தென்கொரியா, பிரான்சில் கெளரவமிக்க விருதுகளை வென்ற ‘பேரடைஸ்’ மலையாளப் படத்தின் டிரெய்லரை வெளியிட்ட இயக்குநர் மணிரத்னம்!

மலையாளப் படங்களுக்கு தமிழ் நாட்டில் பெரியளவில் வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் அடுத்ததாக ‘பேரடைஸ்‘ என்ற திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகவிருக்கிறது.

இயக்குநர் மணிரத்னத்தின் நண்பரும், உலகப் புகழ் பெற்ற இயக்குநருமான பிரசன்னா வித்தனகே இந்த படத்தை இயக்கியுள்ளார்.

இலங்கைக்கு சுற்றுலா சென்ற இளம் தம்பதி அங்கு ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியால் எப்படியெல்லாம் பாதிப்புக்கு ஆளாகிறார்கள் என்பதே படத்தின் கதை.

பேரடைஸ் டிரெய்லரை வெளியிட்ட இயக்குநர் மணிரத்னம்!

சென்ற வருடத்தில் பெரிய வரவேற்பை பெற்ற மலையாள திரைப்படமான ஜெய ஜெய ஜெய ஜெய ஹே படத்தின் கதாநாயகி தர்ஷனா ராஜேந்திரனுடன் இணைந்து ரோஷன் மேத்யூ நடித்துள்ளார். தர்ஷனா ராஜேந்திரன் தமிழில் ஏற்கனவே கவண் மற்றும் விஷாலின் இரும்புத்திரையில் முக்கிய வேடத்தில் நடித்தவர். பிரசன்னா வித்தனகேவுடன் சேர்ந்து அனுஷ்கா சேனநாயகே இப்படத்தை எழுதியிருக்கிறார்.

‘நியூட்டன் சினிமா’ தயாரித்த இந்த படத்தை மணிரத்னத்தின் ‘மெட்ராஸ் டாக்கீஸ்’ வழங்குகிறது. மெட்ராஸ் டாக்கீஸ் வழங்கும் முதல் மலையாளப் படம் இது. இந்த படத்தின் டிரெய்லரை இயக்குநர் மணிரத்னம் வெளியிட்டு படக்குழுவை வாழ்த்தினார்.

 

தென்கொரியாவின் பூசான் திரைப்பட விழாவில் இந்த வருடத்திற்கான சிறந்த ஆசிய படத்திற்கான கிம் ஜீசக் விருதை வென்ற முதல் தென்னிந்திய திரைப்படம் என்ற பெருமையை பெற்றுள்ள இந்த படம், பிரான்சின் வீசோல் சர்வதேச திரைப்பட விழாவில் ஜீரி விருதையும் வென்றிருக்கிறது.

இந்தியாவின் முக்கியமான ஒளிப்பதிவாளரான ராஜீவ் ரவி ஒளிப்பதிவையும், ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங்கையும், தபஸ் நாயக் ஒலிக்கலவையையும், கே இசையையும் கையாண்டிருக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here