காமெடி கலாட்டாக்களோடு சமூகத்துக்கு கருத்து சொல்கிற ‘குட் டே.’
குடிபோதையில் மிதக்கும் நடுத்தர வயதுக்காரர்தான் படத்தின் ஹீரோ. வேலை செய்யுமிடத்தில் மேனேஜருடன் பிரச்சனை; அதனால் எம் டி’யிடம் அடி வாங்குகிறார். அவர் குடியிருக்கும் வீட்டின் முதலாளி, முறைவாசல் செய்வதற்கு பணம் கேட்க அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது மண்டையை உடைக்கிறார். போகிற போக்கில் லாரியொன்றின் கண்ணாடி மீது கல்லெறிகிறார்.
கல்யாணமாகி நல்லபடியாக வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கும் தன் கல்லூரிக் காலத்து தோழியை நள்ளிரவில் எழுப்பி அவளது கணவனுக்கு பிபி ஏற்றுகிறார்.
இப்படி எல்லா பக்கமும் ஏடாகூடமாக நடந்துகொண்டால் போலீஸ் பிடியில் சிக்காமல் இருக்க முடியுமா? சிக்குகிறார். போலீஸ் அதிகாரியின் லத்தி அவரை பதம் பார்க்கிறது… ஒரு கட்டத்தில் அவர் குடியை நிறுத்தும் முடிவுக்கு வருகிறார்.
போலீஸ் அடி அவரை திருத்தியதா என்றால் அதுதான் இல்லை. ஒரு குழந்தையால் திருந்துகிறார்.
அந்த குழந்தை யார், அது எப்படி அவர் குடியை நிறுத்த காரணமாகிறது என்பதெல்லாம் மீதிக்கதை. பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா சந்தித்த விஷயங்களை மையப்படுத்தி அவரது வசன பங்களிப்பையும் பெற்று படத்தை இயக்கியிருக்கிறார் என் அரவிந்தன்.
கதைநாயகன் பிரித்விராஜ் ராமலிங்கத்துக்கு எளிய மனிதன் சந்திக்கும் வலிகளை எடுத்துக்காட்டும் கதாபாத்திரம். நடையிலும் பேச்சிலும் நிஜ குடிகாரராகவே மாறியிருக்கும் அவர் மேனேஜரின் கேவலமான நடவடிக்கையை கண்டித்து வேலையிழப்பது பரிதாபமாக இருக்க,
கல்லூரி தோழியின் வீட்டுக்கு பர்த் டே கேக்குடன் சென்று அவளது காதலனாக மாறி செய்யும் அலப்பரை அட்டகாசங்கள், ஏ டி எம் மெஷினை உடைக்கிற அடாவடிகள், போலீஸின் வாக்கி டாக்கியை எடுத்துவைத்துக் கொண்டு செய்கிற லந்துகள் கலகலப்பூட்டுகின்றன. சென்டிமெண்ட் காட்சிக்கும் பொருந்திப்போகிறது அவரது இயல்பான நடிப்பு.
தன்னை இரவு நேரத்தில் தேடி வந்து, தன் கணவன் எதிரிலேயே தன்னை செல்லம் கொஞ்சும் நாயகனைப் பார்த்து சந்தோஷம் கலந்த எரிச்சல் காட்டுவது, பதறிப்போகும் கணவனை சமாளிக்க முடியாமல் திணறுவது என ஆர்ப்பாட்டமான நடிப்பால் கவனிக்க வைக்கிறார் மைனா நந்தினி.
மைனாவின் கணவனாக ஆடுகளம் முருகதாஸ். எவனோ ஒருவன் தன் மனைவியிடம் கண்டபடி நடந்துகொள்ள என்ன செய்வது ஏது செய்வது என தெரியாமல் தவித்துப் போகிற உணர்வை எதார்த்தமான உடல்மொழியில் கொண்டு வந்திருக்கிறார்.
காளி வெங்கட்டுக்கு கெஸ்ட் ரோல்; அதை பெஸ்டாக செய்து கடந்துபோகிறார்.
போலீஸ் உயர் அதிகாரியாக விஜய் முருகன் உருட்டல் மிரட்டலை அளவாக தந்திருக்க, போலீஸ் ஆதிகாரியாக ஜீவா சுப்பிரமணியம் கவனம் பெறுகிறார். வேல ராமமூர்த்தி, போஸ் வெங்கட், பகவதி பெருமாள், பாரத் நெல்லையப்பன் என இன்னும் சிலர் கதையோட்டத்தில் கலந்திருக்கிறார்கள்.
கார்த்திக் நேத்தாவின் பாடல் வரிகளை கோவிந்த் வசந்தாவின் மெல்லிசை வருடிக் கொடுக்கிறது. மதன் குணதேவின் ஒளிப்பதிவு பட்ஜெட்டுக்கு ஏற்றபடியும் நேர்த்தியாகவும் இருக்கிறது.
குடிபோதையால் சாமானியன் ஒருவன் சந்திக்கும் சிலபல பிரச்சனைகளை சுவாரஸ்யமாக சொல்லிக்கொண்டே போய்,
குழந்தை கடத்தல், நரபலி என டிராக் மாறும் திரைக்கதை விறுவிறுப்பான கிரைம் திரில்லர் அனுபவம் தருகிறது. ‘குடிக்கிறத நிறுத்துங்கப்பா’ என்ற அறிவுரை போனஸாக கிடைக்கிறது.
குட் டே _ ஒருமுறை பார்க்கலாம்டே!
-சு.கணேஷ்குமார்

