அப்படி பார்த்தால் லவ்; இப்படி திரும்பினால் பிரேக் அப்; கொஞ்சநாள் போனால் மூவ் ஆன்… ஜென் சி தலைமுறைக்கு எல்லாமே ஜஸ்ட் லைக் தட் சமாச்சாரங்கள்தான். அப்படியென்றால் இந்த உண்மையான காதல், உயிரை உருக்கும் காதல் என்பதெல்லாம் கிடையவே கிடையாதா? எப்படி இல்லாமல் போகும். இதோ என்னிடம் இருக்கிறது என ‘பூக்கி’யை தூக்கிக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் கணேஷ் சந்திரா.
கைலாஷும் ஆழியும் ஆறு வருட காதலர்கள். எல்லா காதலர்களுக்குள்ளும் வருகிற சண்டை சச்சரவுகள் அவர்களுக்குள்ளும் வருகிறது. அப்படி ஒரு சண்டையில் பிரேக் அப்’பும் நடக்கிறது. அந்த வலியிலிருந்து மீண்டுவர பல வழிகளைக் கடைப்பிடிக்கிறார்கள். ‘வலி தீர வழியில்லையே’ என்கிற நிலைமை. அப்படியே ஒரு வருடம் கடந்த நிலையில் கைலாஷுக்கு ஒரு பெண் மீது ஈர்ப்புவர, ஆழியின் மனதுக்கு இதம் தர ஒரு ஆண் கிடைக்கிறார். அந்த புது உறவுகளால் அவர்களின் வாழ்க்கையில் நடக்கும் மாறுதல்களே மீதிக்கதை…
கைலாஷாக இளமைத் துடிப்புமிக்க அஜய் தீஷன். காதலில் மிதப்பது, பிரேக் அப் வேதனையில் துடிப்பது, மீண்டும் காதலியுடன் பேசும் சந்தர்ப்பத்தில் கண் கலங்குவது, புது காதலியின் அணுகுமுறையில் இருக்கும் தவறான விஷயத்தை கண்டு கொதிப்படைவது, அப்பாவின் சொந்த வீட்டுக் கனவை நிறைவேற்றுவது என கதைக்கேற்ற உணர்வுகளை வெளிப்படுத்தும் விதம் இயல்பாக இருக்கிறது. காதலியை மறக்க ஜிம்மில் இணைந்து உடற்பயிற்சியில் ஈடுபடுவது, அம்மாவை கூட்டிக்கொண்டு சொந்தபந்த விஷேச வீடுகளில் தனக்கான துணையைத் தேடியலைவது என நீளும் காட்சிகளில் கலகலப்பூட்டவும் செய்கிறார்.
அஜய் தீஷனின் நடிப்புக்கு 40 மார்க் கொடுக்கலாம் என்றால் அவரது காதலியாக வருகிற தனுஷாவின் உணர்வுகளை பிரதிபலிக்கும் துல்லியத்தன்மைக்கு டபுள் மார்க் கொடுக்கலாம்.
அஜயின் இரண்டாவது காதலியாக வருகிற ஷ்யாரா ஷர்மியிடம் அழகான முகவெட்டும் கவர்ச்சியான உடற்கட்டும் கச்சிதமான நடிப்பும் காம்போவாக கலந்திருக்கிறது.
ஹீரோவின் அப்பாவாக பாண்டியராஜன், அம்மாவாக இந்துமதி மணிகண்டன், நண்பர்களாக விவேக் பிரசன்னா, ஆதித்யா கதிர், பிளாக் பாண்டி, ஹீரோயினின் அம்மாவாக சுந்தரா டிராவல்ஸ் ராதா, ஜிம் கோச்சாக பிக்பாஸ் சத்யா என பலரும் மீட்டருக்குள் மிங்கிளாகிறார்கள்.
தெலுங்கு தேச சுனில் ஆன்மிகம் என்ற பெயரில் அடிக்கும் கூத்தும், காட்டும் வில்லத்தனமும் படத்தின் எனர்ஜிடிக் எபிசோடுகள்.
எஸ் டி ஆர் சிலம்பரசன் படங்களிலும் மேடைகளிலும் காதல் சார்ந்து பேசியவற்றை ஆங்காங்கே தூவியிருப்பது ‘வைஃப்’க்கு கேரண்டி.
பாடல்கள் பலவிதம்; ஒவ்வொன்றும் ஒருவிதம் என்றில்லாமல் விஜய் ஆண்டனி இசையில் உற்சாகமூட்டுவதுமாய் காதல் பரவசம் பரப்புவதுமாய் இரண்டு கேட்டகரியில் ஏகப்பட்ட பாடல்கள். கதையோடு ஒட்டிக் கொண்டிருக்கிற அளவுக்கு மனதில் தொற்றிக்கொள்ள மறுக்கின்றன. பின்னணி இசை அடி தூள் ரகம்.
காட்சிகள் அத்தனையிலும் எலைட் தன்மை ஆக்கிரமித்திருக்க, அந்த ரிச்னஸ் குறையாமல் படமாக்கியிருக்கிறார் இயக்குநர் கணேஷ் சந்திரா.
புதிய பரிதியின் கதை, திரைக்கதை, வசன பங்களிப்பில் படத்தின் முன்பாதி நுற்றுக்கணக்கான சோஷியல் மீடியா ‘ரீல்ஸ்’களை தொடர்ச்சியாக பார்ப்பது போலிருக்க சற்றே சலிப்புணர்வு எட்டிப் பார்க்கிறது. அதையெல்லாம் மறக்கடிக்கும் விதமாக பின்பாதி வேறோரு வேகத்தில் டேக் ஆப் ஆவது எதிர்பாராதது. அது காதலித்த, காதலித்துக் கொண்டிருக்கிற, காதலிக்கப் போகிற அனைவருக்கும் ஒவ்வொரு விதத்தில் பிடித்துப்போகும்.
பூக்கி _ காதலுக்கு மரியாதை!
-சு.கணேஷ்குமார்


