Home Uncategorized படம் சிறப்பாக வரவேண்டும் என நான் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த படக்குழுவும் மகிழ்ச்சியுடன் பணியாற்றினோம்! – ‘லவ்...

படம் சிறப்பாக வரவேண்டும் என நான் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த படக்குழுவும் மகிழ்ச்சியுடன் பணியாற்றினோம்! – ‘லவ் மேரேஜ்’ படத்தின் முன்னோட்ட வெளியிட்டு விழாவில் விக்ரம் பிரபு பேச்சு 

விக்ரம் பிரபு – சுஷ்மிதா பட் நடித்திருக்கும் ‘லவ் மேரேஜ்’ படத்தின் முன்னோட்ட வெளியிட்டு விழா சென்னையில்  நடைபெற்றது. படக்குழுவினருடன் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

நிகழ்வில் நடிகர் விக்ரம் பிரபு பேசியபோது, ” நாங்கள் இங்கே அனைவரும் குடும்பமாக இணைந்து ஒரு குடும்ப படத்தை வழங்குகிறோம்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு தருணத்தில் கிடைத்த மகிழ்ச்சி இதற்கு முன் எந்த திரைப்படத்தின் படப்பிடிப்பிலும் கிடைத்ததில்லை. நான் இந்தப் படத்தின் படப்பிடிப்பிற்காக கோபிசெட்டிபாளையம் செல்கிறேன் என்று அப்பாவிடம் சொன்னதும் அவர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். அத்துடன் மட்டும் நிற்காமல் அங்கு சென்றால் இன்னார் வீட்டுக்கு செல்… இன்னார் வீட்டுக்கு செல்.. என்று ஏராளமானவர்களை மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். அவர்களை அங்கு சந்தித்தபோது மகிழ்ச்சி இரட்டிப்பானது.

அந்தத் தருணத்திலேயே இந்த படம் நல்ல படமாக வரவேண்டும் என்ற அழுத்தம் எனக்குள் ஏற்பட்டது. இந்தப் படம் சிறப்பாக வரவேண்டும் என நான் மட்டும் இல்லாமல் ஒட்டுமொத்த பட குழுவும் மகிழ்ச்சியுடன் பணியாற்றியது.

ஷான் ரோல்டனை எனக்கு மிகவும் பிடிக்கும். அதனால் தான் இந்த படத்தில் மீண்டும் இணைந்து பணியாற்றினோம். இந்தப் படத்திற்கு இசை மிகப்பெரிய பலம். அவர் அழகாக செய்து இருக்கிறார் நல்ல ஆல்பமாக கொடுத்து சாதித்து இருக்கிறார். இதற்காக அவருக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

படப்பிடிப்பு நடைபெற்ற ஒரு மாத காலம் வரை குடும்பமாக அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றினோம். இது மறக்க இயலாத அனுபவம்.

இந்தப் படத்தில் இந்த கதாபாத்திரத்தில் நடிகை சுஷ்மிதாவை தவிர வேறு யாராலும் பொருத்தமாக நடித்திருக்க முடியாது. அந்த அளவிற்கு அற்புதமாக நடித்திருக்கிறார். அவருக்கும் என்னுடைய பாராட்டுக்கள். தமிழ் சினிமா சார்பில் அவரை மனதார வரவேற்கிறேன்.

இந்தப் படத்தில் பணியாற்றிய நடிகர்களுக்கும், நடிகைகளுக்கும் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

லவ் மேரேஜ் படத்திலும் வித்தியாசமாக குடும்பத்தினர் அனைவரும் கண்டு களிக்கும் வகையிலான குடும்ப படமாக உருவாக்கி இருக்கிறோம். எப்போதும் போல் என் மீதும், என் படங்கள் மீதும் அன்பு செலுத்தி, படத்தை வெற்றி பெற செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

‘லவ் மேரேஜ் ‘ படத்தின் முன்னோட்டத்தை தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான தனுஷ் அவருடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு, படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார் என்பது கவனிக்கத்தக்கது.

அறிமுக இயக்குநர் சண்முக பிரியன் இயக்கத்தில் உருவாகி ஜூன் 27 ஆம் தேதி அன்று வெளியாகும் ‘லவ் மேரேஜ்’ திரைப்படத்தில் விக்ரம் பிரபு, சுஷ்மிதா பட் ,ரமேஷ் திலக், மீனாட்சி தினேஷ், அருள்தாஸ், முருகானந்தம், கோடாங்கி வடிவேலு உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். மதன் கிறிஸ்டோபர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசை அமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை பரத் விக்ரமன் மேற்கொள்ள கலை இயக்கத்தை ராஜா கவனித்திருக்கிறார். ஃபேமிலி எண்டர்டெயின்ராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை அஸ்யூர் ஃபிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டேய்ன்மென்ட் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் டாக்டர் ஸ்வேதா ஸ்ரீ மற்றும் ஸ்ரீநிதி சாகர் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இந்தத் திரைப்படத்தை தமிழகம் முழுவதும் சக்தி ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் சார்பில் விநியோகஸ்தர் சக்தி வேலன் வழங்குகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்