நாயகன் ஆதிரன் குடிசைப் பகுதியில் பிறந்து வளர்ந்து, தடகள விளையாட்டுப் போட்டிகளில் ஒன்றான ஓட்டப் பந்தயத்தில் தேர்ச்சியடைந்து, பல தடைகளைத் தாண்டி தேசிய சாதனை படைக்கிறான். காமன்வெல்த் போட்டியில் பங்கேற்கும் தகுதி பெற்றவனாகிறான். விளையாட்டுத் துறையிலிருக்கும் அரசியல், சாதிப் பாகுபாடு, அதிகாரத்தை தவறாக பயன்படுத்துதல் என சிலபல காரணங்களால் அவனது வாய்ப்பு தடுக்கப்படுகிறது.
இப்படி காலங்காலமாக பார்த்துக் கொண்டிருக்கிற ஸ்போர்ட்ஸ் படங்களுக்கான வழக்கமான டெம்ப்ளேட்டில் துவங்கும் கதை, ஆதிரன் தனக்கு நேர்ந்துள்ள வாய்ப்பு பறிப்பு விவகாரத்தை நீதிமன்றத்துக்கு எடுத்துச் செல்லும்போது நிமிர்ந்து உட்கார வைக்கிறது.
நீதிமன்றத்தில் அதிரன் சார்பாக அதிரனே வாதாடுவதும், அவனை வீழ்த்த நடக்கும் சூழ்ச்சிகளை முறியடித்து தகுதிக்கான வாய்ப்பை மீட்டெடுப்பதுமாக கடந்தோடும் காட்சிகளில் விறுவிறுப்புக்கு குறைவில்லை. இயக்கம் தென்பாதியான்
ஆதிரனாக கொட்டபாடி ஜே ராஜேஷ் என்கிற கே.ஜே.ஆர். தயாரிப்பாளராக இருந்து நடிகராக, கதையின் நாயகனாக மாறி நிற்பவர் வறுமையிலும் போட்டிகளில் சாதிக்கத் துடிக்கும் எளிய விளையாட்டு வீரனாக இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். ஸ்போர்ட்ஸ் மேனுக்கு பொருத்தமான உடற்கட்டும் அசத்துகிறது. நீதிமன்ற வாதாடும் காட்சிகளில் வலி சுமந்த வார்த்தைகளும் அதற்கேற்ற உடல்மொழியும் அப்ளாஸ் அள்ளுகிறது.
நாயகனைப் போலவே விளையாட்டில் சாதிக்கத் துடிக்கும் வீராங்கனையாக சிந்தூரி விஸ்வநாத் கவனம் பெறும்படி நடித்திருக்க, நாயகனின் அம்மாவாக ரமா குப்பை அள்ளும் தொழிலாளியாக வந்து பரிதாபப்பட வைக்கிறார்.
அமைச்சராக மன்சூர் அலிகான், நீதிபதிகளாக மோகன்ராம், ரங்கராஜ் பாண்டே, வழக்கறிஞராக விஜி வெங்கடேஷ், விளையாட்டு வாரிய அதிகாரிகளாக அருள் டி சங்கர், அஜித் கோஷி என இன்னபிற கேரக்டர்களில் வருகிறவர்களின் பங்களிப்பு கச்சிதம்.
உணர்ச்சிகரமான காட்சிகளுக்கு உயிரோட்டம் தந்திருக்கிறது ஜிப்ரான் வைபோதாவின் பின்னணி இசை. விஸ்வநாத்தின் கேமரா ஓட்டப்பந்தயக் காட்சிகளையும், சென்னை குடிசைப் பகுதிகளின் வாழ்வியல் சூழலையும் தரமாக பதிவு செய்துள்ளது.
சாதிக்கத் துடிக்கும் ஏழை எளிய குடும்பத்து விளையாட்டு வீரர்களின் நிஜப் போராட்டத்தைப் பேசுவதால், ரசிகர்கள் குறிப்பாக விளையாட்டில் ஆர்வமுள்ளவர்கள் படத்தை தியேட்டரில் பார்த்து பாராட்டு என்கிற அங்கீகாரத்தை கொடுக்கலாம்.


