தமிழக மக்களிடம் வெப் சீரிஸ் பார்ப்பதற்கான ஆர்வத்தை தூண்டிவிட்டதில் 2022களில் வெளியான சுழலுக்கு பெரும் பங்குண்டு. அந்த சீஸனில் காவல்துறை அதிகாரியாக சக்கரை என்ற கதாபாத்திரத்தில் சுறுசுறுப்பு காட்டிய கதிர், நந்தினியாய் வலம் வந்த ஐஸ்வர்யா ராஜேஷ் இருவரையும் இழுத்துப் போட்டுகொண்டு வேறொரு தளத்தில் வேகமெடுக்கிறது புஷ்கர் _ காயத்ரியின் எழுத்தில் உருவான ‘சுழல் 2.’
தன் சித்தப்பாவை கொலை செய்ததற்காக சிறை தண்டனை அனுபவித்துவரும் நந்தினிக்கு விடுதலை பெற்றுத்தர முயற்சி செய்துகொண்டிருக்கிறார் வழக்கறிஞர் செல்லப்பா. அவர் திடீரென ஒரு நாள் குண்டு துளைத்து இறந்துகிடக்க, வழக்கை விசாரிக்க வரும் காவல்துறை உயரதிகாரி அவர் தற்கொலை செய்துகொண்டதாக கருதுகிறார். ஆனால், அது கொலையாக இருக்கலாம் என சந்தேகப்படுகிறார் சக்கரை. செல்லப்பாவின் மரணம் நிகழ்ந்த வீட்டில் முத்து என்ற இளம்பெண் துப்பாக்கியுடன் பதுங்கியிருக்க, அவள் கைது செய்யப்படுகிறாள். அவளிடம் விசாரணையை தொடங்கும்போது சுற்று வட்டத்திலுள்ள போலீஸ் ஸ்டேஷன்கள் ஒவ்வொன்றிலும் ஒரு பெண் என் ஏழு பேர் செல்லப்பாவை ‘நான்தான் கொன்றேன்’ என சொல்லி சரணடைகிறார்கள். முத்துவையும் சேர்த்து 8 பெண்கள், நந்தினி இருக்கிற சிறைச்சாலையில் அடைக்கப்படுகிறார்கள்.
இப்படியாக கதை விறுவிறுப்பான கட்டத்தை எட்ட, செல்லப்பா கொலை செய்யப்பட்டிருந்தால், செய்தது யார்? என்ன காரணம்? தற்கொலை என்றால் அதற்கான அவசியம் என்ன? இப்படியான கேள்விகள் நமக்குள் உருவாக அதற்கெல்லாம் பதில் சொல்கின்றன அடுத்தடுத்த எபிசோடுகள்…
அது ஏன், இது ஏன், அது எப்படி, இது எப்படி என பல குழப்பங்களை மனதில் சுமந்து கொண்டிருப்பதை முகபாவங்களில் சரியாக பிரதிபலிக்கும் கதிர், குற்றவாளியைக் கண்டறியும் பணியை பரபரப்பாக செய்திருக்கிறார்.
ஊர் முழுக்க செல்வாக்கு, எடுத்துக் கொண்ட வேலையில் காட்டும் முழுமையான ஈடுபாடு என செல்லப்பாவாக வருகிற லாலின் நடிப்பில் கம்பீரம் தெரிகிறது.
மனதுக்கு பிடிக்காவிட்டாலும் பணி நிமித்தம் சக்கரையுடன் ஒத்துப்போக வேண்டிய கட்டாயம் சித்தப்பு சரவணனுக்கு. துணிந்து பேசவும் முடியாமல், பணிந்து போகவும் இயலாமல் அப்படியும் இப்படியுமாய் பேலன்ஸ் செய்திருப்பதை ரசிக்க முடிகிறது. ஒரு காட்சியில், வெறித்தனத்தை வெகுளித்தனமாக வெளிப்படுத்தியிருப்பது அதிர வைக்கிறது.
தாங்களாக முன்வந்து சரணடைந்து சிறை செல்கிற எட்டு பேரில் முத்துவாக கெளரி கிஷன், நாச்சியாக சம்யுக்தா, முப்பியாக மோனிஷா ப்ளஸி, சந்தனமாக நிகிலா என ஒவ்வொருவரும் மிரட்டலான பங்களிப்பைத் தந்து, கிளைமாக்ஸில் உடம்பை வருத்திக் கொண்டிருக்கிறார்கள். பெரியளவிலான அந்த உழைப்புக்கு ஸ்பெஷல் பாராட்டுக்கள்.
கணவனின் தவறான செயல்பாடுகள் தெரிந்து அதிர்ச்சியடைவது, பார்க்கும் நாம் அதிர்ச்சியடையும்படி சட்டென ஒரு முடிவெடுப்பது, எட்டு சிறுமிகளுக்கு அடைக்கலம் கொடுத்து காப்பாற்றுவது என ஒரு அத்தியாயத்தை முழுமையாக ஆக்கிரமித்திருக்கிறது மஞ்சிமா மோகனின் ஆளுமையான நடிப்பு.
கயல் சந்திரன், அமித் பார்கவ் என ஏகப்பட்ட நடிகர்கள் அணிவகுத்து, அவரவர் வேலையை பொறுப்பாக செய்து நகர்கிறார்கள்.
சாம் சி எஸ் தந்திருக்கும் பின்னணி இசை திகிலுணர்வைத் தூண்டுகிறது. இடம்பெற்றிருக்கும் ஏகப்பட்ட பாடல்களில் ‘ஆலங்கட்டி மழை’ பாடல் தனித்துத் தெரிகிறது; மனதில் நிறைகிறது.
சிறைச்சாலையில், கடலில் என கதை நிகழ்விடங்கள் தாறுமாறாய் தாவிக் கொண்டிருக்க, அஷ்டகாளி திருவிழா நாள் கணக்கில் பிரமாண்டமாக நடந்துகொண்டிருக்க அத்தனையையும் கழுகுப் பார்வையில் சுருட்டியிருக்கிறது ஒளிப்பதிவாளர் அப்ரகாம் ஜோசப்பின் கேமரா.
சீரிஸின் ஒட்டுமொத்த காட்சிகளிலும் கலை இயக்குநர் தன் திறமையின் நீள அகலத்தைக் காட்டியிருக்கிறார்.
செல்லப்பாவை காமவெறியராக நினைக்க வைக்கும் ஆரம்ப அத்தியாயங்கள் நிமிர்ந்து உட்கார வைக்க, சிறுமிகள் கடத்தல் சம்பந்தமாக விரியும் காட்சிகளில் பதற்றம் தொற்றிக் கொள்கிறது. அதே பரபரப்பு கடைசிவரை தொடரும் என எதிர்பார்த்தால் ‘இதெல்லாம் சாத்தியமில்லையே’ என்ற எண்ணத்தை உருவாக்கி சலிப்பு மோடுக்கு கொண்டுபோகின்றன சிறைச்சாலையில் சுற்றிச்சுழலும் எபிசோடுகள்.
சிலபல குறைகள் இருந்தாலும், அதையெல்லாம் தாண்டி 6 மணி நேர செலவிடலில் பெருமளவு விறுவிறுப்பான அனுபவத்துக்கு உத்தரவாதம் தருகிறது நான் நான்கு, நீ நான்கு என பிரித்துக்கொண்டு பிரம்மாவும் கே.எம். சர்ஜுனும் இயக்கியிருக்கும் இந்த சுழல்.
–சு.கணேஷ்குமார்


