கலகலப்பான காட்சிகளும் கண் கலங்க வைக்கும் சம்பவங்களும் கலந்து கட்டிய ‘காந்தி கண்ணாடி.’
இளைஞன் கதிர் எளிமையான ஈவன்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனம் நடத்தி வருகிறார். அவரிடம், வாட்ச்மேன் வேலை செய்கிற பெரியவர் ஒருவர் தனது 60-ம் கல்யாணத்தை நடத்தி வைக்கும் பொறுப்பை ஒப்படைக்கிறார். பெரியவர் சொல்கிற விதத்தில் பிரமாண்டமாக அந்த கல்யாணத்தை நடத்த 50 லட்சத்துக்கும் அதிகமாகும் என்கிறார் பாலா. பெரியவரிடம் ஒன்றிரண்டு லட்சங்கள் கூட இல்லாத நிலையில் கேட்கிற பணத்தை தருகிறேன் என்கிறார்.
சாதாரண வாட்ச்மேன் வேலையில் இருக்கிற, மகன் மகள் என வாரிசுகள் இல்லாத அந்த பெரியவர் அத்தனை லட்சத்தை புரட்டுகிற முயற்சியும் அந்த முயற்சி அவரை புரட்டியெடுப்பதுமாக கடந்தோடுகின்றன அடுத்தடுத்த காட்சிகள். கல்யாணம் நடந்ததா இல்லையா என்பது கிளைமாக்ஸ்… இயக்கம் ஷெரிஃப்
கதிராக பாலா. விஜய் டிவியிலிருந்து பெரியதிரைக்கு மற்றுமொரு நல்வரவு. உதவுகிற குணத்தோடும், பணத்துக்காக கொஞ்சம் அப்படியும் இப்படியும் நடந்து கொள்வதில் தவறில்லை என்ற மனதோடும் இருக்கிற கதாபாத்திரத்துக்கு அலட்டலில்லாத உடல்மொழியால் உயிரூட்டியிருக்கிறார். சந்தானம் ஸ்டைல் அலம்பல் சலம்பல் வசனங்களால் கலகலப்பூட்டவும் செய்கிறார்.
கதைநாயகனை காதலிக்கும் வழக்கமான கதாநாயகிதான் என்றாலும் உணர்வுபூர்வமாக நடிப்பதற்கும் வாய்ப்பிருக்கிறது நமீதா கிருஷ்ணமூர்த்திக்கு. அந்த வாய்ப்பை சரியான பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.
கதையின் நாயகன் காந்தி மகானாக பாலாஜி சக்திவேல். கல்யாணம் செய்துகொண்ட போது நிறைவேற்ற முடியாத மனைவியின் விருப்பங்களை 60-ம் கல்யாணத்தில் நிறைவேற்ற நினைப்பது, அதற்காக பூர்வீக சொத்தை தேடிப்போய் அதிலிருக்கும் வில்லங்கங்களை சமாளித்து ஒரு கோடி ரூபாயை பெறுவது, அப்படி வந்த பணம் பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் செல்லாக் காசாகிப் போனதும் மனம் உடைவது, காலங்காலமாக தயிர் சாதமும் சாம்பார் சாதமும் கட்டிக் கொடுக்கும் மனைவியை அந்த கைப்பக்குவத்திற்காக தினமும் பாராட்டுவது என வெள்ளந்திச் சிரிப்பும் வெகுளிப் பேச்சுமாக தனது மிகை நடிப்பால் படத்தை தாங்கிப் பிடித்திருக்கிறார்.
தினமும் வேலைக்குப் போகும் கணவருக்கு தினமும் திருஷ்டி சுற்றிப் போடுவதிலிருந்து அன்பின் உச்சத்தைக் காட்டுகிற மனைவியாக சந்தோஷம், உற்சாகம், கவலை, ஏக்கம், துக்கம், அழுகை என அத்தனை உணர்வுகளையும் மிகச்சரியாக தன் நடிப்பில் கொண்டு வந்திருக்கிறார் ஊர்வசி அர்ச்சனா.
இரவுநேரக் காட்சிகளில் ஒளிப்பதிவாளர் பாலாஜி கே.ராஜாவின் துல்லியம் தெரிகிறது.
விவேக் – மெர்வின் கூட்டணியின் இசையில் ‘வண்டி வண்டி புல்லட்டு வண்டி’ பாடல் உற்சாகமூட்ட, ‘திமிருக்காரி’ பாடல் இதம் தந்து கடக்கிறது. பின்னணி இசை காட்சிகள் கடத்த நினைக்கும் உணர்வுகளுக்கு துணை நிற்கிறது.
மனைவி தன் மீது காட்டும் பிரியத்துக்கு அதே பிரியத்தை பிரமாண்டமாக காட்ட நினைக்கும் கதைநாயகன் காந்தி மகான், வாழ்க்கைக்கு பணம்தான் முக்கியம் என்ற எண்ணத்தை மனதில் வைத்துக்கொண்டு பணத்துக்காக சின்னச் சின்ன தப்புகளைச் செய்வதில் தவறில்லை என்ற முடிவில் இறங்கும் கதிர். அந்த இருவருக்குமான தொடர்பு, அந்த தொடர்பு தருகிற நெருக்கம், அதன் மூலம் ஒருவருக்கொருவர் பெறுகிற பலன்கள் என ஓடி முடிகிற கதையின் சில பகுதிகள் சலிப்பூட்டினாலும், நிறைவில் கதிருக்கு காந்தி மகான் மூலம் உணர்த்தப்படுகிற கருத்து ஒட்டுமொத்த சமூகத்துக்குமான அறிவுரை!
கருத்துள்ள படம்தான்; கலகலப்பு ஒட்டிக் கொண்டிருக்கிற ரசிக்கத்தக்க படைப்புதான்; மறுப்பதற்கில்லை. காட்சிகள் நாடகத்தனமாக கடந்துபோவதை கவனித்து மெருகேற்றியிருந்தால் காந்தி கண்ணாடி சிறந்த படங்களின் வரிசையில் முன்னாடி இடம்பிடித்திருக்கும்!
-சு.கணேஷ்குமார்

