ஆக்சன் பிரின்ஸ் துருவ் சர்ஜா, சஞ்சய் தத், ஷில்பா ஷெட்டி நடிப்பில் பிரமாண்ட ஆக்சன் படமாக உருவாகியுள்ள திரைப்படம் KD The Devil.
பான் இந்திய வெளியீடாகப் பல மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ள நிலையில், படக்குழுவினர் தமிழ்ப்பதிப்பை விளம்பரப்படுத்தும் வகையிலும் தமிழ்ப்பதிப்பின் டீசரை அறிமுகப்படுத்தும் வகையிலும், சென்னையில் தமிழ் பத்திரிக்கை, ஊடக நண்பர்களைச் சந்தித்தனர்.
படக்குழு சார்பில் நாயகன் துருவ் சர்ஜா, நாயகி ரீஷ்மா, நடிகை ஷில்பா ஷெட்டி, நடிகர் சஞ்சய் தத், இயக்குநர் பிரேம் மற்றும் தயாரிப்பாளர் சுப்ரீத் கலந்துகொண்டனர்.
பத்திரிகையாளர்களுக்காக படத்தின் டீசர் திரையிடப்பட்டது. அதையடுத்து நிகழ்வில் பேசிய துருவ் சர்ஜா, ”இது என் 6 வது படம், டீசர் எல்லோருக்கும் பிடித்திருக்குமென நம்புகிறேன். இந்தப்படத்தில் சான்ஸ் தந்த பிரேம் சார், தயாரிப்பாளர் சுப்ரீத், வெங்கட் சாருக்கு நன்றி. எங்கள் குடும்பத்துக்கே ஃபேவரைட்டான சஞ்சய் தத் சார் இந்தப்படத்தில் நடித்ததற்கு நன்றி. ரவிச்சந்திரன் சார், ரமேஷ் அரவிந்த் சார் நடித்துள்ளார்கள். ஷில்பா ஷெட்டி மேடம் இன்னும் அப்படியே இளமையாக உள்ளார். அட்டகாசமாக நடித்துள்ளார். இது நல்ல மாஸ் மசாலா படம் அனைவருக்கும் பிடிக்கும் பார்த்து ஆதரவு தாருங்கள்” என்றார்.
இயக்குநர் பிரேம் ”எனக்குத் தமிழ்ப் படங்கள் மிகவும் பிடிக்கும். கேடி ஒரு வித்தியாசமான படம், 1970 களில் நடந்த உண்மைச் சம்பவம் தான் இப்படம், டீசர் பார்த்திருப்பீர்கள், படத்தின் களம் புரிந்திருக்கும். டீசர் எல்லா மொழிகளிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட சஞ்சய் தத் சாருக்கு நன்றி. இந்தப்படம் கண்டிப்பாகத் தமிழ் ரசிகர்களுக்குப் பிடிக்கும், நான் தர்ஷனுடன் ஜோகையா செய்யும் போதிலிருந்து சென்னையில் தான் டப்பிங், சிஜி எல்லாம் செய்து வருகிறோம். துருவ் சர்ஜா இப்படத்தில் கலக்கியிருக்கிறார். அனைவருக்கும் படம் பிடிக்குமென நம்புகிறேன்” என்றார்.
நடிகர் சஞ்சய் தத் ”சென்னையில் இருப்பது மகிழ்ச்சி. தமிழ்ப்படங்கள் எனக்கு ரொம்பப் பிடிக்கும். லோகேஷ் இயக்கத்தில் நடித்துள்ளேன், ரஜினி சாருடன் நான் நிறைய இந்திப் படம் நடித்துள்ளேன். கமல் சார் படங்களும் பிடிக்கும். கேடி படத்தைப் பொறுத்தவரை மிக அற்புதமான அனுபவமாக இருந்தது. படக்குழுவினர் என்னை மிக அன்போடு பார்த்துக்கொண்டார்கள், இது அட்டகாசமான மாஸ் ஆக்சன் படம், துருவ் சர்ஜா நன்றாக நடித்துள்ளார், அனைவருக்கும் படம் பிடிக்குமென நம்புகிறேன்” என்றார்.
நடிகை ஷில்பா ஷெட்டி, ”சென்னைக்கு மீண்டும் வந்திருப்பது மிகவும் மகிழ்ச்சி. உங்களைப் பார்க்க சந்தோசமாக உள்ளது. மிஸ்டர் ரோமியோ ஷூட்டிங் போது தமிழ் கொஞ்சம் கொஞ்சம் கற்றுக்கொண்டேன். கேடி படம் பொறுத்தவரை சூப்பரான எமோசன் இருக்கிறது, சூப்பரான ஸ்டார்ஸ், சூப்பர் இயக்குநர் இருக்கிறார்கள், நிறைய உழைத்திருக்கிறோம். படத்தைக் கண்டிப்பாகத் தமிழ் ரசிகர்களும் ரசிப்பார்கள், இது அழகான மாஸ் ஆக்சன் படம்” என்றார்.
நடிகை ரீஷ்மா, தயாரிப்பாளர் சுப்ரீத் உள்ளிட்டோரும் நிகழ்வில் பேசினார்கள்.

