Home விமர்சனம் குமார சம்பவம் சினிமா விமர்சனம்

குமார சம்பவம் சினிமா விமர்சனம்

கிரேஸி மோகனின் திரைக்கதை வசன பங்களிப்பில் உருவான படங்களைப் போல், அதிரிபுதிரி சம்பவங்களால் சிரிப்புக்கு கேரண்டி தருகிற ‘குமார சம்பவம்.’

ஒரு பெரிய வீடு; அதில் குடியிருக்கிற வரதராஜன் நடுத்தர வயதுக்காரர்; சமூக அக்கறை கொண்டவர். தவறான பொருளை எந்த நிறுவனமாவது விற்பது தெரியவந்தால், பொதுமக்களுக்கு கிடைக்க வேண்டிய வசதிகள் சரிவர கிடைக்காதது கவனத்துக்கு வந்தால் கொதிப்படைவார். சம்பந்தப்பட்டவர்கள் மீது  பொதுநல வழக்கு போட்டு கோர்ட்டுக்கு இழுப்பார். பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைத்துவிடும்.

அவர் யாரை எதிர்க்கிறாரோ, கோர்ட்டுக்கு இழுக்கிறாரோ அந்த தரப்புக்கு அவர் எதிரியாகி விடுவார்; அவருக்கு பிரச்சனை உருவாகும். அதையெல்லாம் சமாளித்துக் கொண்டு, தன்னை மாற்றிக் கொள்ளாமல் துணிச்சலாக வழக்கு போடுவதும், பொதுப் பிரச்சனைகளில் பொது மக்களைத் திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவதுமாக நாட்களை நகர்த்திக் கொண்டிருக்கிறார். திடீரென ஒரு நாள் அவர் மர்மமான முறையில் இறந்துபோகிறார். அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகப்படும் போலீஸ் இன்ஸ்பெக்டர் அவர் குடியிருக்கும் வீட்டு உரிமையாளரின் பேரன் குமரனை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வருகிறார்.

கதை இப்படி கிரைம் திரில்லர் போல் ஃபர்ஸ்ட் கியர் போட, குமரன் வரதராஜன் பொதுநல வழக்கு போட்டு கோர்ட்டுக்கு இழுத்ததில் பாதிக்கப்பட்ட யாரோ ஒருவர் அவரை கொலை செய்திருக்கலாம் என நினைத்து அவர்களையெல்லாம்  கண்காணிக்க ஸ்கெட்ச் போடுகிறான்.

கதை இப்படி அடுத்தடுத்த கியர் போட்டு வேகமெடுக்க, வரதனை யாராவது கொலை செய்தார்களா? தற்கொலை செய்து கொண்டாரா? இயற்கை மரணமா? என்பதை விளக்கி நிறைவடைகிறது படத்தின் திரைக்கதை.

கதையை சொல்லும்போது, படு சீரியஸாக இருக்கும் போலிருக்கிறதே என்று தோன்றலாம். உண்மையும் அதுதான். இடைவேளை வரை போலீஸ் விசாரணை அது இதுவென அப்படித்தான் கடந்தோடுகிறது.

இடைவேளைக்குப் பின் கிட்டத்தட்ட அத்தனை காட்சிகளும் உங்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும். ஆமாம் படத்தின் இரண்டாம் பாதியில் அப்படியொரு வித்தியாசம் காட்டியிருக்கிறார் இயக்குநர் பாலாஜி வேணுகோபால்

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடர் மூலம் பிரபலமான குமரன் தங்கராஜன் ஹீரோவாக அறிமுகமாகியிருக்கும் படம் இது. தன் மீதான போலீஸ் விசாரணையை தெனாவட்டாக எதிர்கொள்வது, கொலையாளி யாராக இருக்கும் என கண்டறிய தொழில்நுட்ப உபகரணங்களுடன் களமிறங்குவது, அவரால் துப்பு துலக்க அனுப்பப்பட்ட நபர் எடாகூடமாக நடந்துகொள்ள அதனால் வரும் அவஸ்தைகளை அனுபவிப்பது, அதற்கிடையில் காதலியுடன் குதூகலம், காதலியிடமிருந்து பிரிவது, சினிமா இயக்கும் வாய்ப்புக்காக தயாரிப்பாளரைத் தேடி யாரும் அமையாத சூழலில் தனக்கு உரிமையுள்ள சொத்தை விற்க முடிவெடுப்பது என நீள்கிற காட்சிகளில் அவர் தந்திருக்கும் நடிப்பு அளவாக அலட்டிக் கொள்ளாததாக இருக்கிறது.

எந்த நேரமும் சமூக அக்கறையுடன் செயலாற்றுவது, அதனால் சூழ்கிற பிரச்சனைகளை தைரியத்துடன் எதிர்கொள்வது, தாராளமாக பணம் கிடைத்தும் அதையெல்லாம் தவிர்த்து எளிமையாக வாழ்வது, தனக்கு கிடைத்த பெரும் பணத்திற்கு பொறுப்பாளராக சரியான நபரை நியமிப்பது என இயல்பான நடிப்பால் கவர்கிறார் இளங்கோ குமரவேல்.

சினிமாவில் நடிப்பதற்காக வாய்ப்பு தேடிக் கொண்டிருக்கிற நபராக வருகிற வினோத் சாகர்; கதைநாயகன் குமரனால் போலி சிபிஐ ஆஃபீசராக களமிறக்கப்பட அவர் நடந்து கொள்ளும் விதத்தில் தியேட்டர் சிரிப்பலையால் அதிர்வது உறுதி. மனிதர் அப்படியொரு பாடி லாங்வேஜில் அசத்துகிறார். அவரது கெட்டப்களும் கலக்கலான இருக்கின்றன.

நாயகனின் நண்பனாக வருகிற பாலசரவணன் லேண்ட் புரோக்கராக வருகிறார்; அவரது டைமிங் காமெடி சரியான சந்தர்ப்பங்களில் லேண்டிங் ஆகியிருக்கிறது.

இன்ஸ்பெக்டராக வருகிற சிவா அரவிந்த் ‘பின் விளைவு’களால் அவஸ்தைப் படுவதையெல்லாம் நகைச்சுவையாக எடுத்துக் கொள்ள முடியவில்லை.

ஜி எம் குமார், லிவிங்ஸ்டன், வினோத் முன்னா, அர்ஜய், சார்லஸ் வினோத், கோபால், விஜய் ஜாஸ்பர், கெளதம் சுந்தராஜன், ஷ்ரவன் ராமகிருஷ்ணன், சிறுவன் யாஷ்வன் ரமேஷ் என இன்னபிறர் அவரவர் வேலையை சரியாக செய்திருக்க, அச்சு ராஜாமணியின் சுவாரஸ்யமான பின்னணி இசை நகரும் காட்சிகளின் தன்மைக்கு பொருந்தியிருக்கிறது.

‘சட்டத்துக்கு சாட்சிதான் முக்கியம்; உண்மை இல்ல’, ‘பாதிக்கப்பட்டவன் சிந்திச்சா புரட்சி, யாருமே பாதிக்கப்படக் கூடாதுன்னு சிந்திச்சா வளர்ச்சி’ என ஆங்காங்கே வசனங்கள் நறுக் சுறுக்’கென தெறிக்கின்றன.

ஜெகதீஷ் சுந்தரமூர்த்தியின் ஒளிப்பதிவு நேர்த்தி.

ஒரு மரணம், அது நடந்த விதம் பற்றிய விசாரணை என கடந்தோடும் படத்தின் முதல் பாதி சற்றே பொறுமையைச் சோதித்தாலும் பின் பாதியை காமெடி களேபரமாய் மாற்றமெடுத்து குமார சம்பவத்தை குதூகல அனுபவமாக்கியிருக்கிறது.

-சு.கணேஷ்குமார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்