எளிய மனிதர்களின் வலி சுமந்த கதைகளின் வரிசையில் இணைந்திருக்கிற உணர்வுபூர்வமான படைப்பு.
மலைப் பிரதேசமான கொடைக்கானலின் உச்சியிலிருக்கும் வெள்ளகெவி’யில் சாலை, மருத்துவமனை எந்த வசதியுமற்ற கிராமம். ஒரு பெண்ணுக்கு பிரசவ வலி வருகிறது. அவரை மலைக்கு கீழுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும். அதற்காக தொட்டில் போன்ற அமைப்பில் படுக்க வைத்து ஊர் மக்கள் சுமந்து செல்கிறார்கள். ஏழெட்டு மணி நேரம் காடு மேடுகளில் நடந்தே போக வேண்டும். மருத்துவமனைக்கு தொடர்பு கொண்டால் டாக்டர் வர மறுக்கிறார். பனிக்குடம் உடைந்து உச்சகட்ட பதற்றம் உருவாகிறது.
அந்த பெண்ணை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடிந்ததா, குழந்தை நல்லபடியாக பிறந்ததா என்பதை நோக்கி நகர்கிற கதை கலங்கடிக்கிறது… இன்னொரு பக்கம் அந்த பெண்ணின் கணவர் தன்னைச் சார்ந்த மக்களுக்கான அடிப்படை உரிமைகளுக்காக குரல் கொடுத்த காரணத்தால் காவல்துறை அவரை அடித்துத் துவைக்கிறது. அந்த அடி உதையிலிருந்து அவர் உயிர் பிழைப்பது சாத்தியமில்லை என்கிற நிலைமை.
ஆபத்தில் சிக்கியிருக்கும் கர்ப்பிணி மனைவி, அதிகார வெறியர்களிடம் சிக்கிச் சின்னாபின்னமாகும் கணவன்… இருவரது நிலைமையும் என்னவானது என்பதுதான் தமிழ் தயாளன் இயக்கியிருக்கும் கெவியின் கிளைமாக்ஸ்…
கர்ப்பிணியாக அவஸ்தைப்படுவது, வலியின் உச்சத்தை அனுபவிப்பது என ஷீலாவின் நடிப்பு கலங்கடிக்கிறது.
தங்களை மனிதனாக மதிக்காத, அதே நேரம் தங்களிடம் ஓட்டுக்காக மட்டுமே வந்துபோகிற அரசியல்வாதியை எதிர்க்கும் துணிச்சலில் கவனம் பெறுகிற ஆதவன், போலீஸார் விதவிதமாக சித்ரவதை செய்து ரத்தச்சகதியில் புரட்டியெடுக்கும்போது பரிதாபத்தை அள்ளுகிறார். படம் இரண்டு மணி நேரம் ஒடுகிறதென்றால், ஒரு மணி நேரம் அவரை துன்புறுத்துகிற காட்சிகளுக்காகவே ஒதுக்கியது போன்ற உணர்வைத் தருகிறது திரைக்கதையின் போக்கு.
காவல்துறை அதிகாரியாக வருகிற சார்லஸ் வினோத்துக்கு படம் முழுக்க ஆதவனை கொடுமைப்படுத்துகிற வேலை மட்டுமே. அதை மிரட்டலாகச் செய்திருக்கிறார்.
ஷீலாவின் தம்பியாக வருகிற இளைஞர் அக்காவையும் குழந்தையையும் காப்பாற்றப் போராடும்போது வெளிப்படுத்தும் பாசமும் சிந்துகிற கண்ணீரும் நெகிழ வைக்கிறது.
மனிதாபிமானமுள்ள மருத்துவராக ஜாக்லின், மனிதாபிமானம் என்றால் என்ன என்று கேட்கும் மருத்துவராக காயத்ரி, நர்ஸாக ஜீவா சுப்ரமணியன், என இன்னபிற கதாபாத்திரங்கள் கதையின் தன்மையை உள்வாங்கியிருக்கிறார்கள்.
வைரமுத்து வரிகளில், தேனிசைத் தென்றல் தேவாவின் ஓங்கிய குரலில், பாலசுப்ரமணியன் இசையில் ‘மா மலையே எங்கள் மலைச்சாமியே’ பாடல் இன்னும் பல வருடங்கள் மனதை விட்டு நீங்காது நிலைத்திருக்கும்.
தீப்பந்தத்தின் துணையோடும் டார்ச் லைட் வெளிச்சத்தோடும் கர்ப்பிணியைச் சுமந்துபோகும் இரவு முழுக்க, காடு மலை மேடுகளை தெளிவாகக் காட்சிப்படுத்தி படத்தின் தரத்தை பெருமளவில் உயர்த்தியிருக்கிறது ஜெகன் ஜெயசூர்யாவின் கேமரா.
மலைக்கு கீழ் பகுதியிலோ, வேறு இடங்களிலோ அரசாங்கம் வாழ்வதற்கான அனைத்து வசதிகளையும் செய்து தர முன்வந்தும், விடாப்பிடியாக தங்கள் வசிப்பிடத்தை விட்டு நகர மறுப்பதாலேயே ஆண்டாண்டு காலமாக மலைவாழ் மக்களுக்கான அவஸ்தைகள் தொடர்கிறது என்பதை நினைத்துப் பார்த்தால் படம் உணர்த்தும் வலி சற்றே விலகிப் போகிறது. அதையெல்லாம் மீறி படத்தின் உருவாக்கத்தைப் பொறுத்தவரை, ஒரு காட்சியிலாவது உங்கள் கண்கள் கலங்கவேண்டும்; இல்லாவிட்டால் மனநலப் பரிசோதனை அவசியம்!
-சு.கணேஷ்குமார்


