸ். சுந்தரமூர்த்தி என அனைவரும் மிகப்பெரிய உழைப்பைக் கொடுத்திருக்கிறார்கள். உதயா மற்றும் துஷ்யந்த் ஆகியோரின் கதாபாத்திரங்கள் படத்தில் மிகவும் முக்கியமானவை. குறிப்பாக துஷ்யந்த் இந்தப் படத்தின் இன்னொரு ஹீரோ என்றே சொல்லலாம். பிரிகிடா இந்தக் கதாபாத்திரத்திற்குப் பொருத்தமான தேர்வு. குறும்படங்களில் இருந்தே அவரைத் தெரியும் அவருடன் நாயகனாக சேர்ந்து நடிப்பேன் என நினைத்ததில்லை. ராதிகா மேடத்துடன் பணியாற்றியது சிறந்த அனுபவம். எங்கள் படத்தை நம்பித் தயாரித்த மாதேஸ்வரன் அண்ணன் உள்ளிட்ட தயாரிப்புக் குழுவினர் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.
நான் குறும்படங்களில் நடித்து, பல்வேறு முயற்சிகள் மற்றும் போராட்டங்களுக்குப் பிறகுதான் திரைத்துறைக்கு வந்தேன். திரைத்துறைக்கு வந்த பிறகுதான் எனது தந்தையின் பெயரான லியோனியின் பெயரும் என்னுடன் இணைந்தது. எனவே, என்னை எனது தந்தையின் அடையாளத்தின் வழியாகப் பார்க்காமல், தனித்துவமான கலைஞனாகப் பார்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இந்தப் படத்தில் நான் நடித்ததில் தவறு இருந்தாலும் விமர்சிக்க உங்களுக்கு முழு உரிமை இருக்கிறது. அதேபோல் நல்ல விஷயங்கள் இருந்தால் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். அனைவரும் நவம்பர் 27ஆம் தேதி திரையரங்குகளுக்கு வந்து ‘டெலிவரி பாய்’ படத்தைப் பார்த்து ஆதரவு அளிக்க வேண்டும். நன்றி.
நடிகை பிரிகிடா சாகா பேசியதாவது,
‘டெலிவரி பாய்’ திரைப்படம் எனக்கு மிகவும் ஸ்பெஷலான படம். இயக்குநர் நானி எனக்கு இந்தப் படத்தில் வாய்ப்பளித்ததற்கு நன்றி. இதில் நான் ஏற்கெனவே நடித்த ‘பவி டீச்சர்’ கதாபாத்திரத்தை நினைவுபடுத்தும் வகையிலான ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். படக்குழுவில் பலரும் எனக்கு ஏற்கெனவே அறிமுகமானவர்கள் என்பதால், இந்தப் பயணம் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. குறிப்பாக லியோ சிவக்குமார் எனக்கு ஏழு, எட்டு வருடங்களாகத் தெரியும். அவருடன் இணைந்து நடிப்பேன் என்று எதிர்பார்க்கவில்லை. இப்படத்தில் அவரது ஆக்ஷன் மற்றும் நடிப்பு மிகவும் சிறப்பாக வந்துள்ளது.
‘செங்காத்து’ பாடல் எனக்கு மிகவும் பிடித்தமானது. இசையமைப்பாளர் கே.எஸ். சுந்தரமூர்த்தி அழகான பாடலைக் கொடுத்துள்ளார். நடன இயக்குநர் மனோஜ் அந்தப் பாடலுக்கு அமைத்த நடனமும், ஹூக் ஸ்டெப்பும் சிறப்பாக வந்துள்ளன. ராதிகா மேடம் போன்ற அனுபவமிக்க நடிகையுடன் இணைந்து பணியாற்றியது எனக்கு நிறைய கற்றுக்கொள்ளும் வாய்ப்பாக அமைந்தது. உதயா அண்ணா, துஷ்யந்த் உள்ளிட்ட அனைவருடனும் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சி. சண்டைக் காட்சிகளுக்காக உழைத்த ஃபீனிக்ஸ் பிரபு மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள்.
தமிழ் சினிமாவில் தற்போது பல்வேறு நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்கள் வெளியாகி வருவது மகிழ்ச்சியளிக்கிறது. நாம் அனைவரும் திரையரங்குகளுக்குச் சென்று திரைப்படங்களைப் பார்த்து ஆதரிக்க வேண்டும். சமீபத்தில் வெளியான ‘சத்தியவான் சாவித்திரி’ படத்தில் எனது நடிப்பைப் பாராட்டி மேடையில் குறிப்பிட்ட நடிகை கீர்த்தி சுரேஷுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ‘டெலிவரி பாய்’ திரைப்படம் வரும் நவம்பர் 27ஆம் தேதி வெளியாகிறது. அனைவரும் குடும்பத்துடன் திரையரங்குகளுக்கு வந்து படத்தைப் பார்த்து ஆதரவு அளிக்க வேண்டும். நன்றி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்