Home விமர்சனம் பயாஸ்கோப் சினிமா விமர்சனம்

பயாஸ்கோப் சினிமா விமர்சனம்

கமர்சியல் மூவி, ஆர்ட் ஃபிலிம், டாக்குமென்ட்ரி, குறும்படம் என எந்த வரையறைக்குள்ளும் சேர்க்க முடியாத படைப்பு. இயக்குநர் ஒருவர் முதல் படம் இயக்க களமிறங்கி, தானே தயாரிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டு படாத பாடுபட்ட சொந்தக் கதை, சோகக் கதையின் திரை வடிவம்.

சேலம் மாவட்டம் சங்ககிரியைச் சேர்ந்த ராஜ்குமார், ஜோதிடம் சார்ந்த மூட நம்பிக்கைகளை வெளிச்சம் போட்டுக் காட்டும் விதமாக ‘வெங்காயம்’ என ஒரு திரைப்படம் இயக்கினார்; அதில் சத்யராஜ் ஒரு பாடலில் தோன்றியிருந்தார்; அந்த படம் இயக்குநர் சேரனின் கவனத்தை ஈர்த்தது; இயக்குநர்கள் பலருக்கும் காண்பிக்கப்பட்டு அவர்களின் பாராட்டுக்களைக் குவித்தது; பத்திரிகைகளின் விமர்சனங்களிலும் அங்கீகாரத்தைச் சம்பாதித்தது; சேரனாலேயே வெளியிடப்பட்டது; கதையம்சத்தால் மக்களிடமும் பரவலான வரவேற்பை பெற்றது. இதெல்லாம் 2011 காலகட்டத்தில் நடந்தவை.

அந்த படத்தை எடுப்பதற்காக தான் மேற்கொண்ட முயற்சிகள், சந்தித்த விதவிதமான சிக்கல்கள், அவை தந்த வலி, சிந்திய கண்ணீர் என பலவற்றின் தொகுப்பாக இந்த ‘பயாஸ்கோப்’பை பரிமாறியிருக்கிறார் சங்ககிரி ராஜ்குமார்.

பரிச்சயமான முகங்கள், தேர்ந்த நடிகர்கள் நடிகைகள் என யாரையும் பயன்படுத்தாமல் வெங்காய உருவாக்கத்தின் போது உறுதுணையாய் நின்ற தன் சொந்த பந்தங்களை, அக்கம் பக்கத்தினரை வைத்தே படத்தை முடித்திருப்பது தனித்துவம்.

திரைப்படம் இயக்க முயற்சிப்பவர்கள் தயாரிப்பாளர்கள் கிடைக்காமல் தவிப்பது, கிடைத்த தயாரிப்பாளர் ஏதோவொரு காரணத்தால் கைவிடுவது என பல நெருக்கடிகளுக்கு ஆளாகி அவதிப்படுவதை பல படங்களில் பார்த்துள்ள நமக்கு,

கையில் கிடைத்த பொருட்களையெல்லாம் வைத்து ஷூட்டிங் நடத்துவதற்கான உபகரணங்களை உருவாக்குவது, கிடைத்த சிறுசிறு உதவிகளை பெரிதாய் பயன்படுத்திக் கொள்வது என நீளும் காட்சிகள் கொஞ்சம் விளையாட்டுத்தனமாக இருந்தாலும் நிச்சயமாய் புது அனுபவம்.

வெள்ளையம்மாள், முத்தாயி, முத்துசாமி, குப்புசாமி என நடித்திருப்பவர்கள் கதை நிகழ்கிற மண்ணைச் சார்ந்தவர்களாக இருப்பது கதையோட்டத்தின் இயல்புத் தன்மையை அதிகரிக்க,

அவர்களின் வெகுளித்தனமான பேச்சுக்களும் செயல்பாடுகளும் காமெடி களேபரமாகி கலகலப்புக்கு கேரண்டி தருகின்றன.

சத்யராஜ் ஒருசில நிமிடங்கள் வந்து போகிறார்.

திரைப்படங்களின் உரிமையை எழுதிக் கொடுப்பதில் நிதானம் காட்டாவிட்டால் எப்படியான ஏமாற்றங்களை ஏற்க வேண்டியிருக்கும் என்பதற்கான எச்சரிக்கையும் படத்தில் உண்டு.

ஒளிப்பதிவு, இசை என அனைத்திலும் எளிமை தெரிகிறது. அதுவே இந்த படத்துக்கு போதுமானதாகவும் இருக்கிறது.

‘ரசிகர்களின் மனநிலை எப்படி எப்படியோ மாறிப்போயிருக்கிற சூழ்நிலையில் இப்படியான படம் தேவையா?’ என்ற கேள்வி எழுந்தாலும், பட்டியலிட குறைகள் இருந்தாலும்,

திரைத்துறையில் இயக்குநராக விரும்புகிறவர்களுக்கு ‘கஷ்ட நஷ்டங்களைத் தாண்டி, படைப்பு நன்றாக இருந்தால் அதற்கான அடையாளத்தை அது பெற்றுவிடும்’ என்ற ‘ஹோப்’ தந்திருப்பதற்காக ‘பயாஸ்கோப்’பை பாராட்டலாம்.

-சு.கணேஷ்குமார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்