‘ஃபீல் குட் லவ் ஸ்டோரி, காமெடி கலாட்டா என மென் மனதுக்காரர்கள் விரும்புகிற சப்ஜெக்ட் பக்கம் போக மாட்டேன் ; கொலை, ரத்தம், குரூரம் என ராவான சப்ஜெக்டில் மட்டுமே நடிப்பேன்’ என சபதம் கிபதம் எடுத்திருக்கிறாரோ என்னவோ தெரியவில்லை; வசந்த் ரவி இந்த முறையும் வழக்கமான ரூட்டிலேயே பயணித்திருக்கிறார்.
கதைநாயகன் இந்திரா சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கும் போலீஸ் அதிகாரி. அளவுக்கதிகமான மது போதைக்கு ஆளானதால் அவருக்கு பார்வை பறி போகிறது.
இது ஒருபக்கமிருக்க, நகரத்தில் தொடர்ந்து ஒரே விதமான கொலைகள் நடக்கிறது. கொலை செய்பவன், கொலை செய்த நபரின் கையை வெட்டி பொது இடத்தில் போடுவதை வழக்கமாக வைத்திருக்கிறான். ஒரு கட்டத்தில் அதே பாணியில் இந்திராவின் மனைவியும் கொல்லப்பட, மனம் உடைந்துபோகும் அவர் கொலைகாரனைக் கண்டுபிடிக்க களமிறங்குகிறார்.
பார்வையற்ற அவர் எப்படி அந்த சீரியல் கில்லரை கண்டுபிடிக்கிறார் என்பது அடுத்தடுத்த காட்சிகளாக கடந்தோட, கண்டுபிடிக்கப்பட்ட நபரால் இந்திராவின் மனைவி கொலை செய்யப்படவில்லை என்று தெரியவருகிறது. அந்த அதிர்ச்சியோடு இடைவேளை வந்துவிட,
இந்திராவின் மனைவியைக் கொன்றது யார், எதற்காக, எப்படி என்பதெல்லாம் பரபரப்பாக நகர்கிற மிச்சமீதி காட்சிகள்…
இந்திராவாக வசந்த் ரவி. பார்வை பறிபோனபின் ஒரு முகம், உணர்ச்சி வசப்படும்போது ஒரு முகம், இயலாமையில் தவிக்கும்போது ஒரு முகம், மனைவியைப் பறிகொடுத்தபின் ஒரு முகம் என நடிப்பில் வெரைட்டி காட்டும்படியான கதாபாத்திரம். பெரும்பாலும் பயமும் பதட்டமுமான முகபாவங்களுடன் பயணித்து கடமையை நிறைவு செய்கிறார்.
அவருக்கு மனைவியாக வருகிற மெஹரின் பிர்சாடா நீள் வட்ட முகத்துடனும் பளபளப்பான தேகத்துடனும் வலம் வருகிறார். கணவரின் நிலைமை உணர்ந்து கனிவாக நடந்துகொள்ளும் பக்குவமான நடிப்பைத் தந்து விடை பெறுகிறார்.
சீரியல் கில்லராக தெலுங்கு தேச சுனில். போலீஸில் பிடிபட்டபின் இதுவரை 28 கொலைகளைச் செய்திருப்பதாக சொல்லி அதிர்ச்சியூட்டுபவர் யாரையெல்லாம் கொலை செய்கிறார் என்பதும் அதற்கான நடிப்புப் பங்களிப்பும் சுவாரஸ்யம்தான் என்றாலும் ஒன்றிரண்டு காட்சிகளோடு அவருக்கு டாடா சொல்லியிருப்பது ஏமாற்றம்.
இந்திரா வீட்டு பணிப்பெண்ணாக வருகிற அனிகா சுரேந்திரன் அழகுப் புன்னகையும் அடக்கமான நடிப்பையும் தந்து பரிதாப முடிவில் பரலோகம் போய்விட, அவருக்கு காதலனாக வருகிற கல்யாண் குமார் தருகிற வில்லத்தனம் பாஸ்மார்க் போடுகிற அளவில் இருக்கிறது.
ஹீரோவின் நண்பராக வருகிற ராஜ்குமார், காவல்துறை உயரதிகாரியாக ஜீவா ரவி,
இசையமைப்பாளர் அஜ்மல் தாஸின் பின்னணி இசையில் கொஞ்சம் அடக்கி வாசித்திருக்கலாம்.
பிரபு ராகவின் ஒளிப்பதிவை தனியாக பாராட்டலாம். அந்தளவுக்கு தரம்.
மனைவியைக் கொன்றவனை பழி வாங்கத் துடிக்கும் போலீஸ், காதலியின் மரணத்துக்கு காரணமானவரை பழி வாங்கத் துடிக்கும் எளிய குடும்பத்து இளைஞன் என கதையோட்டத்தில் விறுவிறுப்பைச் சேர்த்த இயக்குநர் சபரிஷ் நந்தா திரைக்கதையில் இது ஏன், அது ஏன் என கேட்க வைக்கும் காட்சிகளை அடுக்கியிருப்பதால் ஆடியன்ஸுக்கு கொட்டாவியை அடக்குவது சிரமமாக இருக்கிறது. 

