Home விமர்சனம் ‘குழந்தைகள் முன்னேற்றக் கழகம்’ சினிமா விமர்சனம்

‘குழந்தைகள் முன்னேற்றக் கழகம்’ சினிமா விமர்சனம்

அந்தக் கால நகைச்சுவை நடிகர் செந்திலும் சிலகாலம் முன்புவரை நகைச்சுவை நடிகராக இருந்த யோகிபாபுவும் இணைந்திருக்கும் படம்; நம் வீட்டுப் பிள்ளைகளுக்கு பள்ளிப் பருவத்திலேயே அரசியல் தெரிய வேண்டும் என எடுத்துச் சொல்லும் ‘குழந்தைகள் முன்னேற்றக் கழகம்.’

அரசியல்வாதி யோகிபாபுவுக்கு இரண்டு மனைவிகள். இருவரின் பிள்ளைகளும் ஒரே ஸ்கூலில் படிக்கிறார்கள்; அவ்வப்போது அவர்களுக்குள் சண்டை உருவாகிறது. முதல் மனைவியின் வாரிசு ஸ்கூலில் திமிர்த்தனமாக நடப்பதோடு, எல்லோரும் தன்னை லீடர் என்று அழைக்க வேண்டும் என விரும்புகிறான். அதற்காக எதை வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருக்கிறான். அதில் அவனுக்கு திருப்தியும் கிடைக்கிறது. ஒரு கட்டத்தில் அவன் ஸ்கூல் லீடர் தேர்தலில் போட்டியிடுகிறான். அவனை வீழ்த்த யோகிபாபுவின் இரண்டாவது மனைவியின் மகன் ஸ்கெட்ச் போடுகிறான். அதன்பின் என்னவானது என்பதில் மிகச்சில சுவாரஸ்யங்கள் இருக்கிறது.

மூத்த நடிகர் செந்தில் அரசியல் கட்சியொன்றின் தலைவராக, முழுவதுமாக முடி கொட்டிப்போன தலையை மறைக்க துண்டு சுற்றிக் கொண்டு வருகிறார். கெட்டப்பில் புதுமையேதுமில்லை என்றாலும் சிரிக்கும்படி எதையாவது செய்வார் என்று எதிர்பார்த்தால் அரசியல் பற்றி சீரியஸாக சில வார்த்தைகளை பேசி நகர்கிறார்.

யோகிபாவுக்கு இரு மனைவிகளால் சிக்கல் சிரமங்கள் ஏற்பட்டு அது காமெடி களேபரமாக இருக்கும் என நினைத்தால் அதற்கும் பெரிதாய் வாய்ப்பில்லை; அதையும் தாண்டி தன் பாணியில் லேசாக சிரிக்க வைக்க முயற்சித்திருக்கிறார்.

யோகிபாபுவின் இரண்டாம் மனைவியாக அஸ்மிதாவை பார்த்ததும் குத்துப்பாட்டு ஏதேனும் இருக்குமோ என்ற எதிர்பார்த்தால் உம்ஹூம்…

யோகிபாபுவின் மகன்களாக வருகிற இமயவர்மன், அத்வைத், யோகிபாபுவின் அரசியல் எதிரியாக வருகிற சுப்பு பஞ்சு, தலைமையாசிரியராக வருகிற சித்ரா லெஷ்மணன் என பலரும் அவரவர்க்கு கொடுக்கப்பட்ட வேலையை செய்திருக்கிறார்கள். அதில் இமயவரம்பன் செய்யும் அரசியலும் அதிலிருக்கும் சாதுர்யமும் கவனம் பெறுகிறது.

நாட்டிலிருக்கும் அரசியல்வாதிகள் செய்யும் அயோக்கிய அரசியலை பள்ளிப் பருவத்திலுள்ளவர்கள் செய்தால் எப்படியிருக்கும் என்ற கதைக்களம் சுவாரஸ்யம்தான் என்றாலும் இயக்குநர் சங்கர் தயாளின் திரைக்கதையில் அது மிஸ்ஸிங். அதை அவர் கவனத்துக்கு கொண்டு செல்லலாம் என்று பார்த்தால் அவர் சில வாரங்கள் முன் இந்த உலகத்திலிருந்தே மிஸ்ஸிங்.

குழந்தைகள் முன்னேற்றக் கழகம் _ குதூகலமில்லா உலகம்!

-சு.கணேஷ்குமார்

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்