Home விமர்சனம் 3 BHK சினிமா விமர்சனம்

3 BHK சினிமா விமர்சனம்

சாமானியன் ஒருவன் சொந்த வீடு வாங்க ஆசைப்படுவதும், அதற்காக அவன் படும் கஷ்ட நஷ்டங்களுமாக விரிகிறது ‘3 BHK.’

வாசுதேவன் மனைவி, மகன், மகளோடு வாழ்கிற எளிமையான குடும்பஸ்தர். குடும்பம் நடத்துகிற அளவுக்கு சம்பளம் பெறுகிற வேலையில் இருப்பவர். சொந்த வீடு வாங்க வேண்டும் என்பது அவரது ஆசை, கனவு, லட்சியம்… அதற்காக ஏழரை லட்ச ரூபாய் சேமித்து வைத்திருக்கிறார். இது கதை.

அந்த பணத்தை வைத்து அவரால் வீடு வாங்க முடிந்ததா இல்லையா என்பது திரைக்கதை.

வாசுதேவனாக சரத்குமார். தன்னிடம் இருக்கிற பணத்துக்கு சிட்டிக்கு வெளியில் இடம் வாங்கி, சில வருடங்கள் கழித்து வீடு கட்டுகிற யோசனைக்குள் போகாமல் பிளாட் வாங்க நினைக்கிறார். அதனாலேயே பிரச்சனைகளைச் சந்திக்க வேண்டியிருக்கிறது.

பிள்ளைகளை அவர்கள் போக்கில் விடாமல் அவர்களுக்கு நல்லது என நினைத்து ஏதேதோ செய்கிறார்; அதனாலும் மன உளைச்சலுக்கு ஆளாகிற நிலைமை.

ஒட்டுமொத்தமாக பார்த்தால் நல்லவர்; எடுக்கும் முடிவுகளால் சிக்கல்களை உருவாக்கிக் கொள்பவர். அப்படியொரு கதாபாத்திரம்.

பூக்கள் மீது அவரை தாராளமாக நடக்க வைக்கலாம்; துளிகூட நசுங்காது. அந்தளவுக்கு மனிதர் இதமாக பதமாக நடக்கிறார். அவர் பேசுவது அவருக்கே கேட்குமா என்ற சந்தேகம் வருகிறது; அந்தளவுக்கு ஹஸ்கி வாய்ஸில் பேசுகிறார். அம்புட்டு அடக்கி வாசிக்க தேவையில்லை என்று தோன்றினாலும் உணர்வுபூர்வமான நடிப்பால் மனதில் நிறைகிறார்.

சரத்குமாரின் மகனாக சித்தார்த். என்னதான் பணம் செலவு செய்து படிக்க வைத்தாலும் மதிப்பெண் விஷயத்தில் மந்தமாக இருப்பது, கல்லூரிப் படிப்பின்போது குடும்பச் சுமையைப் பகிர்ந்துகொள்வதற்காக கடுமையான உடலுழைப்புப் பணிக்குப் போவது, படித்த படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காமல் தவிப்பது, வேலை கிடைத்தபின் தன் மீது திணிக்கப்படும் அளவுக்கதிக பணிச்சுமையை எதிர்ப்பது என சூழ்நிலைகளுக்கேற்ற நடிப்பை அலட்டலின்றி தந்திருக்கிறார். மீசை அரும்பும் பருவம், மீசை செழித்து வளரும் பருவம், மீசையும் தாடி முகம் முழுக்க பாய்ந்துப் பரவிய காலகட்டம் என பதினேழு வயதிலிருந்து நாற்பது வயது வரை பருவத்துக்கேற்ற தோற்ற மாற்றமும் கவர்கிறது.

சித்தார்த்தின் தங்கையாக மீதா ரகுநாத். அப்பா மீது பாசம், அண்ணன் மீது நேசம், தன்னை அடக்கியாள நினைக்கும் கணவன் மீது ஆவேசம் என தன் பங்கை எளிமையான நடிப்பில் கடத்துகிறார்.

சித்தார்த்தின் காதலியாக கன்னட தேசத்து சைத்ரா ஆச்சார்; அடுத்த வீட்டுப் பெண் போலிருக்கிற அவர் கண்களின் வழியாக உணர்வுகளை வெளிப்படுத்தும் விதம் அசத்துகிறது.

கணவர், பிள்ளைகள் என யாருடைய மனமும் கோணாமல் நடந்துகொள்கிற குணவதியாக தன் பாத்திரத்துக்கு தேவையான நடிப்பைத் தந்திருக்கிறார் தேவயானி.

கெஸ்ட் ரோலில் எட்டிப் பார்க்கிற யோகிபாபு ஆடியன்ஸ் முகத்தில் லேசான புன்னகை எட்டிப் பார்க்க உதவுகிறார்.

தினேஷ் கிருஷ்ணன், ஜித்தின் கூட்டணியின் ஒளிப்பதிவு நேர்த்தி. அம்ரித் ராம்நாத்தின் பின்னணி இசை சோக கீதமாக கதையில் கலந்திருக்கிறது. கதையோட்டத்தை விவரிக்கும் ‘கனவெல்லாம் நிஜமாக’ பாடலின் இசை செவிகளுக்கு இதம் தருகிறது.

யூகிக்கும்படியே காட்சிகள் நகர்வது சற்றே சலிப்பு தருகிறது. அதையெல்லாம் கடந்து வாடகை வீட்டிருந்துகொண்டு சொந்த வீட்டுக் கனவை நிறைவேற்றிக் கொள்ள நினைப்பவர்கள் சந்திக்கும் அனுபவங்களின் பிரதிபலிப்பாக இயக்குநர் ஸ்ரீகணேஷ் கட்டியிருக்கும் இந்த ‘3 BHK’ மனதில் குடியேறுகிறது!

-சு.கணேஷ்குமார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்