ஃபேமிலிமேன்கள் படுகிற கஷ்ட நஷ்டங்களை விசு காலத்திலிருந்து விதவிதமாக பார்த்துள்ள நமக்கு அதையே ரசித்துச் சிரிக்கும்படி கொடுத்துவிட வேண்டுமென நக்கலைட்ஸ் டீம் தீர்மானித்துக் களமிறங்கியதன் விளைவாக உருவான ‘குடும்பஸ்தன்.’
காதலியைத் திருமணம் செய்து கொள்வதில் தடங்கல்களை, தடைகளைச் சந்தித்த நவீன் அதையெல்லாம் தாண்டி மணவாழ்க்கையில் அடியெடுத்து வைக்கிறான்; தன் அப்பாவின் விருப்பப்படி பழைய வீட்டை புதுப்பித்து தருவதாக ஒத்துக் கொள்கிறான்; அம்மாவை சுற்றுலா அனுப்ப 50,000 ரூபாய் ஏற்பாடு செய்து தருவதாக சொல்லி எதிர்பார்ப்பை உருவாக்குகிறான். ஐ ஏ எஸ் தேர்வுக்காக படிக்கும் மனைவிக்கு இண்டர்நெட் இணைப்பு, லேப்டாப் வாங்குவது என சில தவிர்க்க இயலாத கமிட்மெண்ட்ஸ். அப்படியான நெருக்கடிகள் போதாதென்று பொருளாதாரத்தில் தாழ்ந்தவனாக இருப்பதை குத்திக்காட்டி தொடர்ந்து அவமானப்படுத்திக் கொண்டிருக்கும் தன் அக்காவின் கணவர் முன் எல்லாவிதத்திலும் கெத்தாக உயர்ந்து காட்ட வேண்டிய கட்டாயம்.
ஆனால் எதையுமே சரியாக செய்யமுடியாதபடி நாட்கள் நகர்ந்து கொண்டிருக்க பார்த்துக் கொண்டிருந்த வேலை பறிபோகிறது. ஒத்துக்கொண்ட விஷயங்களைச் செய்து முடிப்பதற்காக, கடமைகளை நிறைவேற்றுவதற்காக கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை. ஏற்கனவே அவதிப்பட்டுக் கொண்டிருப்பவனை வாங்கும் கடன்கள் கட்டம் கட்டித் தாக்குதல் நடத்த அதன்பின் அவன் நிலைமை என்னவானது என்பது பிரசன்னா பாலசந்தர் இயக்குநர் ராஜேஷ்வர் காளிச்சாமி கூட்டணி உருவாக்கியிருக்கும் கதையோட்டத்தின் மிச்சம்…
நவீனாக மணிகண்டன். பணம் சம்பாதிப்பதற்காக எதை வேண்டுமானாலும் செய்யலாம்; எந்த லெவலுக்கு வேண்டுமானாலும் இறங்கலாம் என்றிருக்கும் மனிதர்கள் மத்தியில் தன்மானத்துடன் வாழ விரும்புகிற இளைஞனாக, அப்படி வாழ விடாத மனிதர்களைச் சமாளிக்க முடியாமல் மனம் நொறுங்கிப் போகிறவராக, கிடைக்கிற கேப்பில் காதல் மனைவியிடம் கொஞ்சல் மிஞ்சல்களை தொடர்கிறவராக, தன்னை கீழ்த்தரமாக நினைக்கும் அக்காவின் கணவர் முன் கம்பீரம் காட்ட முடியாமல் தவிப்பவராக, கடன் வாங்கியபின் பிக்கல் பிடுங்கல்களை எதிர்கொள்பவராக எளிய குடும்பஸ்தனின் வலிகளை பொருத்தமான நடிப்பின் முலம் உணர்த்தியிருக்கிறார். அவர் படுவதெல்லாம் அன்லிமிட்டெட் அவஸ்தைகள்தான் என்றாலும் அவற்றை ஆடியன்ஸ் ரசித்துச் சிரிக்கும்படி மாற்றியிருப்பதுதான் மணிகண்டனின் நடிப்பிலிருக்கும் தனித்துவம்.
கதையின் தேவைக்கேற்ற. வசனங்களின் தன்மைக்கேற்ற நாயகி சாந்வி மேஹனாவின் முகபாவங்களுக்கு மதிப்பெண்களை தாராளமாய் அள்ளிப் போடலாம். கணவனை கன்னத்தில் அறைந்த பின் ஆவேசமாகப் பேசுகிற நடிப்பு தூக்கிவைத்துக் கொண்டாடத்தக்கது.
மனைவியின் தம்பியை ஏளனமாகப் பேசுவது, நமுட்டுச் சிரிப்பால் மன உளைச்சல் தருவது, அவமானப்படுத்தி ஆனந்தமடைவது என தனக்கான வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார் குரு சோமசுந்தரம். அவருக்கு மனைவியாக வருகிற நிவேதிதா ராஜப்பனின் நடிப்பில் பக்குவம் தெரிகிறது.
நாயகனின் அப்பாவாக ஆர் சுந்தர்ராஜன், அம்மாவாக குடசனத் கனகம் என இன்னபிறர் கதையின் சில அத்தியாயங்களில் ஆளுமைகாட்ட,
கதை, திரைக்கதையில் பங்களித்திருக்கிற நக்கலைட்ஸ் பிரசன்னா பாலசந்தர் குடிகாரனாக செய்யும் அலப்பரைகளும், அவருடன் இணைந்து களமாடுகிற ஜென்சன் திவாகரின் ரகளையும் சிரிப்புக்கு உத்தரவாதம் தருகின்றன. இயக்குநர் பாலாஜி சக்திவேல் உள்ளிட்டோரும் கதையில் கலந்திருக்கிறார்கள்.
வைசாக் இசையில் இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் பாடியிருக்கும் ‘மானம் பறக்குது’ பாடல் மனதில் இடம்பிடிக்கிறது. பின்னணி இசையும், சுஜித் என்.சுப்பிரமணியனின் கேமரா கோணங்களும் திரைக்கதையை மெருகேற்றியிருக்கின்றன.
இந்த சமூகத்தில் தன்மானம், சுய மரியாதை, உழைப்புக்கேற்ற ஊதிய எதிர்பார்ப்பு என எல்லாவற்றையும் தூக்கிப்போட்டு, பணிந்து குனிந்து வளைந்து நெளிந்தால்தான் வாழ முடியும் என்ற எதார்த்தத்தை படு சீரியஸான சப்ஜெக்டை காமெடி கலாட்டாவாக பரிமாறியிருக்கிற குடும்பஸ்தன் குதூகலத்துக்கு உத்தரவாதம் தருகிறான்!
-சு.கணேஷ்குமார்

