வெற்றி, தோல்வி, நம்பர் 1, நம்பர் 2 என எது பற்றியும் யோசிக்காதவர் ஜெய் ஆகாஷ். திடீர் திடீரென அவர் நடிக்கும் படங்கள், இயக்கும் படங்கள் ஒரு சில தியேட்டர்களில் ரிலீஸாகும். அவருக்கென இருக்கிற கணிசமான ரசிகர்கள், ரசிகைகள் படத்தைக் கொண்டாடுவார்கள். பிறகு காணாமல் போவார்; மீண்டும் திடீரென வருவார். அந்த சுழற்சியில் அவரது நடிப்பு, இயக்கத்தில் புதிதாய் ஒரு படம்.
‘கதைநாயகனின் உண்மையான வயது மாற்றத்தை காட்டியிருக்கும் முதல் இந்திய திரைப்படம்’ என்ற பெருமையைச் சுமந்திருக்கும் ‘மாமரம்.’
ராஜா கல்லூரிப் படிப்பின்போது அதே கல்லூரியில் படிக்கும் மீனாட்சியைக் காதலிக்கிறார். இருவரும் சேர்ந்து மாம்பழம் சாப்பிட்டு, கொட்டையை கல்லூரியில் விதைக்கிறார்கள். ஆட்டம் பாட்டம் என உற்சாகமாக நாட்களைக் கடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஒரு கட்டத்தில், மீனாட்சி வேறு நபருடன் தொடர்பிலிருப்பதாக ராஜாவுக்கு சந்தேகம் வர சண்டை உருவாகி பிரிகிறார்கள்.
ராஜா காதலியை பிரிந்த விரக்தியில் காதலையும் காதலர்களையும் வெறுக்கும் மனநிலைக்கு ஆளாகி, நாட்களைக் கடத்திக் கொண்டிருக்கிறார். அப்படியே வருடங்கள் கடந்துபோக உயிருக்கு ஆபத்தான சூதாட்டத்தில் ஈடுபட்டு மருத்துவமனையில் சேர்க்கபடுகிறார்; உயிருக்குப் போராடுகிறார்.
இது ஒருபக்கமிருக்க, அன்று நட்டு வைத்த மாங்கொட்டை முளைத்து செழித்து மரமாக வளர்ந்து நிற்கிறது. அந்த நிலையில் மரத்தை அகற்ற கல்லூரி நிர்வாகம் முடிவு செய்கிறது.
இப்படி பயணிக்கும் கதையில், ராஜாவின் உயிர் பிழைத்தாரா? மாமரத்துக்கு என்னவானது? என்பதெல்லாம் மீதிக் கதை…
ராஜாவாக ஜெய் ஆகாஷ். காதலிக்கும்போது கல்லூரிப் பருவ இளைஞனாக இளமையாக இருக்கிறார்; பாடல்களில் உடலழகை காட்டுகிறார். சிலபல வருடங்கள் கடந்தநிலையில் வாலிபப் பருவத்தைக் கடந்த முதிர்ச்சியான தோற்றத்தில் வருகிறார்; மனநலம் பாதிக்கப்பட்டவராக முகம் முழுதும் தாடி மீசை ஆக்கிரமித்த பரிதாப தோற்றத்திலும் அட்டனன்ஸ் போடுகிறார்.காதலி மீது காட்டும் கோபம், அந்த கோபம் தவறென புரியும்போது ஏற்படும் மன மாற்றம், நண்பனுக்கு உதவுவதற்காக உயிரைப் பணயம் வைக்கும் அக்கறை, மாமரத்தை அகற்ற வந்த புல்டோசரை எதிர்த்து நிற்பதில் வெளிப்படும் உடலுறுதி என உணர்வுபூர்வமாக நடிக்க நல்ல வாய்ப்பு. மனிதருக்கு என்ன பிரச்சனையோ என்னவோ போனால் போகிறதென்று பாஸ்மார்க் கொடுக்கலாம் என்கிற அளவிலேயே நடித்திருக்கிறார்.
காதலியாக வருகிற மீனாட்சியின் இளமையை கவர்ச்சியான உடைகள் எடுத்துக் காட்ட, நடிப்பில் பாராட்டும்படி திறமை காட்டியிருக்கிறார். இன்னொரு நாயகி சந்தியா தன் உடலின் வளைவு நெளிவுகளை அளவாய், அழகாய் பரிமாறுகிறார்.
காதல் சுகுமார் ஹீரோவுக்கு நண்பனாக வந்து, சுக துக்கங்களில் உடனிருக்கும் கடமையை சரியாக செய்திருக்கிறார்.
தெலுங்கு தேச பிரம்மானந்தத்திற்கு முக்கிய கதாபாத்திரம். கே.பி.ஒய் திவாகர், ராகுல் தேவ், பிரம்மாஜி, அருணாச்சலம், மதுரை சக்திவேல், பாஷா, சத்யம் ராஜேஷ், ரம்யா என தெலுங்கு _ தமிழ் நடிகர்கள் கலவையாக திரை முழுக்க நிரம்பியிருக்கிறார்கள்.
நந்தாவின் இசையில் அடிக்கடி எட்டிப் பார்க்கும் பாடல்களில் ஒன்றுகூட மனதைக் கட்டிப் பிடிக்கவில்லை. ஜெய் ஹரிஷாந்தின் பின்னணி இசை ஓகே ரகம். பால் பாண்டியின் ஒளிப்பதிவில் கவனம் ஈர்க்கும் சங்கதிகள் தென்படவில்லை.
கதை, திரைக்கதை, உருவாக்கம் என எல்லாமே ஏனோதானோ என்ற என்றிருந்தாலும், ‘காதலர்கள் பிரிந்தாலும் காதல் வாழும்’ என்ற கருத்தோடு படத்தை நிறைவு செய்திருப்பதற்காக இயக்குநர் ஜெய் ஆகாஷை பாராட்டலாம்!
மாமரம் _ உயிருள்ள தாஜ்மகால்!
-சு.கணேஷ்குமார்
