ரக்சிதா மகாலெஷ்மி நடித்து கடந்த வெள்ளிக்கிழமை வெளியான ’99/66′ படம் குறித்த விமர்சனங்களில் ‘பேக் ரவுண்ட் ஸ்கோர் அசத்தலா இருக்கு’, ‘பின்னணி இசை அட்டகாசம்’, ‘யாரு ஆர் ஆர் பண்ணிருக்கா? நல்லா இருக்கே’, ‘பி ஜி எம் படத்துக்கு பலம்’ என்றெல்லாம் குவிகிற பாராட்டுக்களால் உற்சாகத்தில் இருக்கிறார் இசையமைப்பாளர் அமர்கீத்.
எல்லாமே, ஹாரர் சப்ஜெக்ட்க்கு எப்படிப்பட்ட திகிலூட்டும் இசையைத் தர வேண்டும் என்பதை மனதில் வைத்து ஈடுபாட்டோடு பணியாற்றியதற்கு கிடைத்த பலன்கள்.
பத்திரிகைகள், இணையதளங்கள் மூலம் கிடைக்கிற பாராட்டுக்களைத் தாண்டி தியேட்டரில் படம் பார்த்துவிட்டு வரும் ரசிகர்கள் தங்கள் முன் மைக்கை நீட்டி கருத்து கேட்கும் டி வி சேனல் நிருபர்கள், யூ டியூபர்களிடம் படத்தின் பின்னணி இசை நன்றாக இருந்ததாக சொல்வது அமர்கீத்துக்கு அடுத்தடுத்த படங்களில் இதை விட சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்ற உத்வேகத்தை தந்துள்ளது.
அமர்கீத் பிரபல இசையமைப்பாளர் செளந்தர்யனின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. அவரை சந்தித்தோம்…
’99/66 படத்துல உங்க பின்னணி இசைக்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைச்சிருக்கு. எப்படி ஃபீல் பண்றீங்க?’
”என்னைப் பார்த்தாலே தெரியுமே, ஹேப்பியா இருக்கேன். ஏற்கனவே ஒரு அனிமேஷன் படத்துக்கும், மையல்னு ஒரு படத்துக்கும் மியூஸிக் பண்ணிருக்கேன். அதுக்கும் நல்ல பாராட்டுக்கள் கிடைச்சுது. இந்த 99/66 ஹாரர் படம்கிறதால ரொம்ப பேர் பேக் ரவுண்ட் மியூஸிக்கை கவனிச்சிருக்காங்க. ஏன்னா ஹாரர் படத்துல சீன்களை வெறுமனே பார்த்தா எந்த ஃபீலிங்கும் வராது. பேக் ரவுண்ட் மியூஸிக் சேருறப்போதான் ஒரு மிரட்டலான அனுபவம் கிடைக்கும். அதை என் மியூஸிக்ல கொண்டு வந்திருக்கேன்னு நம்பறேன். கிளைமாக்ஸ்ல ஒரு திருவிழா சீன் வரும். அதுல ஸ்பெஷலா சில சப்தங்களை சேர்த்திருந்தேன். இப்போ கிடைச்சிருக்கிற வரவேற்பு அடுத்தடுத்து இன்னும் பெட்டரா மியூஸிக் பண்ணணும்கிற மனநிலையை உருவாக்கியிருக்கு.”
’99/66 படத்துல பேக் ரவுண்ட் மியூஸிக் மட்டும் பண்ணீங்க. அடுத்தடுத்த படங்கள்லயும் அதே மாதிரி பேக் ரவுண்ட் மியூஸிக் மட்டுமா?’
”அச்சச்சோ, அப்படிலாம் இல்லை. பாடல்களுக்கும் மியூஸிக் பண்ணணும். அதுலயும் ரசிகர்களை மயக்கணும். அதுக்கான வாய்ப்பும் கிடைச்சிருக்கு. இரண்டு படங்கள் கமிட்டாகி ஒர்க் பண்ணிக்கிட்டிருக்கேன். ரெண்டும் வெவ்வேறு ஜானர்கள். பாடல்களும் சரி, பேக் ரவுண்ட் மியூஸிக்கும் சரி நிச்சயம் பேசப்படும். அந்த படங்கள் பத்தி தயாரிப்பாளர்கள் தரப்புல இருந்து சீக்கிரமே அறிவிப்புகள் வரும்.”
‘திரைப்படங்கள் மூலமா மக்கள்கிட்டே போய் சேர்றதை விட ஆல்பம் சாங்ஸ் மூலமா நல்ல ரீச் கிடைக்குது. இப்போகூட சாய் அபயங்கரோட பவழமல்லி ஆல்பம் பாடல் பெருசா ஹிட்டாகியிருக்கு. அதெல்லாம் பத்தி என்ன நினைக்கிறீங்க?’
”உங்ககிட்டே பேசிக்கிட்டே நான் ஒர்க் பண்றேன்ல. அதுவே ஒரு மியூஸிக் ஆல்பத்துக்காகத்தான். மொத்தம் அஞ்சு பாட்டு. அஞ்சும் அஞ்சுவிதமா இருக்கும். டைட்டில் ஃபைனல் ஆனதும் சொல்றேன். ஆல்பம் ரிலீஸ் ஃபங்ஷனுக்கு அழைப்பு வரும். வந்துடுங்க.”
‘பார்க்க மேன்லியா இருக்கீங்க. படங்கள்ல ஹீரோவாகூட நடிக்கலாம். அப்படி ஏதாச்சும் முயற்சி பண்றீங்களா?’
”என்னைப் பார்த்தா அப்படிலாமா தெரியுது? ஏதோ நீங்க சொல்றீங்க. தஇன்னைக்கு இருக்கிற காலகட்டத்துல எதை வேணாலும் செய்யலாம். வைரல் ஆகலாம். ஆனா, என்னைப் பொறுத்தவரை இப்போதைக்கு கவனம் முழுக்க மியூஸிக் மட்டும்தான். என்னோட பெயர் நிலைச்சு நிக்கிற மாதிரியான பாடல்கள், பின்னணி இசைன்னு இதுல பெருசா சாதிக்கணும். அதன்பிறகு சில விஷயங்களை மனசுல வெச்சிருக்கேன். அதுல ஈடுபடணும்.”
‘பழைய பாடல்களை ரீ மிக்ஸ் பண்றப்போ ஆடியன்ஸ்கிட்டே ஒரு வைஃப் கிரியேட் ஆகுது. அப்படி நீங்க ரீ மிக்ஸ் பண்றதா இருந்தா எந்த பாடலை தேர்ந்தெடுப்பீங்க?’
”நிறைய சொல்லலாம். எனக்கு என்னோட அப்பா மியூசிக்ல சூப்பர் ஹிட்டான சம்பா நாத்து பாட்டைக்கூட ரீ மிக்ஸ் பண்ணணும்னு நினைச்சிருக்கேன்.”
‘உங்களுக்கு பிடித்த இசையமைப்பாளர் யார்?’
”எல்லோரிடமும் ஒரு ஸ்பெஷல் இருக்கும். அதனால எல்லோரையும் பிடிக்கும்.”
அமர்கீத்திடம் உரையாடியதிலிருந்து பேச்சில் எந்தவித சர்ச்சையிலும் சிக்கிக்கொள்ளக்கூடாது என்ற தெளிவு இருப்பதையும், திறமை குறித்த எந்த பந்தாவும் காட்டாதவர் என்பதையும், முன்னேற்றம் மட்டுமே நமக்கான அங்கீகாரம் என்பதை மனதில் வைத்து பயணிப்பவர் என்பதையும் தெரிந்துகொள்ள முடிந்தது.
அவரது எல்லா முயற்சிகளும் கலை வடிவம் பெற்று பெரியளவிலான வெற்றியைத் தர வாழ்த்தி விடை பெற்றோம்.
-சு.கணேஷ்குமார்

