Home பொது பீப் சினிமா விமர்சனம்

பீப் சினிமா விமர்சனம்

இளைஞன் இளந்தேவன் பாலியல் தொழிலில் இருக்கிற ஒரு பெண்ணுடன் நட்பாகப் பழகுகிறான். ஒரு கட்டத்தில் அவள் இறந்துபோக, போலீஸ் அவளை இளந்தேவன் கொலை செய்திருக்கலாம் என சந்தேகப்படுகிறது; விதவிதமாக விசாரிக்கிறது.

இளந்தேவன் தான் கொலை செய்யவில்லை என்பதை நிரூபித்து, கொலை செய்தது யார் என கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்குகிறான். அவனிடம்  போட்டோக்களை வைத்து, அந்த போட்டோக்கள் எடுக்கப்பட்டபோது நடந்த சம்பவங்களை காட்சியாக பார்க்கும் விசேஷ சக்தி இருக்கிறது. அந்த சக்தி கொலை விவகாரத்தில் எப்படி உதவுகிறது என்பது மீதிக்கதை…

இளந்தேவனாக ராகவ். முகம் இளைத்துப் போயிருக்க, பரபரக்கும் கண்களின் மூலம் தன் கேரக்டர் மூலம் தேவையான உணர்வுகளை சரியாக வெளிப்படுத்துகிறார்.

செய்கிற பாலியல் தொழில் என்கிற மனநிலையில் விழுந்து புரளாமல், நான் இப்படித்தான் என குடியும் உற்சாகமுமாய் கெத்தாக வலம் வந்து கவனம் பெறுகிறார் செழுமையான உடற்கட்டுக்கு சொந்தக்காரரான யாமினி லெஷ்மணன்.

இன்னொரு நாயகி பிரேர்னா கண்ணாவுக்கு ஒருசில முக்கியமான காட்சிகள் உண்டு.

விலைமாதுவுடன் ஜாலியாக இருக்கும்போது தன் மனைவி வந்துவிட தவித்துப் போவதாகட்டும், தன் கண் முன் ஒரு உயிர் பிரிவதைக் கண்டு துளிகூட பதறாமல் கடந்து போவதாகட்டும் (இந்த படத்தை இயக்கியிருக்கிற) சண்முகசுந்தரின் நடிப்பு இயல்பாக இருக்கிறது.

கொலைக் குற்றத்தில் சந்தேகத்துக்குரியவர் போலீஸைவிட தீவிரமாக துப்பறியும் பணியில் ஈடுபட அதற்கெல்லாம் ஒத்துழைப்பு கொடுக்கிற இன்ஸ்பெக்டராக எளிமையாக பங்களித்திருக்கிறார் (சில வருடங்கள் முன் காலமான) நிதீஷ் வீரா.

‘தூக்கில் தூங்கியவர்’ என்ற கிண்டலுக்கு ஆளாகிற நபரிலிருந்து நண்பர்களாக வருகிறவர்கள் கொடுத்துள்ள வேலைக்கு நியாயம் செய்திருக்கிறார்கள்.

பிரதீப் பத்மகுமாரின் ஒளிப்பதிவு, பிரசாந்த் விஹாரியின் இசை கதையின் நகர்வுக்கு போதுமானது.

ஹீரோவுக்கு இருக்கும் ஸ்பெஷல் பவரை வைத்து இன்னும் என்னவெல்லாமோ செய்திருக்கலாம்; சுவாரஸ்யப்படுத்தியிருக்கலாம்.

பீப் – ஒலிம்பிக் மைதானத்தில் கிட்டிப்புல் விளையாட்டு!

-சு.கணேஷ்குமார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்