கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் அவரது 100வது படமாக வெளியாகி மிகப்பெரிய வெற்றியையும் வசூல் சாதனையையும் செய்த படம் ‘கேப்டன் பிரபாகரன்.’ ஆர்கே செல்வமணி இயக்கிய இந்த படம் 1991 ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டில் வெளியானது.
படம் வெளியாகி 34 வருடங்கள் ஆகிவிட்ட நிலையில், தற்போது நவீன 4K தொழில்நுட்பங்களுடன் டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு புது வடிவம் பெற்று, வரும் ஆகஸ்ட் 22 ஆம் தேதி ரீ ரிலீஸ் செய்யப்படுகிறது.
இந்தப்படம் வெளியாவதை முன்னிட்டு நேற்று மாலை இந்த படத்தின் டிரைலர் மற்றும் பாடல் வெளியீட்டு விழா சென்னை கமலா திரையரங்கில் நடைபெற்றது.
நிகழ்வில் இயக்குநர் ஆர்.கே செல்வமணி பேசியபோது “என்னை நம்பி என் அப்பா அம்மாவே பணம் கொடுக்க யோசித்த சமயத்தில் விஜயகாந்த்தும் ராவுத்தரும் ஒரு கோடி ரூபாய் போட்டு என்னை நம்பி படம் எடுத்தார்கள். திரைப்படத் துறையில் என்னுடைய பெற்றோர்கள் என்றால் இவர்கள் இருவரும் தான்.
புலன் விசாரணை சமயத்தில்தான் அவரது திருமணம் நடைபெற்றது. அப்போது அந்த கூட்டத்தில் நான் அவருக்காக கொண்டு சென்ற கிப்ட் கீழே விழுந்து விட்டது. அதை எடுக்க முயற்சித்த போது, அதை விடுப்பா நீ தான் எனக்கு மிகப்பெரிய கிஃப்ட் என்று என்னை கட்டி அணைத்தார் கேப்டன். அன்று முதன் முதலில் ஈழத் தமிழர்களுக்காக தமிழ் சினிமாவில் இருந்து குரல் கொடுத்த முதல் மனிதர் விஜயகாந்த் தான். அப்போதுதான் இந்த படத்திற்கு பிரபாகரன் என பெயர் வைக்க முடிவு செய்தோம். அது கூட சேர்த்து தளபதி பிரபாகரன் என வைக்கலாம் என்று சொன்னேன் ஆனால் அது சரி வராது என்று என்றபோது தான் திடீரென கேப்டன் பிரபாகரன் என டைட்டில் தோன்றியது. உடனடியாக அதை வைக்க ஒப்புக்கொண்டார் விஜயகாந்த்.
இந்த படத்தின் சம்ண்டை காட்சியில் கயிறு கட்டிக்கொண்டு ஒரு கையில் துப்பாக்கியுடன் அவர் நடித்த போது திடீரென கயிறு அறுந்து விட்டது. கடவுள் அருளால் அருகில் இருந்த பாறையில் விழுகாமல் பக்கத்திலிருந்து புதரில் விழுந்து உயிர் கிடைத்தார் விஜயகாந்த். அடிபட்ட வலியை மறைத்துக் கொண்டு இதை ஸ்டண்ட் மாஸ்டரிதம சொன்னால் அதன் பிறகு எனக்கு சரியாக ஷாட் வைக்க மாட்டார்கள் என அதை சொல்லாமல் மறைத்தவர் விஜயகாந்த். இப்படி தனது வலியை கூட மறைத்துக் கொண்டு அந்த படம் நன்றாக வர வேண்டும் என உழைப்பவர்தான் விஜயகாந்த்.
இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணனுக்கு பதிலாக சரண்யா தான் நடிக்க இருந்தார். ஆனால் அந்த மலை கிராம பெண்ணுக்கான உடையை அணிவதிலும் இன்னும் சில பிரச்சினைகள் இருந்ததால் அவர் இதிலிருந்து விலகிக் கொண்டார். எங்களுடன் 90 நாட்கள் பயணிக்க ஒரு பெண் வேண்டும், அது சாதாரண நடிகையாக இருக்கட்டும், அல்லது புதுமுகமாக கூட இருக்கட்டும் என்று நினைத்து தேடியபோது தான் ரம்யா கிருஷ்ணன் வந்தார்.. ஆனால் அவர் இந்த படத்தில் நடித்து 35 வருடங்கள் கழித்தும் கூட அந்த ஆட்டமா பாடலை பார்க்கும்போது அவ்வளவு உற்சாகமாக இருக்கிறது. நான் உதவி இயக்குனராக இருந்தபோது அவர் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருந்தார். முதன்முதலாக நான் கிளாப் அடித்ததே ரம்யா கிருஷ்ணன் நடித்த காட்சிக்குத்தான். இந்த விழாவிற்கு என் மனைவி ரோஜா மூலமாக அவருக்கு அழைப்பு விடுத்தேன். மறக்காமல் வந்துவிட்டார்.
இந்த படத்தில் சரத்குமார் நடித்தபோது அவருக்கு கழுத்தில் அடிபட்டுவிட்டது. நான்கு நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு நடைபெற்றது. அதனால் அவரை மாற்றி விடலாமா என்று நினைத்தபோது, விஜயகாந்த் அதை திட்டவட்டமாக மறுத்து விட்டார். இரண்டாவது படமாக சரத் இதில் நடிக்கிறார்.. வளர்ந்து வரக்கூடிய நடிகர்.. அவரை நீக்கி விட்டால் அவருடைய திரையுலக வாழ்க்கையை பாதிக்கும்.. அவர் திரும்பி வந்த பிறகு நாம் படப்பிடிப்பை நடத்திக் கொள்ளலாம் என பெருந்தன்மையாக கூறினார். இப்படி சில விஷயங்களால் படம் தள்ளித்தள்ளி போனதால் தான் இது 100வது படமாக வரும் பெருமையையும் பெற்றது.
இப்போதைய சூழலில் உலக அழகி போன்ற கதாநாயகி, மிகப்பெரிய கேமராமேன், ஹாலிவுட் இருந்து மேக்கப் மேன் 100 கோடியை தொடக்கூடிய பிரம்மாண்டமான கதை என்று தான் பல பேர் எதிர்பார்க்கிறார்கள், ஆனால் விஜயகாந்த் கதையை மட்டுமே நம்பி வருவார், விஜயகாந்த் சாரை பொருத்தவரைக்கும் அரசியலில் நடிக்க தெரியாது. நிஜத்தில் எப்படி இருந்தாரோ அப்படியே இருந்தார். அதனாலேயே சில பேரின் கிண்டல்களுக்கு ஆளானார். மற்றவர்கள் உள் வாழ்க்கை, வெளி வாழ்க்கை என இரண்டு விதமாக இருப்பார்கள். ஆனால் கேபடனுக்கு அகமும் புறமும் ஒன்றே. நூறு ஜென்மத்திற்கு சேர வேண்டிய புண்ணியங்களை தனது வாரிசுகளுக்காக சேர்த்து கொடுத்துவிட்டு போய் இருக்கிறார் கேப்டன் விஜயகாந்த்” என்றார்.
நடிகர் மன்சூர் அலிகான் பேசியபோது “புரட்சி கலைஞரின் நூறாவது படத்தில் நான் அறிமுகப்படுத்தப்பட்டேன். நான் இந்த படத்தில் நடிக்கும் போது நிஜமான வீரப்பனின் முகம் எப்படி இருக்கும் என்று வெளி உலகத்திற்கு தெரியாது. சாலக்குடி படப்பிடிப்புக்காக சென்றபோது அங்கே செல்வதற்காக ராவுத்தர் தனி பாதையே போட்டு கொடுத்தார். அப்போது ரம்யா கிருஷ்ணன் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமானவர் நடிகை சரண்யா தான்.. ஆனால் இந்த காட்டுப் பகுதிக்குள் வந்து யானை, பாம்பு என வன மிருகங்களை பார்த்ததும் இந்த படத்தில் நடிப்பதில் இருந்து விலகிக் கொண்டாராம். இயக்குனர் ஆர்.கே செல்வமணி லொக்கேஷன்களை கண்டுபிடிப்பதற்காக நடந்து கொண்டே இருப்பார். படப்பிடிப்பில் எனக்கும் சரத்குமாருக்கும் தண்டால் எடுப்பதில் போட்டி நடக்கும். காலையிலிருந்து வசனமே இல்லாமல் என்னுடைய காட்சிகளை எடுப்பார்கள். மாலை ஐந்து மணிக்கு தான் சென்னையில் இருந்து டயலாக் பேப்பர் விமானம் மூலமாக, கார் மூலமாக வரும், அதற்குப் பிறகு பக்கம் பக்கமாக பேச வைத்து எடுப்பார்கள். இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சி மறக்க முடியாதது. அதை படமாக்கிக் கொண்டிருந்த கடைசி நாளில் தான் தம்பி விஜய பிரபாகரன் பிறந்தார். அதேபோல படத்திலும் சென்டிமென்டாக ரம்யா கிருஷ்ணனுக்கு குழந்தை பிறப்பது போன்ற காட்சியும் படமாக்கப்பட்டது. அந்த வகையில் இந்த படத்தில் நடித்த நாட்கள் அனைத்துமே மறக்க முடியாதவை” என்றார்.
நிகழ்வில் இயக்குநர் ஆர்.கே.செல்வமணி, வசனகர்த்தா லியாகத் அலிகான், மன்சூர் அலிகான், நாயகி ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட படக்குழுவினருடன் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகர், இயக்குநர்கள் எஸ்.ஏ சந்திரசேகர், ஆர்.வி.உதயகுமார், விக்ரமன், ஏ.ஆர் முருகதாஸ், பேரரசு, எழில், லிங்குசாமி தயாரிப்பாளர்கள் கலைப்புலி எஸ். தாணு, அம்மா கிரியேஷன்ஸ் டி சிவா, தனஞ்செயன், லலித்குமார் நடிகர்கள் ரவிமரியா, சிங்கம்புலி, உதயா, இளவரசு உள்ளிட்ட பலர் உள்ளிட்ட சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

