படம் பார்த்து முடித்ததும், நாம் பார்த்தது சயின்ஸ் பிக்சன் ஸ்டோரியா? பக்திப் பரவசக் கதையா? திரில்லர் சப்ஜெக்டா? என்றெல்லாம் உங்களுக்குள் ஒருசில கேள்விகள் உருவாவதற்கும் அதற்கான சரியான பதில் பிடிபடாமல் குழப்பத்தில் தவிப்பதற்கும் வாய்ப்புகள் உண்டு. அப்படியொரு வித்தியாசமான கதைக்களத்தில் அமைந்துள்ள படம் இது.
இளைஞன் சந்தோஷ் இசையமைப்பாளராக வேண்டும் என்று விரும்புகிறார். அவரது நண்பரான தொழிலதிபர் கிஷோர், சந்தோஷை இசையமைப்பாளராக்கிப் பார்ப்பதை லட்சியமாக எடுத்துக் கொள்கிறார். ஒரு கட்டத்தில் சந்தோஷ் இசையமைப்பாளராகிறார். கிஷோர் உற்சாகத்தில் மிதக்கிறார்.
இப்படி பெரிதாய் எந்த சுவாரஸ்யமும் இல்லாமல் துவங்கி நகர்கிற கதையில் சந்தோஷ் கல்யாணமாகி மனைவி, மகளோடு இருப்பதாக காட்சிகள் விரிகின்றன. சந்தோஷின் மகன் தன் அப்பாவிடம் பேசுகிறபோது, பள்ளிப் பருவ நாட்களில் அவர் சந்தித்த ஏமாற்றங்கள் குறித்து தெரிந்து கொள்கிறான். மனம் கலங்குகிறான். தன் அப்பாவின் ஏமாற்றங்களைப் போக்கி அவரை குஷியான மனநிலையில் பார்க்க விரும்புகிறான். அதுவும் அவரது பள்ளிப் பருவ காலகட்டத்திற்கே சென்று அவரை சந்தோஷப்படுத்த நினைக்கிறான்.
அது எப்படி நிறைவேறுகிறது என்பதை திரில்லர் கதைகளுக்கான பரபரப்போடு காட்சிப்படுத்தியிருக்கிறது அனுக்கிரகனின் திரைக்கதை.
கிஷோராக முரளி ராதாகிருஷ்ணன். நண்பன் விரும்பியபடி முன்னுக்கு வரவேண்டும் என்று ஆர்வமாக செயல்படுவதும், முன்னுக்கு வந்தபின் மகிழ்ச்சியில் மிதப்பதுமாக தந்திருக்கும் நடிப்புக்கு பாஸ்மார்க் வழங்கலாம். கிளைமாக்ஸில் அவர் செய்யும் தியாகம் கலங்கடிக்கிறது.
சந்தோஷாக விஜய் கிருஷ்ணா. ஒரு கட்டம் வரை வாழ்வில் முக்கியமான ஒன்றை பறிகொடுத்தவர் போல் முகத்தில் மென்சோகம் தவழ வலம் வருகிறார். மனைவி, மகனுடனான வாழ்க்கையை அனுபவிக்கும்போது மனதில் பொங்கும் உற்சாகத்தை கண்களில் வழிய விடுகிறார்.
கிறங்கடிக்கும் அழகோடு அட்டனன்ஸ் போடுகிற தீப்ஷிகாவுக்கு தன்னைப் பொருட்படுத்தாத முரளியை வம்படியாய் காதலிக்கிற வேலை. அம்மணி புருவம் உயர்த்தி நெஞ்சை நிமிர்த்தி இளமை குலுங்க நடக்கும் விதம் ஆண் சமூகத்தின் ஹார்மோன்களை கணிசமாய் சூடேற்றும். மேடம் அழுத்தமான பாத்திரங்களைத் தேர்வு செய்து நடித்தால் கவனம் பெறுவது உறுதி.
விஜய் கிருஷ்ணாவின் மனைவியாக வருகிற ஸ்ருதி ராமகிருஷ்ணனின் ஹோம்லி லுக்கும் நடிப்பில் தெரியும் மெச்சூரிட்டியும் அசத்துகிறது. தந்தையின் ஆசைகளை அவரது சிறுவயதுக்கே சென்று நிறைவேற்றுகிற பணியைச் சுமந்திருக்கிற சிறுவன் ராகவனின் நடிப்பு இயல்பாக இருக்கிறது.
இன்னபிற பாத்திரங்களை ஏற்றிருப்போர் அவரவர் பங்களிப்பில் குறைவைக்கவில்லை.
‘வேண்டும் வேண்டும் ஒரு நூற்றாண்டு’ பாடலின் இசையால் மனதைக் குளிர்விக்கும் ரேஹான், மாணவ மாணவிகளின் குதூகலம் கொப்பளிக்கும் பள்ளிப் பட்டாளம் பாடலில் எனர்ஜியை ஏற்றியிருக்கிறார். பின்னணி இசை பரவாயில்லை ரகம்.
ஒளிப்பதிவாளர் வினோத் காந்தி குறைந்த பொருட்செலவில் தன் கடமையை நேர்த்தியாக செய்து முடித்திருப்பது காட்சிகளில் தெரிகிறது.
பல நுறு கோடிகளை செலவழித்து உருவாக்க வேண்டிய சயின்ஸ் பிக்ஷன் ஃபேண்டஸி சப்ஜெக்டை கையிலெடுத்து, அதற்கு எளிமையான பட்ஜெட்டில் உயிரூட்டியிருக்கும் இயக்குநர் சுந்தர் கிரிஷ் கருடாழ்வார், பெருமாள் என ஆன்மிகத்தை தொட்டுக்கொண்டு கதையை நகர்த்தியிருப்பது ஒரு பக்கம் வலிந்து திணித்தது போலிருக்கிறது; இன்னொரு பக்கம் அடடே என்றிருக்கிறது.
லாஜிக் பற்றி யோசிக்காத சில காட்சிகள் அயர்ச்சி தந்தாலும் வித்தியாசமான கதையம்சம் ஆச்சரியம் தந்து அயர்ச்சியின் சதவிகிதத்தைக் குறைக்கிறது.
அனுக்கிரகன் _ அப்பாக்களை நேசிக்கும் பிள்ளைகளுக்கு சமர்ப்பணம்!
-சு.கணேஷ்குமார்

