‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்து கதையம்சத்தாலும் காமெடி கலாட்டாக்களாலும் மெகா ஹிட்டான படம் ‘சந்திரமுகி.’
அந்த படத்தை இயக்கிய அதே பி.வாசு இயக்க, அதில் முருகேசனாக நடித்த வடிவேலு அதே பெயரில் கூடவே வர, மற்ற நடிகர் நடிகைகள் மாற, 18 வருடங்கள் கழித்து ‘சந்திரமுகி 2.’
தொழிலதிபர் ராதிகாவின் பிஸினஸில் தொழிலாளர்கள் சிலரின் உயிர்கள் பறிபோகிற அளவுக்கு அசம்பாவித சம்பவங்கள் நடக்கிறது; பொருளாதாரம் சரிகிறது. அவருடை மகள் விபத்தில் சிக்கி சக்கர நாற்காலியில் வாழ்நாளைக் கழிக்கும் நிலைக்கு ஆளாகிறார்.
இயேசுநாதர் தோற்றத்திலிருக்கிற சாமியார் ஒருவர், ‘நடக்கிற எல்லா பிரச்சனைகளுக்கும் குலதெய்வத்தை மறந்ததே காரணம்’ என்கிறார். உடனடியாக, குலதெய்வத்தைக் குளிர்விக்க குடும்பமாக தயாராகிறார்கள். அவர்கள் குடும்பத்துக்கு சம்பந்தமில்லாத ராகவா லாரன்ஸும் அவர்களுடன் இணைகிறார். ஒட்டுமொத்தமாக கிளம்பிப் போய் குலதெய்வ கோயிலுக்கருகிலுள்ள அரண்மனை போன்ற பிரமாண்ட பங்களாவொன்றில் தங்குகிறார்கள். அங்கிருக்கும் சந்திரமுகியின் ஆத்மா தன் அட்டகாசத்தை ஆரம்பிக்கிறது; ராதிகா குடும்பத்தினரின் நிம்மதியை கெடுக்கிறது; அவர்களை குலதெய்வத்துக்கு பூஜை செய்ய முடியாதபடி தடுக்கிறது.
அந்த சக்திக்கெதிராக களமிறங்குகிறார் ராகவா லாரன்ஸ். அதன் விளைவுகள் என்ன என்பதே கதையின் போக்கு… குலதெய்வ பூஜையை நிறைவேற்ற முடிந்ததா இல்லையா என்பது நிறைவுக் காட்சி.
தன் பாதுகாப்பிலிருக்கும் இரு குழந்தைகள் வில்லன் கும்பலிடம் சிக்க, அவர்களை மீட்க பைக்கில் சீறிப்பாயும் ஆரம்பக் காட்சியிலேயே அதிரடி ஹீரோயிசம் காட்டுகிறார் ராகவா லாரன்ஸ். அந்த ஹீரோயிசம் முன்கதையில் வேட்டையனாக மாறுபட்ட தோற்றத்தில் வருவது, சந்திரமுகியை அடைய ஆசைப்படுவது, அதற்காக அரசன் செங்கோட்டையனை கொல்வது, ஆட்சியைக் கைப்பற்றுவது, சந்திரமுகிக்கு பரிதாப முடிவைக் கொடுப்பது என அத்தனை காட்சியிலும் வெளிப்படும்படி பார்த்துக் கொண்டிருக்கிறார். அவர் வேட்டையனாக வரும் முன்கதையில் நடக்கும் சில சம்பவங்கள் ‘காஷ்மோரா’ படத்தின் காட்சிகளை நினைவூட்டுகின்றன.
முதல் பாகத்தில் ஜோதிகாவை சந்திரமுகியின் பிம்பமாக பார்த்த கண்களுக்கு, ஒல்லிப்பிச்சான் கங்கனா ரனாவத்தை அதேகோலத்தில் பார்ப்பது திருப்தி தராவிட்டாலும் அவர் நடிப்பில், நடனத்தில் தன் பங்களிப்பை நிறைவாகவே செய்திருக்கிறார்.
வீல் சேரில் வலம்வரும் லெஷ்மி மேனனின் உடம்பை சந்திரமுகியின் ஆத்மா ஆக்கிரமித்ததும் நடந்துகொள்ளும் விதத்தில் அவரது அகன்ற விழிகள் சற்றே மிரள வைக்கின்றன.
சந்திரமுகியின் ஆத்மா குடியிருக்கும் பங்களாவுக்கு சொந்தக்காரராக வடிவேலு. ராதிகா குடும்பத்துக்கு பங்களாவை லீஸுக்கு விட்டதோடு, கூடவே இருந்து அவர்கள் அனுபவிக்கும் அவஸ்தைகளில் பங்கெடுத்து, ராகவா லாரன்ஸிடம் ‘பேய்க்கு வயசாகுமா? ஆகாதா?’ என்றெல்லாம் கேட்டு கொஞ்சமே கொஞ்சம் கலகலப்பூட்டுகிறார்.
ராகவா லாரன்ஸுக்கு ஜோடியாக வருகிற மஹிமா நம்பியாரின் குடும்பப் பாங்கான தோற்றம் கவர்கிறது.
ராதிகா, சுரேஷ்மேனன், விக்னேஷ், ரவி மரியா, சுபிக்ஷா, ஸ்ருஷ்டி டாங்கே, எஸ் ஆர் சிவாஜி, ஒய்.ஜி.மகேந்திரன், சாமியாராக ராவ் ரமேஷ் என ஏகப்பட்ட நடிகர் நடிகைகள்… மானஸ்வி உட்பட சில குழந்தை நட்சத்திரங்கள் அவரவர்க்கு கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்கள்.
பாடல்களுக்கு சந்திரமுகி முதல் பாகத்தை நினைவூட்டும் விதத்தில் இசையமைத்த ஆஸ்கர் வின்னர் கீரவாணி, பின்னணி இசையில் ஹை டெசிபல் பட்டாசாய் பாய்ந்திருக்கிறார்.
ஆர்.டி.ராஜசேகரின் ஒளிப்பதிவில் காட்சிகள் கலர்ஃபுல்லாக இருப்பது கண்களுக்கு குளிர்ச்சி!
‘சூப்பர் ஸ்டார்’ நடித்த ‘சந்திரமுகி’ தந்ததை போன்ற மனநிறைவை எதிர்பார்த்து போனால் அதிருப்திக்கு ஆளாகலாம்; அப்படியான எதிர்பார்ப்பை தூக்கிப் போட்டால் ஓரளவு திருப்தி கிடைக்கலாம்.
