குறிப்பிட்ட வயது கடந்து குழந்தை பெற்றுக் கொள்வதில் இருக்கிற சிக்கல்களை லேசாக தொட்டுக் காட்டி, சென்டிமென்ட் ஏரியாவில் பயணித்து, படு தூக்கலான அடல்ட் கன்டென்ட் மிக்ஸிங்கில் ‘மிஸஸ் அன்ட் மிஸ்டர்.’
நாயகி வனிதாவுக்கு 40 வயது; அவரது கணவருக்கு வயது 45. ராபர்ட் ஒரு குறிப்பிட்ட காரணத்தால் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டாம் என்ற முடிவில் இருக்கிறார். வனிதாவுக்கோ இந்த வயதிலும் பெற்றுக் கொள்ளாவிட்டால் இனி எப்போதுமே குழந்தை பாக்கியம் கிடைக்காது என்பதால் குழந்தை பெற்றுக்கொள்ள நினைக்கிறார். கணவரை சம்மதிக்க வைக்க ரொமான்ஸில் இறங்குகிறார். அதன் பலன் என்ன என்பது ஆனது என்பது மீதிக் கதை…
குழந்தை பெற்றுக் கொள்ளும் எண்ணத்துக்குள் வந்தபின் அதற்கான ஏக்கத்தை முகபாவங்களில் காண்பிப்பது, குழந்தை பெற்றுக் கொள்வதற்காக விதவிதமாக திட்டமிடுவது, கணவரிடம் கிளைமாக்ஸில் ஓங்கிய குரலில் சண்டையிடுவது என நீளும் காட்சிகளில், கவர்ச்சியாக வெளிப்படுவதற்கேற்ப ஆடைகளை அணிந்து சுற்றிக்கொண்டிருக்கும் வனிதாவிடமிருந்து படத்துக்கு கிடைத்திருப்பது பாராட்டத்தக்க நடிப்பு.
ராபர்ட் அகலமான உடம்போடு இருக்கிறார்; உணர்வுகளை வெளிப்படுத்தும்போது வாயை அகலமாக திறக்கிறார். பாடல் காட்சியில் ரகளையாக ஆடுகிறார். அவரது பாத்திரத்துக்கு அதுவே போதுமானதாக இருக்கிறது.
காமமும் அது சார்ந்தும் உருவாக்கப்பட்ட முதியோர்கள் ரசிக்கும்படியான காட்சிகளில் அசடு வழியல் நடிப்பை அன்லிமிடெடாக தந்திருக்கிறார் ஹீரோயினுக்கு அம்மாவாக வருகிற ஷகிலா. அவர் வரும் காட்சிகள் தெலுங்குப் படம் பார்த்துக் கொண்டிருப்பது போன்ற உணர்வைத் தருகின்றன. அந்தளவுக்கு மாட்லாடுகிறார்கள்.
பாத்திமா பாபு, வாசுகி, கும்தாஜ், சர்மிளா என சீனியர் சிட்டிஸன் நடிகைகளும் அனுமோகன், பவர் ஸ்டார் சீனிவாசன் என சீனியர் சிட்டிஸன் நடிகர்களும் படத்தில் உண்டு.
பாங்காக், துபாய் என வெளிநாடுகளில் நடக்கும் சம்பவங்கள் உற்சாக உணர்வு தந்து கடந்துபோக, சித்தூரில் நடக்கும் சம்பவங்கள் சென்டிமென்ட் களேபரங்களாய் விரிவடைந்து கதையின் உயிரோட்டத்துக்கும் கதையோட்டத்தின் நீளத்தை அதிகரிக்கவும் பயன்பட்டிருக்கின்றன.
சிவாராத்திரி’ பாடலின் ரீமேக்கில் கவர்ச்சி விருந்து வைக்கிறார் கிரண்.
ஸ்ரீகாந்த் தேவாவின் இசை கதையுடன் இணைந்து பயணித்திருக்கிறது. ஒளிப்பதிவு தரம்.
இந்த படத்தின் மூலம் இயக்குநராகும் கனவை நனவாக்கிக் கொண்டிருக்கும் வனிதா விஜயகுமார், அடுத்தடுத்து சதையம்சம் தவிர்த்து வெற்றி பெறும்படியான கதையம்சமுள்ள படங்களை இயக்குவார் என நம்புவோம்.
-சு.கணேஷ்குமார்
