கொலை, ரத்தம், கொடூரம், குரூரம், ஆபாசம், அருவருப்பு என கலந்துகட்டி, பார்ப்பவர்களுக்கு மரை கழன்று போகும் அளவுக்கான கதை, திரைக்கதையில் ‘இறைவன்.’
பரபரப்பான நகரத்தில் தொடர்ச்சியாக இளம்பெண்கள் கண்கள் தோண்டப்பட்ட, வாய் கிழிக்கப்பட்ட, கால்கள் நறுக்கப்பட்ட, நிர்வாணமாக்கப்பட்ட நிலையில் சடலங்களாக போலீஸுக்கு கிடைக்கிறார்கள். அந்த கருணையற்ற கொலைகளைச் செய்வது யாரென காவல்துறை அதிகாரி ஜெயம் ரவி தலைமையிலான குழு தேடிக் கண்டுபிடித்து கைது செய்கிறது. அந்த சைக்கோ கொலையாளி சிறையிலிருந்து தப்பிக்கிறான். கொலைகள் தொடர்கிறது…
இப்படி பயமும் பதற்றமுமாக ரத்தச்சகதியில் உருண்டு புரண்டு கடந்தோடும் கதையோட்டத்தில், ‘நடக்கும் கொலைகளுக்கு நாம் கைது செய்து தப்பித்தவன் காரணமல்ல; வேறொரு சைக்கோ இருக்கிறான்’ என்று சொல்லி அதிர வைக்கிறார் ஜெயம் ரவி. அந்த இரண்டாவது சைக்கோவை தேடும் படலம் தொடங்குகிறது… அவன் பிடிபட்டானா இல்லையா, நடக்கும் கொலைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதா இல்லையா என்பதே மிச்சமீதி கதை… இயக்கம் ஐ.அஹமது
ஆரம்பக் காட்சிகளில் போலீஸ் உயரதிகாரியாக வந்து, பின்னர் அந்த வேலையிலிருந்து விலகி, அதே போலீஸ் வேலையை செய்கிற, பெரிதாய் எந்தவொரு தனித்துவமும் இல்லாத கதாபாத்திரத்தில் ஜெயம் ரவி. மனதுக்குள்ளிருந்து சீறிப்பாயும் ஆவேச ஆக்ரோஷத்தை முகத்தில் பிரதிபலிப்பதில் கம்பீரம் காட்டுபவர், சைக்கோ கொலைகாரனிடம் உயிருக்குயிரான நண்பனை பறிகொடுத்தபின் மனம் கலங்கி கவனம் ஈர்க்கிறார்.
நயன்தாராவுக்கு, தன் காதலை ஜெயம் ரவி எத்தனை முறை மறுத்தாலும் விடாது கறுப்பு ரேஞ்சுக்கு அவரை காதலோடு துரத்திக் கொண்டிருக்கிற கடமையை தந்திருக்கிறது திரைக்கதை. படம் முழுக்க ஐயோ பாவமாக வந்து அந்த கடமையை சரிவர செய்திருக்கிறார் லேடி சூப்பர் ஸ்டார்.
வருகிற படங்களிலெல்லாம் கண்ணிர் வடிப்பதையே முழுநேரப் பணியாக செய்துவருகிற விஜயலெஷ்மிக்கு அதே பணியை இந்த படத்திலும் ‘இறைவன்’ வழங்கி அருள்பாலித்திருக்கிறான்.
சைக்கோ கொலையாளியாக வரும் ராகுல் போஸின் நடிப்பு மிரட்டுகிறது. மற்றொரு சைக்கோவாக வருகிற வினோத் கிஷனின் நடிப்பில் அலட்டல் அதிகம்!
நேர்மையான போலீஸ் அதிகாரி, ஒருவனை ‘இவன்தான் சைக்கோ கொலையாளி’ என அடையாளம் காட்டியபின்னும், ‘அவனை பத்திரமா வீட்டுல கொண்டு விட்டுட்டு வாங்க’ என உத்தரவிடுகிற அதிபுத்திசாலி காவல்துறை உயரதிகாரியாக ஆஷிஷ் வித்யார்த்தி, போலீஸ் மூளை துளியுமில்லாத ஈகோ பேர்வழியாக பக்ஸ் பகவதி பெருமாள் என வினோதமான கதாபாத்திரங்களைப் பார்க்கும்போது சைக்கோ கொலைகாரனிடம் படத்தின் இயக்குநரை பிடித்துக் கொடுக்க தோன்றுகிறது.
சார்லி, நரேன், அழகம் பெருமாள் உட்பட நன்றாக நடிக்கக்கூடிய நடிகர்களும் அவர்களின் தேர்ந்த நடிப்பும் படத்தில் உண்டு.
யுவன் சங்கர் ராஜா பின்னணி இசையில் அதீத அதிரடி நிகழ்த்த முயற்சித்திருக்கிறார். பாடல்கள் மனதில் நிற்க மறுக்கிறது.
‘எங்களுக்கு வேறெதுவும் தேவையில்லை; குரூரமான கொலைகள் மட்டும்போதும்’ என்ற மனநிலை உங்களுக்கு இருந்தால் இறைவனை தரிசிக்க கிளம்பலாம்!
