திருநங்கைகள் என கெளரவத்தோடு அழைக்கப்படுகிற மூன்றாம் பாலினத்தவர்களின் ஆரோக்கியத்தில் அக்கறை கொண்டு, சிம்ஸ் மருத்துவமனையும், தோழி தொண்டு நிறுவன அமைப்பும் இணைந்து இலவச ஹெபடைடிஸ் தடுப்பூசி முகாம் நடத்துகின்றன!
சென்னை, 29 ஏப்ரல் 2022: உலக தடுப்பூசி மருந்து வாரம் 2022 நிகழ்வையொட்டி, மூன்றாம் பாலின சமூகத்தினரின் நலனுக்காக சென்னையை தலைமையகமாகக் கொண்டு இயங்கிவரும் தோழி அமைப்புடன் ஒருங்கிணைந்து ஹெப்படைடிஸ் பி தடுப்பூசி செலுத்தலுக்கான இலவச முகாமை சென்னையின் பிரபல மருத்துவமனையான சிம்ஸ் (SIMS), சேத்துப்பட்டில் இன்று வெற்றிகரமாக தொடங்கியிருக்கிறது.
சிறப்பாக நடத்தப்பட்ட இம்முகாம், ஹெப்படைடிஸ் நோய் வராமல் முன்தடுப்பதற்கான அவசர தேவையை வலியுறுத்தியதுடன் அதன் மீதான விழிப்புணர்வு அமர்வையும் நடத்தியது. திருநங்கையர், திருநர் ஆகியோரை உள்ளடக்கிய மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த 1000 நபர்களுக்கு இலவசமாக ஹெப்படைடிஸ் பி தடுப்பூசி மருந்துகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டிருக்கும் இச்சிறப்பு செயல்திட்டத்தின் 2022 மே 5ம் தேதி வரை சிம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் நடைபெறும். பிரபல நடிகையும், சமூக செயல்பாட்டாளருமான திருமதி. நமீதா மாரிமுத்து, மற்றும் சிம்ஸ் மருத்துவமனையின் சமூக மருத்துவ துறையின் தலைவர் டாக்டர். பி. குகானந்தம் ஆகியோர் இந்நிகழ்வை தொடங்கி வைத்தனர்.
ஹெப்படைடிஸ் பி என்பது உயிருக்கு ஆபத்தான ஒரு கல்லீரல் நோயாகும். ஹெப்படைடிஸ் பி நச்சுயிரியால் (HBV) ஏற்படும் இந்நோய், தீவிரமானதாகவும், ஆறு மாதங்களுக்கும் அதிகமாக நீடிப்பதாகவும் ஆகக்கூடும். கல்லீரல் செயலிழப்பு, புற்றுநோய், வாழ்நாள் முழுவதும் நீடிக்கக்கூடிய கல்லீரல் பாதிப்பான இழைம வளர்ச்சி ஆகிய பாதிப்புகளுக்கான இடர் வாய்ப்புகளை, நாட்பட்ட, தீவிர ஹெப்படைடிஸ் பி அதிகரிக்கிறது. 2019ம் ஆண்டில் உலகளவில் 296 மில்லியன் நபர்கள் நாட்பட்ட ஹெப்படைடிஸ் பி தொற்றோடு வாழ்ந்து வருகின்றனர் என்று உலக சுகாதார நிறுவனம் மதிப்பிட்டிருந்தது. ஒவ்வொரு ஆண்டும் 1.5 மில்லியன் நபர்களுக்கு புதிதாக இத்தொற்று ஏற்படுகிறது மற்றும் இந்நோய் தொடர்பான சிக்கல்களின் காரணமாக 1,15,000-க்கும் அதிகமான இந்தியர்கள் ஒவ்வொரு ஆண்டும் உயிரிழக்கின்றனர் என்பது கவலை ஏற்படுத்தும் உண்மையாகும். பொதுமக்களின் உடல்நலத்தை பாதுகாப்பதற்காக இந்த வைரஸ் (நச்சுயிரி) குறித்து சமூகத்தினர் மத்தியில் அறிவையும், விழிப்புணர்வையும் உருவாக்க தோழி அமைப்பின் ஒத்துழைப்போடு சிம்ஸ் மருத்துவமனை முனைப்புடன் செயலாற்றி வருகிறது; ஹெப்படைடிஸ் பி நோய் தொடர்பாக மக்கள் மத்தியில் நிலவும் அவப்பெயர் மற்றும் தவறான கருத்துக்களை அகற்றுவதும் இந்நடவடிக்கையின் மற்றொரு நோக்கமாகும்.
பிரபல நடிகையும், சமூக செயல்பாட்டாளருமான திருமதி. நமீதா மாரிமுத்து, இம்முகாமை தொடங்கி வைத்து பேசியதாவது: “இந்த தடுப்பூசி முகாம் நிகழ்வில் பங்கேற்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. மூன்றாம் பாலின சமூகத்தினருக்காக பயனுள்ள இந்நடவடிக்கையை எடுத்திருக்கும் சிம்ஸ் மருத்துவமனையை நான் மனமார பாராட்டுகிறேன். ஹெப்படைடிஸ் பி தடுப்பூசி செலுத்திக்கொள்ளாமல் இருப்பதனால் ஏற்படக்கூடிய ஆபத்துகளைப் பற்றி பெரும்பாலான நபர்கள் இன்னும் அறியாமல் இருக்கின்றனர். இந்த சீரிய முயற்சியின் மூலம் இது குறித்த விழிப்புணர்வு அனைத்து மக்கள் மத்தியிலும் அதிகரித்திருப்பது எனக்கு மகிழ்ச்சி தருகிறது.”
சிம்ஸ் மருத்துவமனையின் சமூக மருத்துவ துறையின் தலைவர் டாக்டர். பி. குகானந்தம் இந்நிகழ்ச்சியின்போது பேசுகையில், “ஹெப்படைடிஸ் பி தடுப்பூசி மருந்து வழக்கமாக சிறு வயது குழந்தைகளுக்கே தரப்படுகிறது. வளர்ந்த பிறகு வாழ்க்கையின் பிந்தைய நிலைகளில் இத்தொற்று ஏற்படுவதற்கான ஆபத்து இருப்பதனால் ஒரு அல்லது இருமுறை இத்தடுப்பூசி மருந்தை பூஸ்டராக வயதுவந்த நபர்கள் செலுத்திக்கொள்வது அவசியமாக இருக்கிறது. எனவே, இதுபற்றிய விழிப்புணர்வை மக்கள் மத்தியில் உருவாக்க நாங்கள் தீவிரமாக செயலாற்றிவருகிறோம். ஆகவே தான் இத்தடுப்பூசி மருந்தின் முக்கியத்துவம் மீது விழிப்புணர்வை அதிகரிப்பதோடு சேர்த்து நோய் வராமல் தடுப்பதற்கான செயல்திட்டத்தையும் மற்றும் சிகிச்சை பராமரிப்பையும் மூன்றாம் பாலினம் போன்ற இப்பிரிவினருக்கு வழங்குவதற்காக சிம்ஸ் மருத்துவமனை சுய முனைப்புடன் இத்திட்டத்தை தொடங்கியிருக்கிறது,” என்று கூறினார்.
மூன்றாம் பாலின சமூகத்தினருக்கு பிற மக்களைப் போன்ற அதே தரமான சேவைகள் கிடைக்கக்கூடிய, சமத்துவம் நிலவும் சூழலை உருவாக்கவும் மற்றும் தேவையில் இருக்கும்போது ஆதரவை, குறிப்பாக சிகிச்சை பராமரிப்பு விஷயத்தில் அவர்கள் பெறுமாறு உதவும் நோக்கத்தோடும் தோழி அமைப்பு பணியாற்றிவருகிறது. இந்த குறிக்கோளை எட்டுவதற்கு மூன்றாம் பாலின சமூகத்தினர் மீதும் மற்றும் அவர்களது அனுபவங்கள் மீதும் சிறப்பான புரிதல் அவசியமாக இருக்கிறது என்பதை தோழி அமைப்பு உணர்ந்திருக்கிறது; எனவே இதன் மீதான விழிப்புணர்வை மக்கள் மனதில் உயர்த்துவதற்காக அர்ப்பணிப்பு உணர்வுடன் செயலாற்றுகிறது.