கொலை செய்யப்பட்டு இறந்து போனவர்களின் ஆத்மா, கொன்றவர்களைப் பழிவாங்க உயிரோடு இருக்கிற ஒருவரின் உடம்பை பயன்படுத்திக் கொள்ளும். இதுதான் காலங்காலமாக பெரும்பாலான ஹாரர் படங்களின் டெம்ப்ளேட். கிட்டத்தட்ட இந்த படமும் அதேவிதமான பழிவாங்கும் படலத்திலேயே பயணிக்கிறது. ஆனால், இதில் கொலை செய்யப்படுகிறவர் புத்தரின் பக்தர், அவரது கொள்கைப்படி வாழ்ந்தவர். அந்த ஆத்மா என்ன செய்கிறது?
சங்கீதா கணவருடன் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பின் 66-ம் எண் வீட்டில் குடியேறுகிறார். அவருக்கு 99-ம் எண் வீட்டில் உள்ள ரஞ்சிதா என்ற பெண்ணுடன் நட்பு உருவாகிறது. அதன்பின் சங்கீதாவின் நடவடிக்கைகளில் அவர் ஏதோவொரு அமானுஷ்ய சக்தியின் பிடியில் சிக்கியிருப்பது தெரிகிறது.
இப்படி கதை துவங்கும் கதை அந்த 99-ம் எண் வீடு ரொம்ப நாட்களாகவே மூடிக் கிடப்பது, ரஞ்சிதா அந்த வீட்டில் வைத்து கொலை செய்யப்பட்டிருக்கிறார் என எதிர்பார்த்தபடியே டேக் ஆப் ஆகிறது.
அப்படி சங்கீதாவின் உடம்பை பயன்படுத்திக் கொள்ளும் ரஞ்சிதாவின் ஆத்மா என்னவெல்லாம் செய்கிறது என்பதே மிச்சசொச்ச கதை…
சங்கீதாவாக ரக்சிதா மகாலெஷ்மியைப் பார்க்கும்போது முன்பைவிட உடலளவில் ஒரு சுத்து அதிகரித்திருப்பது போல் தோன்றுகிறது. ரஞ்சிதாவுடன் அறிமுகமாகிற, பேசிப்பழகி நெருக்கமாகிற தருணங்களில் புசுபுசுவென்றிருக்கும் அந்த முகத்தில் புத்துணர்ச்சி பொங்குகிறது. ரக்சிதாவின் வெறித்தனமான ரசிகர்கள், அவரை ஃபயர் படத்தில் பார்த்ததுபோல் பார்த்து ரசிக்கலாம் என்ற எதிர்பார்ப்பை வைத்திருந்தால் ஏமாறவ வேண்டியிருக்கும். ஹி…ஹி…
தனக்கு என்ன நடக்கிறது என்பது புரியாமல் குழம்பித் தவிப்பது, தன்னை ஆக்கிரமித்திருக்கும் ரஞ்சிதாவுக்கு என்ன நடந்தது என்பதை அறிந்து கொள்வதற்காக ரிஸ்க் எடுப்பது என பரபரப்பான காட்சிகளில் பொருத்தமான நடிப்பால் கலந்திருக்கிறார்.
ரஞ்சிதாவாக ஸ்வேதா டோரத்தி. உருண்டையான முகமும் திரட்சியான தேகமும் ஒருவித கவர்ச்சியைத் தந்துவிட உற்சாகம், பரிதாபம், பறவைகள் மீது பிரியம், அனைத்து உயிர்களையும் நேசிக்கும் குணம், ஆத்மாவாக அலைந்தாலும் பழிவாங்கும் எண்ணமில்லாத நடவடிக்கைகள் என துடிப்பான நடிப்பால் கேரக்டரை கவனிக்க வைக்கிறார்.
படத்தை இயக்கி, தயாரித்திருக்கிற மூர்த்தி ஆரம்பத்தில் வில்லன் போல் நடந்துகொள்கிறார். உண்மையில் அவர் யார் என்பது நெகிழ்ச்சியாக இருக்கிறது.
ரக்சிதாவின் கணவராக சபரி, ஸ்வேதாவின் கணவராக ரோஹிந்த் செல்லப்பா இருவரும் வில்லத்தனத்தை அளவாக வெளிப்படுத்த, கே ஆர் விஜயா, பி எல் தேனப்பன், ஸ்ரீலேகா ராஜேந்திரன், ஜாவா சுந்தரேசன், முல்லை, கோதண்டம் என இன்னபிற நடிகர் நடிகைகள் ஏற்ற கேரக்டர்களுக்கு நியாயம் செய்திருக்கிறார்கள்.
எம் எஸ் மூர்த்தி இசையில் ‘யாரு பிள்ளையாரு’ பாடலில் பக்திப் பரவசம் தூக்கல். அமர்கீத்தின் பின்னணி இசையும் சேவிலோ ராஜாவின் ஒளிப்பதிவும் ஹாரர் திரில்லருக்கான விறுவிறுப்பைத் தருகிறது.
யாரையும் பழி வாங்கக்கூடாது என்ற உறுதிகொண்ட ஆத்மா, ஒரு பெண்ணின் உடலில் புகுந்தது ஏன் என்பதற்கான காரணமும், கொலைக்குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்கும் விதமும் கதையின் ஹைலைட்.
பெரிதாய் எதிர்பார்ப்பில்லாமல் போனால் கணிசமான திருப்தியுடன் திரும்பலாம்.
-சு.கணேஷ்குமார்

