அதிரிபுதிரி ஹிட்டான ‘மஞ்சுமெல் பாய்ஸ்’ டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் மே 5 முதல் ஸ்ட்ரீமாகிறது!

தமிழ்நாட்டின் கொடைக்கானல் சுற்றுலா பகுதியில் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவான சர்வைவல் த்ரில்லரான ‘மஞ்சுமெல் பாய்ஸ்’ திரைப்படம் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் வரும் மே 5 முதல் ஸ்ட்ரீம் செய்யவுள்ளது.

இப்படம், மொழிகள் தாண்டி அனைத்து பிராந்தியங்களில் உள்ள பார்வையாளர்களைக் கவர்ந்தது. உலகெங்கிலும் பரவலாக ரசிக்கப்பட்ட இப்படம் இதுவரை உலகம் முழுவதும் ரூ. 200 + கோடிகளை வசூலித்துள்ளது.

ஒரு சர்வைவல் படத்திற்கான கச்சிதமான திரைக்கதையுடன், நட்பின் வலிமையைப் பேசிய மஞ்சும்மெல் பாய்ஸ் தமிழ் ரசிகர்களின் இதயங்களை வென்றது, இன்றுவரை தமிழில் வெற்றிபெற்ற மிகப்பெரிய மலையாள படமாக இப்படம் சாதனை புரிந்துள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலகநாயகன் கமல்ஹாசன் உள்ளிட்ட பல பிரபலங்கள் இப்படத்திற்கு தங்கள் மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்தனர். சிஎஸ்கே வீரர்களுடன் ‘தல’ எம்எஸ் தோனி ரசிகர்கள் மத்தியில் இப்படத்தைப் பார்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கேரளாவைச் சேர்ந்த இளைஞர் குழுவினர் தமிழ்நாட்டின் கொடைக்கானலுக்குச் சுற்றுலா செல்கிறார்கள். அந்தப் பயணத்தின் போது, குணா குகையைப் பார்வையிடுகிறார்கள், ​​ அப்போது ஒருவர் தவறி குகைக்குள் விழுந்துவிட நண்பனைக் காப்பாற்றப் போராடுகிறார்கள், அவர்கள் நண்பனைக் காப்பாற்றினார்களா? என்பது தான் மஞ்சும்மேல் பாய்ஸ் படம். மனித மன உறுதி, சகிப்புத்தன்மை மற்றும் நட்பின் பெருமையை அழகாக எடுத்துக்காட்டுகிறது இப்படம்.

சௌபின் ஷாஹிர், ஸ்ரீநாத் பாசி, பாலு வர்கீஸ், கணபதி மற்றும் ஜீன் பால் லால் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு, சுஷின் ஷியாம் இசையமைக்க, ஷைஜு காலித் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

பாபு ஷாஹிர், சௌபின் ஷாஹிர் மற்றும் ஷான் ஆண்டனி தயாரித்துள்ள இப்படத்திற்கு விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பு செய்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here