உணர்வுபூர்வமான கதையும் உயிரை உலுக்குகிற திரைக்கதையுமாக ‘டி என் ஏ.’
அதர்வா, நிமிஷா தம்பதிக்கு குழந்தை பிறக்கிறது. பிறந்த குழந்தை மாறிப்போக, குழந்தை எப்படி மாறியது, மாறிய குழந்தை எங்கே போனது என்பதை கண்டுபிடிக்க காவல் துறை உதவியுடன் களமிறங்குகிறார் அதர்வா. குழந்தை கடத்தப்பட்ட விவரம் தெரியவருகிறது.
கடத்தப்பட்டது எப்படி, எதற்காக என விரிகிற காட்சிகள் ஆடியன்ஸுக்கு தருவதெல்லாம் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி. குழந்தை கிடைத்ததா இல்லையா என்பது கிளைமாக்ஸ்…. இயக்கம் நெல்சன் வெங்டேசன்
காதல் தோல்வியால் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி தந்தையின் வெறுப்பைச் சம்பாதிப்பது, நிமிஷாவை திருமணம் செய்துகொண்டபின் புத்துணர்ச்சியுடன் வாழ்க்கையைத் துவங்குவது, குழந்தை பிறந்த சந்தோஷம் மனதுக்குள் பரவிக்கொண்டிருக்கும்போதே குழந்தை கடத்தப்பட்டது தெரிந்து கலக்கமடைவது என நீளும் காட்சிகளில் அதர்வா அளித்திருப்பது இயல்பு மீறாத நடிப்பு. கடத்தல் கும்பலை தேடிப்பிடித்து சுளுக்கெடுக்கும் ஆக்சன் காட்சிகள் மிரட்டல்.
மனநல பிரச்சனைக்கு ஆளாகியிருந்தாலும் தன் குழந்தையை அடையாளம் காண்பதில் காட்டும் தெளிவு, குழந்தையை பறிகொடுத்த தவிப்பு, குழந்தை கைக்கு கிடைத்தபின் வெளிப்படுத்தும் பரவச உணர்வு என தன் கடமையை நேர்த்தியாக செய்திருக்கிறார் நிமிஷா சஜயன்.
அதர்வாவின் தந்தையாக சேத்தன், காவல்துறை உயரதிகாரியாக பாலாஜி சக்திவேல், மகப்பேறு மருத்துவராக ரித்விகா, குழந்தைகளைக் கடத்துவதில் மூளையாக செயல்படுகிற சுப்ரமணிய சிவா, போஸ் வெங்கட் இன்னபிற நடிகர்களுக்கு கதையில் முக்கியத்துவமிருக்கிறது.
கவர்ச்சிக்கு பயன்பட்டிருக்கிறார் காயத்ரி சங்கர். அம்மணியின் தேகம் இத்தனை செழுமையானதா என வியக்க வைக்கிறது அவர் போட்டிருக்கும் அசத்தல் ஆட்டம்.
குழந்தைக் கடத்தலுக்கு உடந்தையாக களம்காண்கிற சாத்தூர் விஜயலட்சுமி பாட்டியின் வில்லத்தனமாக உடல்மொழியும் தெனாவட்டு ததும்பும் வசன உச்சரிப்பும் அப்ளாஸ் அள்ளுகிறது.
பகீர் திகீர் காட்சிகளோடு கடந்தோடும் கதைக்கு ஜிப்ரான் வைபோதாவின் பின்னணி இசையும் வி.ஜே.சபு ஜோசப்பின் படத்தொகுப்பும் பதற்றச் சதவிகிதத்தை கூட்டுகிறது.
ஐந்து இசையமைப்பாளர்களால் உருவாகியிருக்கும் பாடல்கள் பத்தோடு பதினொன்று என்றளவில் கடந்து போகின்றன.
பார்த்திபனின் கேமரா இருள் தருணங்களில் நடக்கும் குற்றச் சம்பவங்களை படம்பிடித்திருக்கும் விதம் பய உணர்வுக்குள் தள்ளுகிறது.
மது போதையில் மிதக்கும் நாயகன், மனநலப் பிரச்சனைக்கு ஆளாகியிருக்கும் நாயகி என கட்டமைக்கப்பட்ட ஆரம்பக் காட்சிகளில் அவ்வளவாய் கவராத நிலையில், போகப்போக அதற்கான அவசியத்தை இணைத்துக் கொண்ட திரைக்கதை உயிரோட்டமாகியிருக்கிறது. சென்னையை கதைக்களமாக பார்க்கும்போது பொருத்தமாக இல்லாதது போலிருக்கிறது.
குழந்தைகள் கடத்தலின் ஆரம்பப் புள்ளி, அடுத்த கட்டப் பயணம், நரபலி என பதைபதைப்பை எகிறச் செய்திருக்கும் இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் சேகரித்துப் பரிமாறியிருக்கும் விஷயங்கள் பயங்கரம். குழந்தைகள் கடத்தலை மையமாக வைத்து வந்தவற்றில் ‘6 மெழுகுவர்த்திகள்’ திரைப்படம் ஏராளமான டீடெய்ல்களோடு தந்த பதைபதைப்பு தந்தது நினைவுக்கு வந்து போகும்.
தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட தரத்திலிருக்கும் இந்த படத்தில் உணர்வுகளில் கரையவும், திரில்லர் அனுபவத்தில் பரபரக்கவும் வாய்ப்புகள் அதிகம்.
டி என் ஏ _ பரிசோதனை சக்ஸஸ்!
-சு.கணேஷ்குமார்
