ஸ்போர்ட்ஸ் டிராமா ஜானரை வித்தியாசமான கோணத்தில் அணுகியிருக்கும் ‘7 ஸ்டார் பாய்ஸ்.’
கேரளாவின் கிராமமொன்றில் கால்பந்து விளையாட்டு மீது ஆர்வம் கொண்ட 14 வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள் ஏழு பேர் உள்ளூர் போட்டிகளில் கலந்து கொண்டு தங்களின் திறமையால் சாதிக்கிறார்கள்.
சாதிக்க நினைப்பவர்களுக்கு பல விதங்களில் பிரச்சனைகள் வரும். இந்த கதையிலும் அப்படியான பிரச்சனைகள் வர, அவற்றையெல்லாம் அவர்கள் எப்படி சமாளிக்கிறார்கள், அவர்களுக்கு யாரெல்லாம் துணை நிற்கிறார்கள் என்பதை பரபரப்பான திரைக்கதையாக்கியிருக்கிறார் இயக்குநர் நிகில் பிரேம் ராஜ்.
இளம் வீரர்களுக்கு பயிற்சியளிப்பவராக, முன்னாள் இந்திய கால்பந்து சாம்பியன் ஐ.எம். விஜயன் நடித்திருப்பதும், படத்தின் கடைசி அரை மணி நேரம் நிஜ கால்பந்து போட்டியைப் பார்ப்பது போல விறுவிறுப்பாக இருப்பதும் படத்தின் பலம்.
7 ஸ்டார் பாய்ஸ் என்ற பெயரில் குழுவாக வருகிற சிறுவர்கள் லுக்மான் அவரான், பாலு வர்க்கீஸ், அமல் உள்ளிட்டோர் இயல்பாக, துள்ளலாக நடித்திருக்க, கதைநாயகனாக வருகிற சிறுவன் தனிஷின் உணர்வுகளைப் பிரதிபலிக்கிற முகபாவங்கள் மனதில் இடம் பிடிக்கிறது.
ஆண்டனி வர்கீஸ் துடிப்பான இளைஞனாக, சிறுவர்களின் விளையாட்டு ஆர்வத்தை ஊக்குவித்து அவர்கள் சாம்பியனாவதற்கு உதவுகிற வேடத்தில் எனர்ஜிடிக்கான நடிப்பைக் காட்டியிருக்கிறார். மிகச்சில நிமிடங்களே வந்து போகிற காதல் காட்சிகள் படத்துக்கு அழகு சேர்க்கின்றன. காதலியாக ஜுமானா அப்து ரஹ்மான் விழிகளிலேயே காதலைப் பகிர்வதை ரசிக்க முடிகிறது.
இன்னபிற கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்கள் கதைக்களத்துக்கு பொருத்தமான மனிதர்களாக மாறியிருக்கிறார்கள்.
ஜேக்ஸ் பிஜாய் இசையில் ஓடி பாஞ்சோடி,’ சந்திரனை கடத்தி’ பாடல்கள் குதூகலம் கூட்டுகின்றன. காட்சிகளின் விறுவிறுப்புக்கு பின்னணி இசை தந்திருக்கும் சுறுசுறுப்பு எக்கச்சக்கம். ஹிஷாம் அப்துல் வஹாப் இசையில் அல்லாவை போற்றும் யா அல்லாஹ் பாடல் உற்சாகம் தருகிறது.
திரும்பிய பக்கமெல்லாம் கிராமத்தின் இயற்கை, பசுமை, விளையாட்டு மைதானம், விளையாட்டு நடக்கும் சூழல் என அனைத்தும் ஃபயஸ் சித்திக்கின் கச்சிதமான பிரேம்களில் கண்களில் நிறைகிறது.
ஒருசில மாதங்கள் முன் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் தீவிரமாக நடந்து கொண்டிருந்த நேரத்தில் இந்த படம் வெளியாகியிருந்தால் ரீச் பெரிதாக இருந்திருக்கும்.
சாதிப் பாகுபாடு, வன்முறை என்றெல்லாம் கலந்துகட்டி கலவரமாக்காமல், கால்பந்து விளையாட்டை மையப்படுத்திய கதை; சிறுவர்கள்தான் ஹீரோக்கள்; கன்னாபின்னா கமர்சியல் அம்சங்களுக்கு இடமில்லை என்ற தெளிவோடு ஒரு படம் என்பது தனித்துவம்.
‘7 ஸ்டார் பாய்ஸ்’ – ‘மஸ்ட் வாட்ச்’ ஃபேமிலி என்டர்டெய்னர்!
-சு.கணேஷ்குமார்

