Home சினிமா நாங்கள் சினிமா விமர்சனம்

நாங்கள் சினிமா விமர்சனம்

இயல்பைத் தொலைத்த மனிதர்களை நிஜத்திலும், திரைப்படங்களிலும் ஏராளமாய் பார்த்திருப்போம். அப்படியொரு மனிதனை மீண்டும் நீங்கள் பார்க்கும் வாய்ப்பைத் தருகிற படைப்பாக ‘நாங்கள்.’

1998 காலகட்டம்; ராஜ்குமார் ஊட்டியில் பள்ளியொன்றை நடத்திவருகிறார். தன்னுடன் வசிக்கும் தனது மூன்று மகன்களை சமைப்பதிலிருந்து கழிவறை சுத்தம் செய்வதுவரை பல வேலைகளைச் செய்யச் சொல்கிறார். அந்த சிறு பிள்ளைகள் செய்யும் வேலைகளில் 100 சதவிகிதம் சுத்தத்தை, ஒழுங்கை எதிர்பார்க்கிறார். கொஞ்சம் அப்படி இப்படி இருந்தாலும் அடிக்கிறார். படிப்பிலும் முதலிடம் பெற வேண்டும் என எதிர்பார்க்கிறார். அவரைப் பார்த்தாலே மூன்று பிள்ளைகளும் பயத்தில் நடுங்குகிறார்கள். வயதில் இளைய பிள்ளை அப்பாவின் கடுமையான கண்டிப்பால் நின்ற நிலையிலேயே சிறுநீர் கழிக்கிறான். அந்தளவுக்கு கொடுமைக்காரராக நடந்து கொள்கிறார்.

பிள்ளைகளை கண்டித்து வளர்ப்பதாக நினைத்துக்கொண்டு அத்தனை கொடுமைகளையும் செய்து கொண்டிருக்கிற அவர், ஒழுக்கமானவரா என்றால் அதுதான் இல்லை. பிள்ளைகள் முன்பாகவே சரக்கடிக்கிறார். அந்த சரக்கையும் பிள்ளைகளே எடுத்துக் கொடுக்க வேண்டியிருக்கிறது.

கதை இப்படி நகர, அந்த கொடுமைகளிலிருந்து பிள்ளைகள் எப்படியாவது தப்பித்து விட வேண்டும், அந்த கொடூரனுக்கு தண்டனை கிடைக்க வேண்டும் என்றெல்லாம் நம் மனதில் எதிர்பார்ப்பு உருவாகிறது. அதெல்லாம் நடந்ததா இல்லையா என்பதுதான் திரைக்கதை… இயக்கம் அவினாஷ் பிரகாஷ்

ராஜ்குமாராக அப்துல் ரஃபீ. சொந்த பிள்ளைகளை கண்டிப்பு என்ற பெயரில் நடுங்க வைக்கிறவராக, மனைவியை வலுவான காரணமில்லாமல் வெறுத்து ஒதுக்குகிறவராக சற்றே சைக்கோ தனமாக கதாபாத்திரத்தை படம் பார்ப்பவர்களுக்கு அந்த பாத்திரத்தின் மீது ஆத்திர ஆவேசம் வருகிற அளவுக்கு பொருத்தமாக செய்திருக்கிறார்.

அப்பாவைப் பார்த்து பயந்து நடுங்கும் பிள்ளைகளாக மிதுன், ரித்திக், நிதின். மூவரும் கண்களிலும் உடல்மொழியிலும் கதையின் தேவைக்கேற்ப பயத்தையும் பதட்டத்தையும் கச்சிதமாக காண்பித்து பரிதாபத்தை அள்ளுகிறார்கள்.

அம்மாவாக வருகிற பிரார்த்தனா ஸ்ரீகாந்த், மனதைப் புரிந்துகொள்ளாத கணவனின் மனநிலையால் மனதுடைகிற தருணங்களில் கண்ணீர் வடித்து கலங்கச் செய்கிறார்.

தாத்தாக்கள், பாட்டிகள், தோட்டப் பணியாளர்கள் என மற்றவர்களுக்கு சில நிமிடங்கள் வந்துபோகிற வேலைதான். அதை தங்கள் பாத்திரங்களின் தன்மையுணர்ந்து செய்திருக்கிறார்கள்.

குதிரை மாதிரி வளமாக வளர்ந்த நாய் ஒன்று குறிப்பிட்டுச் சொல்லும்படியான கதாபாத்திரமாக படத்தில் களமாடியிருக்கிறது.

படத்தின் பெரும்பாலான காட்சிகள் இருட்டிலும், மங்கலான வெளிச்சத்திலும் கடந்தோட, ஒளி ஊடுறுவலுக்கேற்ப கேமரா கோணங்களை அமைத்து உறுத்தலின்றி படமாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் (படத்தை இயக்கியிருக்கிற) அவினாஷ் பிரகாஷ்.

பின்னணி இசையில் சோகத்தின் பிரதிபலிப்பை அளவுக்கு அதிகமாக கடத்தியிருக்கும் வேத் சங்கர் சுகவனம், சைந்தவி குரலில் தந்திருக்கும் கனவே’ பாடல் இதம் பரப்புகிறது.

படத்தை இயக்கி, ஒளிப்பதிவு செய்திருக்கிறவரே எடிட்டிங் பொறுப்பையும் ஏற்றிருக்கிறார். மனிதர் படத்தின் நீளத்தில் பாதியை நறுக்கியிருக்கலாம். அதை செய்யாமல் பொறுமையைச் சோதிக்கிறார்.

சைக்கோ மனநிலையிலிருக்கும் ஒருவனிடம் சிக்கி அவனுடைய வாரிசுகள் படுகிற கஷ்ட நஷ்டங்களை, ஆதிகால தூர்தர்சனில் இடம்பெறும் விருது பெற்ற படங்களின் நகலைப் போல் உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் அவினாஷ் பிரகாஷ். இந்த படமும் சிலபல சொல்லிக்கொள்ளும்படியான விருதுகளைப் பெற்றிருக்கிறது என்பது விசேஷச் செய்தி.

பிரபலமான நடிகர் நடிகைகள் கிடையாது; பரிச்சயமான முகங்கள் ஒன்றிரண்டு கூட லேது; கதை, திரைக்கதையில் கமர்சியல் மசாலா வாசனை சுத்தமாய் நஹி. அப்படிப்பட்ட வித்தியாசமான படைப்புகளை விரும்புகிறவரா தாங்கள்; ஆம் என்றால் உங்களுக்கானதுதான் நாங்கள்!

-சு. கணேஷ்குமார்

 

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்