கலன் சினிமா விமர்சனம்

கேடுகெட்ட மனிதர்களிடையே சிக்கித் தவிக்கும் சாமானியர்கள் சட்டத்தைக் கையிலெடுத்தால் நடக்கும் சம்பவங்கள் எப்படியிருக்கும் என்பதை எடுத்துக் காட்டும் படங்களின் வரிசையில் மற்றுமொரு படைப்பு.

அநியாயத்தை தட்டிக் கேட்ட தன் மகன் வேங்கையை அராஜகப் பேர்வழி வேலு கொன்றுவிட, அம்மா காளியம்மாள் பத்ரகாளியாகிறாள். அந்த அம்மாவுடன் அவளது தம்பியும் கை கோர்த்து களமிறங்க, பல விதங்களில் பலமிக்க வேலுவை அவர்களால் பழிவாங்க முடிந்ததா இல்லையா என்பதே கலனின் கதைக்களம்.

சிலபல படங்களில் கெட்டவனாக அல்லது கெட்டவர்களின் கூட்டாளியாக பார்த்துப் பழகிய யாசருக்கு இந்தப் படத்தில் முதன்மைப் பாத்திரமேற்று ‘வேங்கை’யாக சீறுகிற வாய்ப்பு. தன் நண்பனின் தங்கையிடம் தவறாக நடந்துகொள்ள ஆசைப்பட்டவனின் இருப்பிடத்துக்குச் சென்று, அவன் செய்யும் குற்றச் செயல்களுக்கு ஆதரவாய் நிற்கிற பெண்ணை மிரட்டும்போது முகத்தில் ஆவேசத் தீ பற்றியெறிகிறது.

தீபா சங்கருக்கு அப்படியும் இப்படியுமாய் ஓடிவந்து அழுகையின் உச்சத்துக்கு போகச் சொன்னால் அல்வா சாப்பிடுவது மாதிரி குஷியாகிவிடும். ரசித்துச் செய்து குடம் குடமாக கண்ணீரை கொட்டி நிரப்புவார். அவருக்கு ஆரம்பக் காட்சிகளில் அதே வழக்கமான வேலையைக் கொடுத்த இயக்குநர், பின்னர் மகன் மரணத்துக்கு காரணமானவர்களை பழி தீர்க்க ஆக்ரோஷ அவதாரமெடுக்க வைத்திருக்கிறார். அதை பொருத்தமாக செய்து முடிக்க கிட்டத்தட்ட தனது உடலிலிருக்கும் மொத்த சக்தியையும் செலவு செய்திருக்கிறார் தீபா. ‘பெரியாளுன்னா யார் தெரியுமா?’ என கேட்டு அம்பேத்கர், காமராசர் என பட்டியலிட்டு சமூகத்துக்கு பாடமும் நடத்தியிருக்கிறார்.

அப்புக்குட்டிக்கு காட்சிகள் குறைவாக இருந்தாலும், ‘தாய் மாமன்னா தாய்க்கு மேல’ என்று வாயால் சொல்லி, அதை செயலிலும் காட்டுகிற பொறுப்பு. பாசப் பிணைப்பால் நெகிழவும் வைத்து, கிளைமாக்ஸில் கலங்கவும் வைக்கிறார்.

கஞ்சா வியாபாரி வேலுவாக சம்பத்ராம். வில்லன் எந்த குற்றச் செயல் செய்தாலும் கூடவே பாலியல் பலாத்காரத்திலும் ஈடுபட வேண்டும் என்ற விதிப்படி அதட்டலும் உருட்டலுமாக தன் பங்களிப்பை பந்தாவாக தந்து கடந்துபோகிறார்.

வேலுவுக்கு ரைட் ஹேண்ட், லெஃப்ட் ஹேண்ட் என எல்லாமுமாக காயத்ரி. இறுக்கமான முகமும் திமிர்ப் பேச்சும் அவரது கேரக்டரை கெத்தாக காட்ட உதவி செய்திருக்கிறது.

சேரன்ராஜுக்கு எல்லா படத்திலும் அயோக்கிய போலீஸ் வேடம்தான். இந்த படத்திலும் அதே காக்கி யூனிபார்ம்தான். ஆனாலும் சிவ பக்தராக வரும் அவர் நல்லவரா கெட்டவரா என படம் நெடுக குழப்பம் தருகிறார். நடிப்பில் அதே கம்பீரம்.

போலீஸ் அதிகாரிகளில் ஒருவராக மணிமாறன், நட்புக்காக எதையும் செய்யத் தயாராக இருக்கிற இளைஞர்கள், வில்லனின் அடியாட்கள் என இன்னபிற நடிகர் நடிகைகளும் கதையின் தேவைக்கேற்ப ஒத்துழைத்திருக்கிறார்கள்.

ஜெர்சன் இசையில் ‘கருப்பன் மீசை துடிக்குது’ என துவங்கி கருப்பசாமியின் புகழ்பாடும் பாடல், வெட்டுடை காளிக்கான பாடலாக மாற்றம் பெற்று அதிரடியான இசையால் ஏற்றம் பெற்றிருக்கிறது. பாடலுக்கான காட்சியில் பக்திப் பரவசம் நிரம்பியிருக்க, பாடலில் காளியாக தோன்றுபவரும் கவனிக்க வைக்கிறார்.

ஜெயக்குமார், ஜேகே இருவரது ஒளிப்பதிவில் சிவகங்கையிலுள்ள கிராமங்கள், தெருக்கள், சாலைகள் நேர்த்தியாக பதிவாகியிருக்கிறது.

கிடுகு படம் மூலம் திரையுலகில் மெல்லிய அதிர்வலையை உருவாக்கிய வீரமுருகன் இயக்கியிருக்கும் இந்த படம் ஒரு முக்கியமான கருத்தை தாங்கி நிற்கிறது. அது கொடியவர்களை அழிப்பதே வீரம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here