‘விஜயானந்த்’ சினிமா விமர்சனம்

உழைப்பாலும், முயற்சியாலும், போராடும் குணத்தாலும் முன்னேறியவர்களின் வாழ்க்கை வரலாற்றைப் படிப்பதும், திரைப்படங்களாகப் பார்ப்பதும் நாமும் அப்படி முன்னேற வேண்டும் என்ற உத்வேகத்தை சிலருக்குள் உருவாக்கலாம். அப்படியான உணர்வை தருகிற படங்களின் வரிசையில் கன்னட தேசத்திலிருந்து விஜயானந்த். குறையில்லாத தமிழாக்கம்!

சின்னதாய் பிரிண்டிங் பிரஸ் வைத்திருந்து, பின்னர் ஒரேயோரு லாரியுடன் வியாபாரத்தில் இறங்கி இன்று இந்தியா முழுவதும் 5000க்கும் மேற்பட்ட லாரிகள், 200க்கும் மேற்பட்ட பேருந்துகள் என மிகப் பெரிய ‘லாஜிஸ்டிக்ஸ்’ நிறுவனமாக உயர்ந்துள்ள வி ஆர் எல் நிறுவனத்தின் அதிபர் விஜய் சங்கேஷ்வரின் வாழ்க்கைக் கதை.

விஜய் சங்கேஷ்வர் அப்பா சிறியளவில் பிரிண்டிங் பிரஸ் வைத்து சம்பாதித்து வாழ்ந்து வருகிறார். அவருடைய மகன் விஜய் சங்கேஷ்வர் நவீன மெஷின் ஒன்றை வெளிநாட்டிலிருந்து வாங்கி தொழிலில் கூடுதல் லாபம் ஈட்ட வழி செய்கிறார். அதில் தன்னிறைவடையாத அவர் அடுத்தாக லோடு லாரி பிஸினஸில் இறங்குகிறார். சரவரவென வளர்கிறார். சிலரால் அவரது முதலீடு அனைத்தும் பறிபோகிறது. தளராமல் முயற்சித்து மீண்டு வருகிறார். அந்த முயற்சி அவரை 5000 லாரிகளுக்கு முதலாளியாக்குகிறது. 1996-ம் ஆண்டு நடந்த பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு பாஜக எம்.பியாக தேர்ந்தெடுக்கப்படுவதும் நடக்கிறது. தன்னைப் பற்றி தப்பும் தவறுமாக எழுதிவரும் பத்திரிகை நிறுவனரிடம் நியாயமாக மோதி அதற்கு பலனில்லாமல் போகவே, தானே பத்திரிகை தொடங்கி விற்பனையில் வரலாறு படைப்பது இன்னொரு சாதனை. ஒரு கட்டத்தில் அதற்கும் நெருக்கடி வந்துசேர அதை புத்திசாலித்தனமாக சமாளித்து அதே துறையில் இன்றும் கோலோச்சி வருகிறார். அவரது நிறுவனத்தின் செய்தி சேனலும் கர்நாடகாவில் இயங்கிவருகிறது… விஜய் சங்கேஷ்வரின் இந்த வாழ்க்கைப் பயண அனுபவங்களை அதனதன் தன்மையோடு படமாக்கியுள்ள இயக்குநர் ரிஷிகா ஷர்மாவுக்கு ஸ்பெஷல் பாராட்டு!

விஜயானந்தாக நிஹால். தான் ஏற்கும் பாத்திரத்தின் கனம் உணர்ந்து நடித்திருக்கிறார்.

நாயகன் விஜயானந்தின் அப்பாவாக ஆனந்த் நாக், இன்னபிற முக்கிய பாத்திரங்களில் வினயா பிரசாத், பாரத் போபண்ணா, அர்ச்சனா கொட்டிகே… அவரவர் தங்கள் கதாபாத்திரத்தில் வழங்கியிருப்பது படு நேர்த்தியான நடிப்பு!

கீர்த்தன் பூஜாரியின் ஒளிப்பதிவு, கோபி சுந்தரின் பின்னணி இசை என தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்களிப்பு கச்சிதம்!

1960 காலகட்டத்திலிருந்து கிட்டத்தட்ட 50 வருடகால வாழ்க்கைப் பயணத்தை பிரதியெடுத்திருக்கும் காட்சிகளில் அந்தந்த காலகட்டத்தை கண்முன் கொண்டுவர உழைத்திருக்கிற கலை இயக்குநரின் பங்களிப்பு படத்தின் பெரும் பலம்!

கடின உழைப்புக்கான தொழிலில் ஈடுபட விரும்புகிறவர்கள், ஈடுபட்டு முன்னேற முடியாமல் தவிப்பவர்கள் இந்த படத்தைப் பார்த்தால் தன்னம்பிக்கை பிறப்பது உறுதி!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here