1000 கோடி செலவில், 2000 கோடி பட்ஜெட்டில் என எடுக்கப்படும் பிரமாண்ட ஹாலிவுட் படங்களைப் போல் 10 லட்சம், 20 லட்சம் செலவில் எடுக்க முடியுமா?
இப்படியொரு கேள்வியை யாரிடம் கேட்டாலும் ‘நெவர், முடியவே முடியாது’ என்று சொல்லவே வாய்ப்புகள் அதிகம். ஆனால், சவாலான முயற்சியில் அப்படியொரு படத்தை எளிய பட்ஜெட்டில் எடுத்துக் காட்டியிருக்கிறார் இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார்.
‘வெங்காயம்’ என ஒரு படம் எடுத்து, திரையுலகின் கவனத்தை ஈர்த்த சங்ககிரி ராஜ்குமார், அந்த படத்தை எப்படி எடுத்தார் என்பதைத் தொகுத்து பயாஸ்கோப் என்ற திரைப்படமாக்கினார். அடுத்த அட்டம்ட் இந்த ‘ஒன் மேன்.’
கதை, திரைக்கதை, வசனம் எழுதி படத்தை இயக்கியது, நூற்றுக்கணக்கான வேடங்களில் நடித்தது, ஒளிப்பதிவு செய்தது, பாடல் எழுதியது, பாடியது, இசையமைத்தது, படத் தொகுப்பு செய்தது, படப்பிடிப்புக்காக ட்ராலி இழுத்தது என ஒரே நபராக 70க்கும் மேற்பட்ட வேலைகளைச் செய்து இந்த படத்தை உலக சாதனைப் படைப்பாக்கியிருக்கிறார்.
ஐந்து இளைஞர்கள், ஐந்து பேரும் விஞ்ஞானிகள். அவர்கள் முன், ஒரு சோதனையைச் செய்து பார்க்கும் வாய்ப்பு கிடைக்கிறது. அது வெற்றியடைந்தால் 10 நாட்களுக்கு உலகில் வேறு எந்த உயிரினமும் இருக்காது. ஐந்து பேரும் அந்த உலகமகா விபரீத பரிசோதனைக்கு தங்களை உட்படுத்திக் கொள்கிறார்கள். அதன் விளைவுகளே மீதிக் கதை…
ஐந்து விஞ்ஞானிகளாக தோற்ற மாற்றம், குரல் மாற்றம், உடல்மொழி மாற்றம் என வெரைட்டி காட்டியிருப்பவர் கதையின் மற்ற அனைத்து கதாபாத்திரங்களையும் ஏற்று கவனிக்க வைக்கிறார்.
முழுக்க முழுக்க வித்தியாசமான சயின்ஸ் ஃபிக்சன் கதைக்களத்துக்கு பொருத்தமான பின்னணி இசையைத் தந்திருப்பவர் பாடல்களுக்கான இசையில் உற்சாகத்தை தக்க வைக்கிறார்.
ரயில் விபத்து, விமான விபத்து என காட்சிக்கு காட்சி சிஜி தொழில்நுட்பத்தில் புகுந்து புறப்பட்டு ஆச்சரியத்தை அள்ளித் தருகிறார்.
இந்த படத்தை தனி மனிதனாக உருவாக்கியது பற்றி படத்தின் நிறைவில் இணைத்திருக்கும் மேக்கிங் வீடியோவால் அடடே என்ற உணர்வையும் எழுந்து நின்று கை தட்டலாம் என்ற எண்ணத்தையும் உருவாக்குகிறார்.
இது சமூகத்துக்கு நன்மை தருகிற படைப்பா?
ம்ஹூம்.
இது கமர்சியல் படங்களை விரும்பும் ரசிகர்களை திருப்திபடுத்துமா?
இது கமர்சியல் அம்சங்கள் நிரம்பிய படம்தான் என்றாலும் சந்தேகம்தான்.
எதற்காக பார்க்கலாம்?
நம்மில் ஒருவர் செய்திருக்கிற சாதனையை ஊக்குவிப்பதற்காக.
யாருக்கு பிடிக்கும்?
வித்தியாசமான படங்களைத் தேடித்தேடி பார்ப்பவர்களுக்கு.
படத்துக்கு கிடைக்க வேண்டியது?
விருதுகளும் பாராட்டுக்களும்.
சங்ககிரி ராஜ்குமாரிடம் எதிர்பார்ப்பு?
சோதனை முயற்சியெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். அடுத்த படத்தை எல்லோருக்குமானதாக எடுங்க சார்.
-சு.கணேஷ்குமார்

