அளவுக்கு மிஞ்சினால் பாசமும் பாய்சன்தான். மாமன் சொல்ல வரும் கருத்து இதுதான்.
தன் அக்காவின் மகன் மீது அளவுக்கு அதிக பாசம் வைக்கிறார் அந்த மனிதர். எந்தளவுக்கு என்றால், அவருக்கு கல்யாணமாகி முதலிரவுக்கு ஏற்பாடாகிறது. பூக்களால் அலங்கரிக்கப்பட்ட படுக்கையில் அந்த வாண்டு வந்து படுக்கிறது. காரணம் அந்த வாண்டுக்கு அம்மா, அப்பா, சோறு, தண்ணி என எதுவுமே வேண்டாம்; தாய் மாமனுடன் இருந்தால் போதும். அந்தளவுக்கு அவர் பாசம் காட்டியிருக்கிறார்…
பாசம் வைப்பதில் தவறில்லை. அந்த பாசத்தால் தன் மனைவியை ஒரு மனுஷியாக கூட மதிக்காமல் அக்காவின் பிள்ளைதான் உலகம் என்றிருக்கிறார். அதுதான் உலகமகா தவறு. அவர் அந்த தவறை எந்தவொரு குற்றவுணர்ச்சியுமின்றி செய்கிறார் என்பதுதான் ஹைலைட்.
அவருடைய மனைவிக்கும் இதயம், உணர்வு, உணர்ச்சி என எல்லாமும் இருக்கத்தானே செய்யும். கணவன் அதில் எதற்கும் மரியாதை தராமல் போக, அவனுடன் வாழ்வதில் அர்த்தமில்லை என்ற முடிவுக்கு வருகிறார்.
அந்த தாய்மாமன் பாசம் காட்டி வளர்க்கும் பிள்ளை தன் அப்பாவிடம்கூட நெருங்குவதில்லை. தன் பிள்ளை எந்த நேரமும் தாய் மாமனுடன் மட்டுமே இருப்பதால் அந்த அப்பா நொந்து போகிறார். சொந்த அப்பாவிடமே நெருங்காத அளவுக்கு அந்த பிள்ளையை தன் பாசத்தால் கட்டிப் போட்டிருக்கிறார் தாய் மாமன்.
எதுவுமே அளவுக்கு மிஞ்சினால் ஆபத்துதான். அந்த தாய்மாமனின் அளவுக்கு மிஞ்சிய பாசமும் ஆபத்தாக மாறிப்போகிறது; குடும்பங்களின் சந்தோசத்தைப் பறிக்க காரணமாகிறது. அதையெல்லாம் பார்த்தாவது அவர் திருந்தினாரா இல்லையா என்பது கிளைமாக்ஸ்…
சூரியின் படமாயிற்றே, காமெடி இல்லாவிட்டால் ரசிகர்கள் ஏமாந்து போவார்கள் என யோசித்து, போனால் போகட்டும் என்று நான்கைந்து காட்சிகள் வைத்திருக்கிறார் இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ்.
அக்காவின் மகன் மீது பாசம் வைத்து, அதிலிருந்து விடுபடும் வாய்ப்பு கிடைத்தும் அதை பயன்படுத்தாமல் மனைவியை கொடுமைப்படுத்தி, பலரது நிம்மதியைக் கெடுக்கும் வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார் தாய்மாமனாக வருகிற சூரி. காதல் மனைவியுடன் ரொமான்ஸில் புகுந்து விளையாடுபவர், ஆக்சன் காட்சியில் மாஸ் ஹீரோ ரேஞ்சுக்கு அதிரடி கிளப்புகிறார்.
சூரியைக் காதலித்து அவருக்கு மனைவியாகும் ஐஸ்வர்யா லெஷ்மி, கணவனின் பாச நேசம் கிடைக்காமல் மன உளைச்சலுக்கு ஆளாகிற உணர்வை அதன் தன்மை குறையாமல் வெளிப்படுத்தியிருக்கிறார். நடிப்பு ராட்சசி என்று புகழும் அளவுக்கு இருக்கிறது அவரது ஃபெர்பாமென்ஸ்.
தாய் மாமனை உலகமாக நினைக்கும் சிறுவனாக பிரகீத் சிவன். படம் முழுக்க ‘இதெல்லாம் ரொம்ப ஓவர்டா’ என்று சொல்லுமளவுக்கு நடிக்க வைத்திருக்கிறார்கள்.
கதாநாயகனுக்கு அக்காவாக லப்பர் பந்து ஸ்வாசிகா. ஒரு கட்டம் வரை தம்பி மீது பாசம், அதற்குமேல் அவன் மீது வெறுப்பு என இரண்டையும் கலந்து கட்டி தன் நடிப்பில் கொண்டு வந்திருக்கிறார்.
பாலசரவணன் நடிப்பில் ஆளுமை காட்டக்கூடியவர். அவரை ஒப்புக்கு சப்பாணியாக பயன்படுத்தியிருப்பது அநியாயம் அக்கிரமம்.
ராஜ்கிரண் _ விஜி சந்திரசேகர் ஜோடி ரசிகர்களை வெறுப்பேற்ற உதவுகிறார்கள்.
ஹேசம் அப்துல் வஹாப்பின் பின்னணி இசை, பாடல்கள் கதைக்கேற்ற கச்சிதம்.
அவசியமிருக்கிறதோ இல்லையோ எல்லா கதாபாத்திரங்களும் எந்த நேரமும் புத்தம்புதிய பளீர் வண்ண உடைகளில் திரிகிறார்கள். அதை தினேஷ் புருஷோத்தமனின் ஒளிப்பதிவில் பார்க்கும்போது கலர்ஃபுல்லாக இருக்கிறது.
பாசம் என்கிற பெயரில் ஒருவன் எவர் மனதையும் புரிந்துகொள்ளாமல் செய்கிற அராஜகங்களை முழுநீளப் படமாக பார்ப்பதை உங்களால் ஜீரணிக்க முடியுமென்றால், படம் பார்த்து காட்சிக்கு காட்சி அழுது வடிவது உங்களுக்கு பிடிக்கும் என்றால் இந்த படம் உங்களை திருப்திபடுத்தும். படம் பார்ப்பது மனதின் ரிலாக்ஸுக்காக என்பவர்களை படுத்தும்.
மாமன் _ பாசக்கார சைக்கோ!
-சு.கணேஷ்குமார்


