வெற்றி, ஷில்பா மஞ்சுநாத், தம்பி ராமையா, மகேஷ் தாஸ், ரெடின் கிங்ஸ்லி, சுபத்ரா, அனிகா உள்ளிட்ட பலரது நடிப்பில் அனீஸ் அஷ்ரஃப் இயக்கியுள்ள ‘சென்னை ஃபைல்ஸ் – முதல் பக்கம்’ திரைப்படம் ஆகஸ்ட் 1ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. முன்னதாக இசை வெளியீடு சென்னையில் நடைபெற்றது.
நிகழ்வில் பேசிய நாயகன் வெற்றி, ”இந்தத் திரைப்படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பளித்த தயாரிப்பாளருக்கும், இயக்குநருக்கும் முதலில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இயக்குநருடைய குறும்படத்தை பார்த்தேன். பார்த்ததும் நம்பிக்கை பிறந்தது. அதில் அவருடைய திறமை பளிச்சிட்டது. அதேபோல் சொன்ன நாட்களில் சொன்னபடி படப்பிடிப்பை நிறைவு செய்தார். நீண்ட நாட்களுக்குப் பிறகு உணர்வுப்பூர்வமான கிரைம் திரில்லர் படத்தை உருவாக்கி இருக்கிறோம். படப்பிடிப்பு தளத்தில் குடும்பமாக இணைந்து பணியாற்றினோம். படத்தில் நடித்த நடிகர்கள் நடிகைகள் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஆகஸ்ட் ஒன்றாம் தேதி படம் திரையரங்குகளில் வெளியாகிறது. அனைவரும் திரையரங்கத்திற்கு குடும்பத்துடன் வருகை தந்து பார்த்து ரசித்து பேராதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.
இயக்குநர் அனீஸ் அஷ்ரஃப், ”நான் ஏ ஆர் முருகதாஸிடம் உதவியாளராக பணிபுரிந்திருக்கிறேன். மிஷ்கின் இயக்கத்தில் வெளியான ‘பிசாசு ‘ திரைப்படத்தை கன்னடத்தில் ‘ராட்சசி’ என்ற பெயரில் இயக்கி இருக்கிறேன். தமிழில் முதன் முதலாக நான் இயக்கி இருக்கும் படம் இது. படத்தின் பெயர் ‘சென்னை ஃபைல்ஸ் முதல் பக்கம்’. தமிழில் எனக்கு இது முதல் பக்கம். என்னுடைய தயாரிப்பாளர் மகேஸ்வரன் தேவதாசுக்கும் இதுதான் முதல் படம்.
இது ஒரு முக்கியமான மேடை. இந்த மேடை மீது விருப்பப்படாத உதவி இயக்குநர்கள் ..இணை இயக்குநர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். எனக்கு இன்று இந்த மேடை சாத்தியமாகி இருக்கிறது. உங்கள் அனைவருக்கும் விரைவில் சாத்தியமாக வேண்டும் என பிரார்த்திக்கிறேன்.
எனக்கு சிங்கப்பூரில் உள்ள ஒரு நண்பர் வாயிலாக தயாரிப்பாளர் மகேஸ்வரன் தேவதாஸ் போன் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு வில்லனாக நடிக்க வேண்டும் என்ற அவரது விருப்பத்தையும் தெரிவித்தார். அவரது புகைப்படத்தை பார்த்த பிறகு உங்களை வில்லனாக அறிமுகப்படுத்துகிறேன் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தேன். ஏனென்றால் அவருடைய கட்டுமஸ்தான உடலமைப்பு தான் முக்கிய காரணம். அதன் பிறகு அவருக்காக குறும்படம் ஒன்றை இயக்கினேன். அந்தக் குறும்படத்தில் அவர் தன் நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி இருந்தார். அதன் பிறகு இப்படத்தின் கதையை அவரிடம் முழுமையாக விவரித்தேன். அவருக்கும் பிடித்திருந்தது. படத்தின் பணிகள் தொடங்கின. தயாரிப்பாளராக இருந்தாலும் நண்பராகவும், நடிகராகவும் பழக தொடங்கினார். அவருடைய ஈடுபாடு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
திட்டமிட்டபடி படத்தின் படப்பிடிப்பை தொழில்நுட்ப கலைஞர்களின் ஒத்துழைப்புடன் நிறைவு செய்தோம்.
முதல் பக்கம் என்பது கதைக்கு பொருத்தமானதாக இருந்ததால் வைத்திருக்கிறோம். சென்னை ஃபைல்ஸ் முதல் பக்கம் என்பது சென்னையில் நடைபெற்ற ஒரு குற்ற சம்பவத்தின் முதல் பக்கத்தில் இடம் பிடித்திருக்கும் தகவல் என வைத்துக் கொள்ளலாம்.
இயக்குநர் ஏ ஆர் முருகதாஸுடன் பணியாற்றிய போது அவரிடமிருந்து நான் கற்றுக் கொண்ட ஒரு விஷயம் என்னவெனில், அவர் ஒரு கதையை விவாதிக்க தொடங்குவதற்கு முன் சோஷியல் மெசேஜ் ஒன்றை தீர்மானித்து, அதை மக்களுக்கு சொல்ல வேண்டும் என முடிவு செய்வார். இதற்காகத்தான் அவர் கதையையும், காட்சிகளையும், திரைக்கதையையும் உருவாக்குவார். அதனால் தான் நானும் இந்த படத்தில் ஒரு சோஷியல் மெசேஜை வைத்து கதையையும், திரைக்கதையையும் உருவாக்கி இருக்கிறேன்.
கிரைம் திரில்லராக நிறைய படங்கள் வெளியாகி இருக்கின்றன. பேய் படங்களும், திரில்லர் படங்களும் தயாரிப்பாளர்களின் முதலீட்டிற்கு பாதுகாப்பானவை என சொல்வார்கள். க்ரைம் திரில்லர் ஜானரில் சோஷியல் மெசேஜை வைத்து இந்த படத்தை உருவாக்கி இருக்கிறோம். இது ரசிகர்களை கவரும் என நம்புகிறேன்.
ஒளிப்பதிவாளர் அரவிந்த், இசையமைப்பாளர் ஏ ஜி ஆர், படத்தொகுப்பாளர் வி எஸ் விஷால் என அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் தங்களின் முழுமையான ஒத்துழைப்பை வழங்கினர். அதற்காக அவர்களுக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தப் படத்திற்கு நாயகனாக வெற்றியை ஏன் தேர்வு செய்தீர்கள் என்று என்னிடம் பலர் கேட்டனர். இந்தப் படத்தின் கதையை தயாரிப்பாளரிடம் சொன்ன பிறகு, யார் ஹீரோ என அவர் கேட்டபோது, வெற்றி என்று ஒரே ஒரு பெயரை தான் நான் சொன்னேன். மதுரையிலிருந்து வரக்கூடிய ஒரு கிரைம் நாவலாசிரியரின் மகன் எனும் அந்த கதாபாத்திரத்திற்கு வெற்றி தான் பொருத்தமாக இருப்பார் என நான் உறுதியாகச் சொன்னேன். அத்துடன் இப்படத்தின் வில்லன் உடன் மோத வேண்டும் என்றால் அதற்கு இணையான உடல் தோற்றம், உடல் மொழி கொண்ட நடிகர் வெற்றி மட்டும்தான் என விளக்கமும் அளித்தேன், இதனை தயாரிப்பாளரும் ஒப்புக்கொண்டார்.
அதன் பிறகு வெற்றியை சந்தித்து இப்படத்தின் கதையை முழுவதுமாக சொன்னேன். அவர் கதையை கேட்ட பிறகும் முழு திரைக்கதையை வாசித்த பிறகும் நடிக்க ஒப்புக்கொண்டார். அவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
நாயகி ஷில்பா மஞ்சுநாத்தை தொடர்பு கொண்டு பேச்சு வார்த்தை நடத்தினேன் அவர் அப்போது டெல்லியில் இருந்ததால் கதை முழுவதையும் போனில் சொன்னேன். அப்போது அவர் நான் நடிக்கும் படத்தில் என் கதாபாத்திரம் வலிமையாக இருக்கிறதா என பார்ப்பேன், அல்லது அந்தத் திரைப்படம் வெற்றி பெறும் திரைப்படமாக இருக்குமா என்பதை பார்ப்பேன். இந்த படத்தில் இரண்டுமே இருப்பதால் நான் நடிக்கிறேன் என்று சொன்னார். இந்தப் படத்தில் அவர் ரிப்போர்டராக தான் நடிக்கிறார். அவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் இந்தத் திரைப்படத்தில் தம்பி ராமையா, ரெடின் கிங்ஸ்லி ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.