Home விமர்சனம் மதராஸி சினிமா விமர்சனம்

மதராஸி சினிமா விமர்சனம்

படம் முழுக்க வெடித்துச் சிதறும் துப்பாக்கிக் குண்டு; ஆக்சன் பட பிரியர்களுக்கு காட்சிக்கு காட்சி அல்வா துண்டு… ஆமாம்; சிவகாசி முழுமையுமாய் தீப்பிடித்தது போல் மதராஸியில் அப்படியொரு அதிரடி அட்டகாசம் நிகழ்த்தியிருக்கிறது சிவகார்த்திகேயன் _ ஏ ஆர் முருகதாஸ் கூட்டணி!

நம் மக்களுக்குள் சண்டை சச்சரவு வந்தால் அடித்துக் கொண்டு புரள்வதும், வெட்டிக் கொண்டு சாவதும்வழக்கம். அவர்களின் கைகளில் துப்பாக்கியைக் கொடுத்து, அமைதிப் பூங்காவாக இருக்கும் தமிழகத்தை கலவர பூமியாக்க திட்டமிடுகிற வில்லன் குரூப் அதற்கான அசுர பலத்துடன் தயாராகிறது. அவர்களை, உயிரை விட தயாராக இருக்கிற நபரால்தான் அழிக்க முடியும் என்கிற நிலைமை.

அந்த நடவடிக்கைக்கு ஆயத்தமாகிறது இந்திய அரசின் தேசிய புலனாய்வு முகமை என்ற என் ஐ ஏ அமைப்பு. அதன் உயரதிகாரி கண்களில் மாட்டுகிறான் வாழ்க்கையை வெறுத்து தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்து கொண்டிருக்கும் ரகு. அவர் ரகுவை வைத்து வில்லன்களை ஒழித்துக் கட்ட ஸ்கெட்ச் போடுகிறார். அதன் விளைவுகள், பலன்கள் என அடுத்தடுத்த காட்சிகளில் விறுவிறுப்பு பஞ்சமில்லை.

ரகுவாக சிவகார்த்திகேயன். யாராவது அடிபட்டு ரத்தம் சிந்திக் கிடந்தால் அவர்களை தன்னுடைய உறவினராக கருதி கண்கலங்குகிற, அவர்களைக் காப்பாற்ற எதை வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருக்கிற ஒருவித மனநல பாதிப்புக்கு ஆளானவர் (Delusional Disorder) என்ற அவரது கதாபாத்திரமே படு வித்தியாசம். அந்த வித்தியாசத்தை தனது நடிப்பில் மிக நேர்த்தியாக கொண்டு வந்திருக்கும் சிவகார்த்தி சண்டைக் காட்சிகளில் அணைக்க முடியாத காட்டுத் தீயாகியிருக்கிறார். அப்பாவித்தனமான உடல்மொழியால் கலகலப்பூட்டி, வெறியேறிய அனிமலாக அவதாரமெடுக்கும்போது அதற்குத் தேவையான முரட்டுத்தனத்தை முடுக்கி விட்டிருக்கிற அவர் வில்லன்களுடன் மோதுகிறபோது தியேட்டர்களில் ரசிகர்களின் விசில் சத்தம் ஹை டெஸிபலில் கேட்கிறது.

பல படங்களில் ஹீரோயினுக்கு வழங்கப்படுகிற ஹீரோவை காதலிக்கிற அதே வழக்கமான வேலைதான் என்றாலும், அந்த காதல் காட்சிகள் ஆழமானதாக அர்த்தமுள்ளதாக அமைக்கப்பட்டிருக்க உணர்வுபூர்வமான நடிப்பைத் தந்து தனது கதாபாத்திரத்துக்கு உயிரூட்டியிருக்கிறார் ருக்மிணி வசந்த்.

சூழவிருக்கும் பேராபத்திலிருந்து தமிழகத்தைக் காப்பாற்ற போராடும் நடவடிக்கைகளில் காட்டும் இறுக்கமான முகமும், அந்த போராட்டத்தில் சொந்த மகனை பறிகொடுக்கும்போது எட்டிப் பார்க்கும் எமோஷனுமாய் என் ஐ ஏ தலைமை அதிகாரியாக வருகிற பிஜு மேனன் தந்திருப்பது தேர்ந்த நடிப்பு.

பஞ்ச் டயலாக்கெல்லாம் பேசிக் கொண்டு கொடூரமான வில்லனாக வித்யூத் ஜம்வால் ஆடியிருக்கும் ஆட்டம் பல நூறு சூறாவளி சுழற்சிக்கு சமம். வித்யூத்தின் வெறித்தனம் ஸ்டைலிஷாக இருக்க அவருக்கு துணையாக வருகிற மற்றொரு வில்லன் சபீர் கல்லரக்கலின் பெர்பாமென்ஸில் இருக்கிறது ராவான ரத்தக்களறி.

விமலா ராமன், விக்ராந்த், ரிஷி ரித்விக் என இன்னபிற நடிகர் நடிகைகள் அத்தனை பேரும் கதையில் கலந்து பயணிக்கிறார்கள்.

சண்டைப் பயிற்சியாளர்கள் கெவின் குமாரரும் திலீப் சுப்புராயனும் மிரட்டலான ஆக்சன் காட்சிகளை கட்டமைக்க, அதற்கு அனிருத்தின் பின்னணி இசை பலம் சேர்த்திருக்கிறது. ‘சலம்பல’ பாடலுக்கு எழுந்து ஆடலாம்; ‘தங்கப்பூவே’ பாடலை ரசிக்கலாம்.

காட்டுக்குள் டார்க் ரூம், துப்பாக்கிகள் பதுக்கப்பட்டிருக்கும் கேஸ் ஃபேக்டரி, கண்டெய்னர்கள் நிரம்பியிருக்கும் ஹார்பர் என கதையோட்டத்தின் கனமான ஏரியாக்களை நேர்த்தியான ஒளிப்பதிவால் பிரமாண்டமாக்கியிருக்கிறார் சுதீப் எலமன்.

கதையிலிருக்கிற சமூக அக்கறை , எரிமலையாய் பொங்குகிற ஹீரோயிஸம் என வழக்கமான பாணியில் படத்தை இயக்கியிருக்கிற ஏ ஆர் முருகதாஸ் லாஜிக் மீறல்கள், ஓட்டைகள் பற்றியெல்லாம் கவலைப் படாமல் விமர்சகர்களின் கேலி கிண்டலுக்கு இடமளித்திருக்கிறார்.

குறைகளைத் தாண்டி மாஸ் ஆக்சன் மசாலாவாக, தியேட்டரிகல் எக்ஸ்பீரியன்ஸ் தந்து மேக்கிங்கால் தரம் உயர்கிறது மதராஸி!

-சு.கணேஷ்குமார்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்