Home விமர்சனம் ரெட் ஃபிளவர் சினிமா விமர்சனம்

ரெட் ஃபிளவர் சினிமா விமர்சனம்

இன்னும் 20 வருடங்கள் கழித்து இப்படியெல்லாம் நடக்கலாம் என்ற கற்பனையில் உருவாகியிருக்கும் படம்.

2047 காலகட்டம். ‘மால்கம் டைனஸ்டி’ என்ற பேரரசை உருவாக்கி முதன்மை நிர்வாகியாக இருந்து வழிநடத்தும் லூசிபர், உலக நாடுகள் பலவற்றை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறான். இந்தியாவையும் குறிவைக்கிறான்.

கட்டுப்பட மறுக்கும் இந்தியா, லூசிபரின் அசுர பலத்தை எதிர்க்க ‘ஆபரேஷன் ரெட் ஃபிளவர்’ என்ற பெயரிலான தாக்குதல் முறியடிப்பு நடைமுறையை செயல்படுத்துகிறது.

கதை இப்படி தொடங்க ‘ரெட் ஃபிளவர்’ என்றால் என்ன, அதன் மூலம் எதிரியை இந்தியா எப்படி வீழ்த்துகிறது, இரு தரப்பும் சந்திக்கும் இழப்புகள் என பலவற்றைக் காண்பித்தபடி நகர்கிறது திரைக்கதை…

ரெட் ஃபிளவர்’ குழுவுக்கு தலைமையேற்கிற இந்திய உளவுத்துறை அதிகாரியாக, அதே இந்தியாவை அழிக்க நினைக்கும் மால்கம் டைனஸ்டி’யின் பவர்ஃபுல் நபராக என இரு கதாபாத்திரங்களில் விக்னேஷ். ஸ்டைலிஷ் லுக்கில் வில்லனாகவும், ஹீரோவாகவும் வருகிற அவரது பங்களிப்பும் படு ஸ்டைலாக இருக்கிறது.

அசத்தலான கெட்டப்பில் கார்ப்பரேட் வில்லனாக மிரட்டியிருக்கிறார் லூசிபராக வருகிற தலைவாசல் விஜய்.

நாயகி மணிஷா ஜெஷ்னானி கதைக்கேற்ப நடித்து, சதைக்கேற்ப வளைவு நெளிவு காட்டி கடமையை நிறைவு செய்கிறார்.

அல்மஸ் அதம், ஷாம் என இரண்டாம், மூன்றாம் கதாநாயகிகளும் இன்னும் சில கேரக்டர்களை ஏற்றிருக்கிற பெண்களும் கவர்ச்சி ஏரியாவை குத்தகைக்கு எடுத்து ஆண் சமூகத்தைக் குஷிப்படுத்துகிறார்கள்.

இந்திய பிரதமராக ஒய்.ஜி.மகேந்திரன், ராணுவ தளபதியாக நாசர், இந்திய ஜனாதிபதியாக நடித்திருக்கும் இளம்பெண் என மற்றவர்களின் பங்களிப்பு கம்பீரம்.

நிழல்கள் ரவி, அஜய் ரத்னம், சுரேஷ் மேனன், ஜான் விஜய், டி.எம்.கார்த்திக், யோக் ஜேபி, லீலா சாம்சன், மோகன்ராம் என பலர் அப்படியும் இப்படியும் வந்து போகிறார்கள்.

படத்தின் பெரும்பாலான காட்சிகள் கிராபிக்ஸ் பங்களிப்பில் உருவாகிவிட, மற்ற காட்சிகள் கிரே நிறத்தில் கருப்பு நிறத்திலும் குளித்துக் கொண்டிருக்க ஒளிப்பதிவாளர் தேவ சூர்யா தன் ஈடுபாடு தெரியும்படி உழைத்து படத்தை மெருகேற்றியிருக்கிறார்.

யார் யாரை சுடுகிறார்கள் என புரியாதபடி படம் முழுக்க துப்பாக்கிக் குண்டுகள், ஏவுகணைகள் நசீறிப் பாய்ந்து கொண்டிருக்க அந்த பரபரப்பை இரண்டு மடங்காக்கியிருக்கிறது சந்தோஷ் ராமின் பின்னணி இசை. பாடல்கள் பெரிதாய் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

‘ரெட் ஃபிளவர்’ என்பதை நேதாஜி சுபாஷ் சந்திரபோஸால் உருவாக்கப்பட்ட அமைப்பாக சித்தரித்து பிரதிபலிக்கும்போது மெல்லிய சிலிர்ப்பு வருகிறது. பெரும்பாலான காட்சிகள் துப்பாக்கிச் சூடு, தொடர்ச்சியாக கொலைகள் என்ற வட்டத்துக்குள் சுற்றி வருவது சலிப்பு தருகிறது.

இந்த படத்தை பிரமாண்டமான மிரட்டலான ஹாலிவுட் படம் போல் உருவாக்க நினைத்து, அதை காட்சியமைப்புகளில் ஓரளவு நிறைவேற்றியிருக்கும் இயக்குநர் ஆண்ட்ரூ பாண்டியன் கதையமைப்பில் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் ஆடியன்ஸ் டயனாஸ்டியை கைப்பற்றியிருக்கலாம்.

சு.கணேஷ்குமார்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்